விவசாயியை பிணம் போல் படுக்க வைத்து பாடையில் தூக்கிச்சென்று போராட்டம்

2017-30-07-16-25-44

புதுடெல்லி: டெல்லியில் இன்று விவசாயியை பிணம் போல் பாடையில் படுக்க வைத்து, அவரை ஊர்வலமாக தூக்கிச்சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 16ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தினம் ஒரு நூதன போராட்டம் அரங்கேற்றி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் இமாசல பிரதேசத்தை சேர்ந்த டேவிட் பாண்டே, அரியானாவை சேர்ந்த அகர்வால், ராஜஸ்தானை சேர்ந்த கால்மார் ஆகியோர் நேற்று ஜந்தர் மந்தருக்கு வந்து விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் 50 கிறிஸ்தவ பாதிரியார்களும் விவசாயிகளை சந்தித்து ஆதரவளித்தனர்.

இந்நிலையில் இன்று 15வது நாள் போராட்டம் நடந்தது. காலை 10.30 மணியளவில் மனித மண்டை ஓடுகள், எலும்புகள், விஷ பாட்டில்கள் ஆகியவற்றுடன் விவசாயிகள் போராட்ட களத்துக்கு வந்தனர். திருச்சி உறையூரை சேர்ந்த பிரகாஷ் என்ற விவசாயியை பிணம் போல் அலங்கரித்து பாடையில் படுக்க வைத்தனர். பின்னர் அந்த பாடையை 1 கிமீ தூரத்துக்கு தூக்கிச்சென்று போராட்டம் நடத்தினர். இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், தமிழகத்தில் கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்து விட்டது. பயிர்களும் கருகி விட்டன. இதனால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. வங்கிகள் நெருக்கடி காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. எனவே வாழ்வதை தவிர சாவதே மேல் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதை உணர்த்தவே இன்று பாடை கட்டி போராட்டம் நடத்தினோம். நாளை வேளாண் பொருட்கள் விளை நிர்ணய ஆணையத்தின் தலைவரை சந்தித்து மனு அளிக்க போலீசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கொடுத்தால் மனு அளித்து விட்டு திரும்பி விடுவோம். இல்லாவிட்டால் நாடாளுமன்றம் முன் படுத்து, உருண்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>