விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி தமிழகத்தில் 25ம் தேதி முழு அடைப்பு

வருகிற 22ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்

வருகிற 22ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்

* திமுக தலைமையில் அனைத்து கட்சிகள் முடிவு
* மோடியை சந்தித்து பேசவும் ஒருமனதாக தீர்மானம்

சென்னை : விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிற 25ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் பவன்குமார், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ெபாது செயலாளர் ரவிக்குமார்.

திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், வடசென்னை மாவட்ட தலைவர் குமாரதேவன். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

* நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 34 நாட்களாக டெல்லியில் பாம்பு தின்னும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், முழு நிர்வாணப் போராட்டம், சேலை கட்டிய போராட்டம் என்று பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களை தொடர்ந்து தமிழக விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்று ஆதரவு தெரிவிதுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக விவசாயிகளை டெல்லி சென்று சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நாட்டின் தலைநகரில் இத்தனை நாட்களாக உயிரைப் பணயம் வைத்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பேசி அவர்களது பிரச்னைகளை விவாதித்துத் தீர்வு காணச் சிறிதும் ஆர்வம் காட்டாமல் இருப்பது குறித்து இக்கூட்டம் ஏமாற்றத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஆகவே டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் அனைத்துக் கட்சி தலைவர்களும் இணைந்து பிரதமரை சந்தித்து விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துக்கூறி உரிய தீர்வு காணத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளப்படும்.

* வறட்சி மற்றும் காவிரி நீர் கிடைக்காத கொடுமையின் காரணமாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிற 25ம் தேதி மாநிலம் தழுவிய “முழு அடைப்புப் போராட்டம்” நடத்தப்படும். அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களையும்-முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கான காரணங்களையும் மக்களுக்கு விளக்கிடும் வகையில், சென்னையில் வருகிற 22ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும். விவசாயிகளின் நலன் கருதி மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் தொழிற் சங்கங்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தந்து விவசாயிகளின் துயர் துடைக்க துணை நிற்க வேண்டும். உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* தமிழகத்தில் காவிரி நீர் கிடைக்கவில்லை; வறட்சி தாண்டவமாடுகிறது.
* நிவாரணம் கிடைக்கவில்லை; கடன்களும் தள்ளுபடி செய்யப்படவில்லை.
* டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடுகின்றனர்.
* பல கட்சி தலைவர்களும் ஆதரவு; முதல்வர் எடப்பாடி பார்க்கவே இல்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>