ஸ்டாலினை தடுப்பது சட்ட பிரச்சனையா? கௌரவ பிரச்சனையா? தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி

Tamil_News_77793085576

எடப்பாடி தொகுதிக்குள் உள்ள குளத்தை ஆய்வு செய்ய விடாமல் ஸ்டாலினை தடுப்பது சட்ட பிரச்சனையா? கௌரவ பிரச்சனையா? தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில் உள்ள கச்சராபாளையம் ஏரியை திமுகவினர் தூர்வாரி உள்ளனர். அந்த குளத்தை ஆய்வு செய்ய சென்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இது போல எதிர்காலத்தில் கச்சராபாளையம் போன்ற அனைத்து ஏரி குளங்களையும் ஸ்டாலின் ஆய்வு செய்வதை தடுக்க கூடாது என கோரி திமுக சட்டபிரிவு தரப்பில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை கூடுதல் வழக்குரைஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆஜராகி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட எதிர்கட்சி தலைவர் நீதிமன்றத்தை நாடவில்லை என்றும், எந்தவித முன் அறிவிப்புமின்றி நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் தொண்டர்களுடன் ஸ்டாலின் வந்ததால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படாமல் இருக்கவே அவர் தடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.தமிழகத்தில் பல்வேறு தொகுதியில் நூற்றுக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில்,முதலமைச்சர் தொகுதியில் உள்ள கச்சராபாளையம் ஏரியை பார்வையிடுவது அரசியல் உள்நோக்கம் உடையது.

இதற்கு நீதிபதி துரைசாமி, ஒரு நபர் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது,அவ்வாறு அனுமதி வாங்கிய பின் தான் ஒருவர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதாக இருந்தால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்க வேண்டும்.அவ்வாறு இருப்பின் கச்சராபாளயம் ஏரி தடை செய்யப்பட்ட பகுதியா என கேள்வி எழுப்பினார்.சம்பந்தப்பட்ட ஏரி பிரச்சனைக்குரிய பகுதி என்றால் அது சட்டரீதியிலான பிரச்சனை யா? இல்லை கௌரவ பிரச்சனையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், மக்களின் நலனுக்காக எதிர்கட்சி தலைவர் செயல்படுவதை தடுப்பது என்பது அவரையும் ஜனநாயகத்தையும் அவமானபடுத்துவதாகவும், வரும் 3 அல்லது 4-ம் தேதிகளில் மீண்டும் கச்சராபாளையம் ஏரியை பார்வையிட திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர்,எதிர்கட்சி தலைவரை அவமானப்படுத்தும் நோக்கில் அரசு செயல்படவில்லை என்றும் மனு குறித்து பதிலளிக்க இரண்டு நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து வரும் வியாழக்கிழமைக்குள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>