வெள்ள பாதிப்பு தடுப்புக்கு நடவடிக்கை என்ன? அரசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பாக தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் அந்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பாக தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் அந்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

சென்னை:: பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை ஒரு வாரத்தில் கூட்டி வெள்ளப் பாதிப்புகள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த பாதிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் தானாக முன் வந்து வழக்கை விசாரித்தது. அப்போது, தமிழக அரசு இதுபோன்ற வெள்ளச் சேதங்களின்போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆலோசனைக்குழுவை அமைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நீதிமன்றமே பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை அமைக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பேரிடர் மேலாண்மை தொடர்பாக தலைவர், இணைத் தலைவர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைத்து அரசு கடந்த 18ம் தேதி ஆணை பிறப்பித்துள்ளதாக கூறி அந்த ஆணையை சமர்ப்பித்தார். அதன்படி, வருவாய் நிர்வாகத்துறை முதன்மைச் செயலர் கே.சத்யபால் தலைவராகவும், வருவாய் துறைச் செயலர் பி.சந்திரமோகன் இணை தலைவராகவும், அண்ணா பல்கலைக்கழக பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை மைய பேராசிரியர் திருமலைவாசன், ஐஐடி சென்னை பேராசிரியர் தேவேந்திர ஜலிஹால், என்ஐடி பேராசிரியர் மோசஸ் சாந்தகுமார் உள்ளிட்ட 18 பேர் உறுப்பினர்களாகவும் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், சென்னை பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்த இடத்திலேயே புதிதாக கட்டுமானம் கட்டப்பட்டு வருவதாகக்கூறி புகைப்பட ஆதாரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், புதிதாக அமைக்கப்பட்ட பேரிடர் மேலாண்மைக்குழு ஒரு வாரத்தில் கூடி வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். முன்னதாக, நீர்நிலைகளை முறையாக தூர்வாராததுதான் சென்னை வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்றும், ஆகவே, நீர்நிலைகளை முறையாக தூர்வாரி உரிய முறையில் பராமரிக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பாக தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் அந்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் தலைமை நீதிபதி கூறினார். தூர்வாரும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமென்றும் அட்வகேட் ஜெனரல் நீதிபதிகளிடம் கோரினார். இதைக் கேட்ட நீதிபதிகள், தூர்வாரும் பணிகளை நீங்கள் முடிக்கும் வரை பருவமழை உங்களுக்காக காத்து இருக்காது என்று காட்டமாக கூறினார். மேலும், தூர்வாருவது தொடர்பான அறிக்கையை நவம்பர் 15ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.

* 2015 டிசம்பரில் பெய்த கனமழை காரணமாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் அளவுக்கு அதிகமான தண்ணீரை திறந்ததினாலும் ெசன்னை வெள்ளத்தில் மிதந்தது.

* சென்னை வெள்ளப்பெருக்கை தடுக்க ரூ.143 கோடி நிதி மேம்பாடு பணிகள் அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் நீர்நிலை ஆக்ரமிப்பு அகற்றுதல், கால்வாய் தூர்வாருதல் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

* சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 15 ஏரிகள் ஆக்ரமிப்பின் பிடியில் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* மடிப்பாக்கம், கீழக்கட்டளை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் 44 சதவீதம் ஆக்ரமிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* தற்போது மழை வெள்ள நீரை பள்ளிக்கரணை வழியாக பக்கிங்காம்கால்வாய் அல்லது வங்காள கடலில் சென்று கலக்கும் வகையில் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>