70-ஆண்டு-சுதந்திரம்-மு-திலிப்

முதல் பத்து சதவீதம் வருமானம் உடையவர்களின் சொத்து பெருகிக்கொண்டே போகிறது. உடல் உழைப்பாளிகள், மன உழைப்பு செலுத்துவோரின் வருமானம் அதிகமாகிறது. ஆனால் மன உழைப்பு செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவு.

முதல் பத்து சதவீதம் வருமானம் உடையவர்களின் சொத்து பெருகிக்கொண்டே போகிறது. உடல் உழைப்பாளிகள், மன உழைப்பு செலுத்துவோரின் வருமானம் அதிகமாகிறது. ஆனால் மன உழைப்பு செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவு.

முதல் பிரதமர் நேரு முதல் இன்றைய பிரதமர் மோடிவரை புதுப்புது பொருளாதாரக் கொள்கை முழக்கங்களை அறிமுகப்படுத்தி, அவரவர் பங்குக்கு நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றனர். எழுபது ஆண்டு ‘சுதந்திர இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதில் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அக்கறைப்படவேண்டும்

” பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற முதல் பத்தாண்டு காலகட்டத்தில், பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. குறிப்பாக, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, துறைசார்ந்த கவனம் கேப்பிட்டல் குட் எனப்படும் இயந்திரங்களை உற்பத்திசெய்யும் இயந்திரங்களுக்கு- அதாவது ஒரு துறையைத் தூண்டினால் மற்ற துறைகள் வளரக்கூடிய வகையினங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. உதாரணத்துக்கு கடைசல் (லேத்) இயந்திரங்களை உருவாக்கினால் எல்லா துறைகளிலும் உற்பத்தித் திறன் பெருகப் பயன்படக்கூடியதாக இருந்தது.

70 ஆண்டு பொருளாதாரம்

தொழில் உற்பத்தித் துறையில், சில வர்த்தகக் குழுமங்கள் மட்டுமே தொழில்செய்யும் உரிமத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தின. சமுதாயத்தின் தேவை அதிகமாக இருந்தபோதும், தேவைக்கும் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் விலை அதிகமாக நிர்ணயித்து, நிறைய லாபம் ஈட்டின. இவ்வாறு ஏகபோகமாக அந்தக் குழுமங்களே தொழில்துறையில் கோலோச்சின. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசு இருந்தது.

அதே சமயம், பாசனத் துறையில் நிறைய முதலீடுகள் செய்யப்பட்டன. அதன்படி விவசாயம் வளர்ந்திருந்தால் உணவுப் பொருள் உற்பத்தி அதிகமாகி இருக்கவேண்டும். ஆனால் உற்பத்தி போதுமானதாக இல்லை. அதாவது வளர்ச்சியும் இருந்தது; தேக்கமும் இருந்தது. எதிர்பார்த்த அளவு கிராமப்புறங்களில் வறுமை குறையவில்லை; நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு பெருகவில்லை.

விவசாயத் துறையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக பசுமைப்புரட்சி கொண்டுவரப்பட்டது. உணவு உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்காக எனும் பெயரில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பல திட்டங்களுக்கு அரசு மானியம் வழங்கியது. உணவு உற்பத்தியும் கணிசமாகப் பெருகியது. இது நடந்தது, எண்பதுகளின் மத்திவரைக்கும்!

ஆனால் இதே முன்னேற்றம் தொழில்துறையில் ஏற்படவில்லை. எண்பதுகளின் கடைசி ஆண்டுகளில் தொழில்துறையை முன்னேற்ற தாராளமயப்படுத்தவேண்டும் என்ற குரல் ஆங்காங்கே எழுந்தது. விவசாயத் துறையில் ஏற்பட்ட ஓரளவு முன்னேற்றம்கூட, மானியம் தந்ததால்தான் சாதிக்கப்பட்டது என்று கருதப்பட்டது. பசுமைப்புரட்சியால் அதிகரித்த உற்பத்தித் திறன் பெருக்கமும் குறைந்தது.

அதைத் தொடர்ந்து, சந்தைசார்ந்த போட்டி உற்பத்தி முறைதான் சிறந்த வழியாக இருக்கும் என்ற தாராளமயப் பொருளாதாரக் கொள்கை வந்தது. தொழில்துறையில் பெரும் தளர்வு ஏற்பட்டது. குறிப்பிட்ட வர்த்தகக் குழுமங்களுக்கு மட்டும்தான் தொழில் உரிமம் என்ற சூழல் மாறியது. உச்சகட்டமாக, ஏற்றுமதி- இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டன. அதற்கு முன்பு, இறக்குமதிக்கு ஒரு வரைமுறை இருந்தது. தாராளமயமாக்கலுக்குப் பின்னர் வரி செலுத்தினால் எவ்வளவும் இறக்குமதி செய்யலாம் என மாற்றப்பட்டது. அதே சமயம் இந்தத் தளர்வுக்குப் பின்னர் உலக சந்தையில் போட்டிபோடவேண்டிய கட்டாயம் இந்திய தொழில்துறைக்கு ஏற்பட்டது.

விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மானியத்தை உடனே குறைக்கவேண்டும் எனவும் தாராளமயவாதிகள் வலியுறுத்தினர். ஆனால் மக்களின் எதிர்ப்பால் உடனே அதைச் செயல்படுத்தமுடியவில்லை. (படிப்படியாக அதைச் செயல்படுத்தி வருகின்றனர்).

விவசாயத் துறையில் பல உற்பத்திப் பொருட்களின் விலையானது, பெரும்பாலும் உலக சந்தையைச் சார்ந்தே தீர்மானிக்கப்பட்டது. உலகச் சந்தைகளில் தொடர்ச்சியாக பொருட்களின் விலைக்குறைப்பு நடந்தது. அப்போது இந்திய சந்தையிலும் விலைக்குறைப்பு செய்தாகவேண்டிய நிலை ஏற்பட்டது. 2004ஆம் ஆண்டுவரை விவசாயப் பொருட்களின் விலைச்சரிவு தொடர்ந்தது. அத்துடன் உற்பத்திச்செலவு அதிகரித்தது.

பசுமைப்புரட்சியின் முக்கியமான தேவையாக நிலத்தடி நீர் மாறிப்போனது. அதிக ஆழத்துக்கு ஆழ்குழாய் அமைக்கும்போது அதிக செலவு ஏற்பட்டது. நீர்வளத்துக்கு ஏற்ப புதுப்புது விதைகள் பயன்படுத்தப்பட்டன. மகசூல் கிடைத்தது. ஆனால் பசுமைப்புரட்சியின் விளைவாக மண்ணைக் கட்டுப்படுத்த முயன்று மலடானதுதான் மிச்சம். நிலம் மலடானதால் உரத்தைப் பயன்படுத்தவேண்டிய நிலை உண்டானது. புதிய வகை நோய்களைத் தீர்க்க பூச்சிமருந்துகளையும் பயன்படுத்தவேண்டியதாயிற்று. ஒரு பக்கம் உரம், பூச்சிமருந்துக்கு மானியம் குறைக்கப்பட்டதும் இன்னொரு பக்கம் அவற்றை முன்னைவிடக் கூடுதலாகப் பயன்படுத்துவதுமாக விவசாயத்துக்கான செலவு அதிகரித்தது. இதனால் விவசாய விளைபொருட்களின் விலை அதிகரித்திருக்கவேண்டும். பெரும்பாலான விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

சில விவசாயப் பொருட்களின் விலை ஓரளவு அதிகரித்திருக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு உரிய வருமானம் கிடைக்கவில்லை. விவசாயத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு, 2000 முதல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை தோன்றியது.

பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால், 2000-ம் ஆண்டு முதல் வேகமான வளர்ச்சி இருக்கிறது; ஆனால் கட்டுமானம், சேவைத்துறைதான் வளர்ந்துள்ளது. வளர்ச்சிவீதம் 9% வரைகூடப் போயிருக்கிறது. இது மக்களுக்கான வளர்ச்சியாக இருக்கிறதா? இதில் மூன்று சிக்கல்கள் இருக்கின்றன; அவற்றைச் சரிசெய்யவேண்டும்.

விவசாயத் துறையில் நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலை அழிக்காமல் வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டும். இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இதைப் பற்றிய பார்வை போதுமானதாக இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருதாமல் இருப்பதும் சிக்கல். நீரை இல்லாமல் ஆக்கி, காற்றையும் கெடுத்து, நிலத்தையும் மலடாக்கி பொருளாதார வளர்ச்சி யாருக்காக என்பது முக்கியமானது. கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் சூழலைக் காத்து தொழில் உற்பத்தி எனும் பார்வை அதிகரித்துள்ளது. இதற்கான கொள்கை உருவாக்கப்படவேண்டும்.

உற்பத்தித் திறன் மேம்பட்டால் பொருளாதார மாற்றம் வந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் நிறைய பேர் படித்துமுடித்து வந்தபோதும் மாற்றமில்லை. முக்கிய காரணம், இயந்திரமயமாக்கல் எல்லா இடங்களிலும் நடந்தது. ஆனால்,திறன்படைத்த எல்லாரும் உற்பத்தியில் உள்வாங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது.

புதிய தாராளமயக் கொள்கையை முதலில் நடைமுறைப்படுத்தும்போது, குறிப்பிட்ட காலம்வரை சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்; போகப்போக இது சரியாகிவிடும் என்று தாராளமயப் பொருளாதாரவாதிகள் கூறினார்கள். ஆனால் நடப்பில் இது எங்கும் தென்படவில்லை.

முதல் பத்து சதவீதம் வருமானம் உடையவர்களின் சொத்து பெருகிக்கொண்டே போகிறது. உடல் உழைப்பாளிகள், மன உழைப்பு செலுத்துவோரின் வருமானம் அதிகமாகிறது. ஆனால் மன உழைப்பு செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவு.

இந்தியாவில் 1973-74 க்கும் 91-92 ஆண்டுக்கும் இடையில் இருபது ஆண்டுகால இடைவெளியில் ஏற்பட்ட மாறுபாட்டை கவனிப்போம். 100 சதவீத உற்பத்தியில் பணியாளர்களின் வருமானம் 41 சதவீதம், நிறுவங்களுக்கான பங்கு (லாபம்) – 16%. 1992-93 ஆம் ஆண்டில் 24.7 சதவீதமாக இருந்த லாபமானது, 2013-14-ல் 35.5% ஆக அதிகரித்துள்ளது.

அதில் உடல் உழைப்பாளிகளுக்கான பங்கு 26% -லிருந்து 13.3% ஆக, ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது. இதே சமயம், மன உழைப்பாளிகளுக்கான பங்கு 8.3%-லிருந்து சிறிதளவே 6.4% ஆகக் குறைந்தது.

இந்நிலையில், இன்னும் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தவேண்டும் எனக் கூறுகிறார்கள். அப்படி நடந்தால் இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் மோசமாகும். இதைச் சரிசெய்வதற்கான கொள்கை உருவாக்கப்படவேண்டும்.

உலக அளவில் நாடு வளர்ந்துவருகிறது என்பது சரிதான். வளர்ச்சியானது 9 சதவீதமோ 20 சதவீதமோ இருக்கலாம். அதனால் என்ன பயன்?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>