5 ஆண்டில் 227 சதவீதம் பாலியல் பலாத்காரங்கள் டெல்லியில் அதிகரிப்பு: மு.திலிப்

201702221310113126_24-year-old-woman-offered-lift-raped-on-her-way-back-from_SECVPF

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில், தலைநகர் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளதாக டெல்லி போலீஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நிர்பயா என்ற 23 வயது மருத்துவ மாணவி, கும்பலால் பலாத்காரம் செய்து, ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார். இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு பின் நாட்டில் பலாத்கார குற்ற வழக்குகளின் பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் கடந்த 2011ம் ஆண்டு 572 பலாத்கார புகார் பதியப்பட்டிருந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக (2,155) அதிகரித்துள்ளது. நிர்பயா தாக்குதல் நடந்த 2012ம் ஆண்டு பலாத்கார குற்றச்சம்பவங்கள் 132 சதவீதம் அதிகரித்திருந்தது. அதன்பின் ஆண்டுதோறும் அதன் எண்ணிக்கை 32 சதவீதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு இந்த வகை குற்ற வழக்கின் எண்ணிக்கை 1,636 ஆக இருந்தது. பின் அது படிப்படியாக உயர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு 2,155ஐ எட்டியது. இந்த ஆண்டு முதல் 5 மாதத்தில் மட்டுமே 836 புகார்கள் பதியப்பட்டுள்ளன.

பெண்ணை மானபங்கம் செய்யும் திட்டத்துடன், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த ஆண்டு 4,165 வழக்குகள் பதிவாகின. இது கடந்த 2012ம் ஆண்டில் இருந்த 727 எண்ணிக்கையை காட்டிலும் 473 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூன் மாதத்தில் 48 மணி நேரத்துக்குள் 5 பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த குற்றச்சம்பவங்கள் பற்றிய விவரம், தலைநகரில் பெண்களுக்கெதிரான செயல்கள் அதிகரித்து வருகிறது என்பதை தெரிவிக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை விருப்பத்துடன் தெரிவிக்கின்றனர் என்பதையும், போலீசாரின் துரித நடவடிக்கையையும் வெளிகாட்டுகிறது. இதற்கு காரணம் மத்திய அரசின் அறிவுரை மற்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறும் காவலர்களுக்கு கடும் தண்டனை என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தே ஆகும். டெல்லியைச் சேர்ந்த தன்னார்வலரும் வழக்கறிஞருமான ஆனந்த் குமார் அஸ்தானா கூறுகையில், ‘பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க கடுமையான சட்டம் (2012) கொண்டு வரப்பட்டுள்ளதால், பலாத்கார குற்றப் புகார்கள் அதிகளவில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, குற்றவியல் சட்டத் திருத்தத்தில் (நிர்பயா சட்டம்) புதிதாக சேர்க்கப்பட்ட விதியில், பெண் போலீஸ் அதிகாரிகள் முன்பதிவு செய்யப்படும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலருக்கே தண்டனை: நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்களிடம் குறைந்துள்ளதால், வழக்குகள் வாபஸ் பெறுவது 2014ஐ(81) விட 2015ம்(104) ஆண்டு அதிகரித்துள்ளது. அதேபோல் குற்றப்புகார்கள் கூறப்படும் நபர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பதில்லை. இதற்கு காரணம் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுகின்றன. இது மற்ற பாலியல் குற்ற புகார்கள் அனைத்தும் பொய்யென சித்தரிப்பதோடு, பொய்யான குற்றச்சாட்டுகள் என்ற தவறான எண்ணத்தை உருவாக்குகிறது. எனினும் குற்றச்சம்பவங்களை நிரூபிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தாததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் திறமையாக வாதாடாததுமே இதற்கு காரணம்’ என்று தெரிவித்தார். ‘என்னதான் இவ்விவகாரத்தில் பொது விழிப்புணர்வு, மீடியா மூலம் பாலியல் புகார் வழக்குகள் வௌிகொணரப்பட்டு அதன் எண்ணிக்கை அதிகரித்தாலும், இன்னும் வெளிச்சத்துக்கு வராத புகார்கள் அதிகளவில் உள்ளன’ என்று மும்பையைச் சார்ந்த எஸ்என்இஎச்ஏ(ஊட்டசத்து, கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கை சங்கம்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி பின்டோ தனது கருத்தை தெரிவித்தார்.

நிர்பயா நிதியின் கீழ் பெண்களுக்கு சேவை செய்வதாக கூறுவது வெறும் வாய்ஜாலம் தான். தேசிய அளவிலான கொள்கையை அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் முயற்சிகளை எடுங்கள் என கடந்த மே 26,2016 தீர்ப்பின் போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2013ம் ஆண்டு மத்திய நிதிஅமைச்சகம், பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 1000 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது மேலும் 3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் கடந்த ஏப்.3ம் தேதி தெரிவித்தது. பெண்களுக்கென பரிந்துரைக்கப்பட்ட 16 திட்டங்களில், 2047.85 மதிப்பிலான 15 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

3 திட்டங்கள் பலன் தருமா?
* ஒன்ஸ்டாப் மையம்- வன்கொடுமைக்கு ஆளான பெண் களுக்கென 84 மையங்கள் பயன்பாட்டில் உள்ளது.
* பெண்களுக்கென சர்வதேச உதவி எண்- 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
* மகிளா போலீஸ் தன்னார்வலர் – கண்காணிப்பு பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது பற்றிய ஆய்வு செய்தால் தான் உண்மை தெரியும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>