2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு

201712051149338909_2G-court-to-deliver-verdict-on-scam-on-December-21_SECVPF
புதுடெல்லி,

மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு கள் எழுந்தன.

மத்திய கணக்கு தணிக்கை துறை நடத்திய ஆய்வில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஊழல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் மிகப்பெரிய ஊழலாக பேசப்பட்டது.

இதையடுத்து 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டது. அதன்பேரில் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி சி.பி.ஐ. அதி காரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

அப்போது தொலைபேசி உரையாடல்கள் மூலம் இந்த ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய தொலை தொடர்பு மந்திரியாக இருந்த ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட பலர் கடந்த 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

டெல்லி திகார் ஜெயிலில் அவர்கள் அடைக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு பிறகு ராசாவும், கனிமொழியும் சொந்த ஜாமீனில் விடுதலை ஆனார்கள். அவர்களை தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான மற்றவர்களும் விடுதலை பெற்றனர். இந்த நிலையில் இந்த ஊழல் வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஓ.பி.சைனி விசாரணை நடத்தினார்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணை நடந்தது. பல்வேறு தரப்பினரும் சாட்சிகளாக அழைத்து விசாரிக்கப்பட்ட னர். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைகள் நடந்தன. கடந்த ஜூன் மாதம் விசாரணை அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டன.
எனவே ஜூலை மாதமே இந்த வழக்கில் தீர்ப்பு வந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு எழுதுவதற்கு நீதிபதி ஓ.பி.சைனி சற்று அவகாசம் எடுத்துக் கொண்டதால் தீர்ப்பு அறிவிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது.

முதலில் ஆகஸ்டு 25ந்தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. பிறகு ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 20ந்தேதி தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தீர்ப்பு தேதி டிசம்பர் 5-ந்தேதி வெளியிடப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். அதன்படி இன்று 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அவர்கள் முன்னிலையில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 21-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>