விவசாயக் கடன் தள்ளுபடி… நிரந்தரத் தீர்வு தருமா? மு.திலிப்

56p1

பொய்த்துப் போன பருவமழை, வேளாண் விளைபொருள் களுக்கான விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா முழுக்க உள்ள விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியைச் சந்திக்கும் விவசாயிகள், கருகிய பயிரைக் கண்டு வாடிப் போய் நிற்கின்றனர். வங்கிகளிடம் வாங்கிய கடன் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2014-ல் 5,650 விவசாயிகளும், 2015-ல் 8,007 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கடும் நெருக்கடியில் இருக்கும் விவசாயிகள், தாங்கள் வாங்கிய விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். உ.பி., மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் தீவிரமடைந்து வருகிறது. தமிழக அரசாங்கமும் ரூ.1,980 கோடிக்கு விவசாயக் கடனை ரத்து செய்துள்ளது.

இந்தியா முழுக்க விவசாயக் கடனானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2016 செப்டம்பர் மாதக் கணக்கின்படி, ரூ.12.60 லட்சம் கோடி கடனாகத் தரப்பட்டிருப்பதாக மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதில் ரூ.1.45 லட்சம் கோடி ஊரக வங்கிகள் மூலமாகவும், ரூ.1.57 லட்சம் கோடி கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும், ரூ.9.57 லட்சம் கோடி பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலமாகவும் தரப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, வணிக வங்கிகள் மூலம் தரப்பட்ட கடன் ரூ.86 ஆயிரம் கோடி (நிலுவைத் தொகை); கூட்டுறவு வங்கிகள் மூலம் தரப்பட்ட கடன் தொகை ரூ.9 ஆயிரம் கோடி ஆகும்.

இந்நிலையில், விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஏற்க மறுத்துவிட்டார். மாநில அரசாங்கங்கள் தங்கள் அதிகாரத்துக்குட்பட்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் அளிக்கப்பட்ட கடனை ரத்து செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பொதுத் துறை வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களையும் மத்திய அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. பொதுத் துறை வங்கிகள், தொழில் துறை நிறுவனங்களுக்குத் தந்த கடன் ஏற்கெனவே பல லட்சம் கோடி ரூபாய் வராமல் இருக்க, விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்தால், மிகப் பெரிய பொருளாதாரச் சுமை ஏற்படும் என்பதால், மத்திய அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

மத்திய அரசைப் போலவே, மத்திய ரிசர்வ் வங்கியும் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. ‘‘கடனைத் தள்ளுபடி செய்வது, வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட வேண்டும் என்கிற கலாசாரத்தைச் சீர்குலைப்பதாக இருக்கிறது. இதனால் அரசின் கடன் சுமை அதிகரித்து, அரசு வெளியிடும் பாண்டுகளின் வருமானம் குறைகிறது’’ என்று சொல்லியிருக்கிறார் ஜெட்லி.

கடன் தள்ளுபடி கோரிக்கையை மத்திய அரசு இவ்வளவு உறுதியாக நிராகரிக்கக் காரணம் என்ன, கடன் தள்ளுபடியால் விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடுமா என்கிற பல்வேறு கேள்விகளுடன் பொருளாதார நிபுணர்களையும், விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினோம்.

‘‘விவசாயம் என்பது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவேண்டிய பொறுப்பு மத்திய – மாநில அரசுகளுக்கு உள்ளது. பெரிய நீர் பாசனத் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐந்தாண்டுத் திட்டத்துக்குப் பிறகு, நீர் பாசனத் திட்டங்கள் எதையுமே மத்திய அரசு நடைமுறைபடுத்த வில்லை. தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நீர் பாசனங்கள் தவிர, வேறு நீர் பாசன திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தப்படவில்லை’’ என்றபடி பேச ஆரம்பித்தார் சென்னைப் பல்கலைகழகப் பொருளாதாரத் துறை தலைவர் ஜோதி சிவஞானம்.

மேலும், ‘‘நீர் பாசனத்தில் முக்கியப் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது என்றால் விதை, உரம், மின்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், அதையும் முழுமையாக மாநில அரசு, தருவதில்லை.அரைகுறையாகத் தரப்படுகிற உரம், விதை போன்றவையும் போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தால் பயனற்றுப் போகிறது. மாநில அரசு தரும் மின்சார மானியத்தையும் நிறுத்துமாறு மத்திய அரசு அழுத்தம் தருகிறது.

நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.6% மட்டுமே வரியாக வசூலிக்கப்படுகிறது. அதிலும் மறைமுக வரியானது அதிகமாகவும், நேரடி வரியானது குறைவாகவும் வசூலிக்கப் படுவது சரியான முறையல்ல. மறைமுக வரி என்பது மல்லையாவுக்கும் மாடசாமிக்கும் சமமாகவே உள்ளது. அந்த வரியைக் குறைத்துவிட்டு, நேரடி வரியை உயர்த்த வேண்டியது அவசியம்.

பொருளாதார முன்னேற்றம் இருந்தால், விவசாயிகள் நலன் சார்ந்த கொள்கைகள் நல்ல முறையில் இருக்கும் அல்லவா? எனவே, நேரடி வரியை உயர்த்தும் நடவடிக்கையை மத்திய அரசுதான் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசாக இருக்கிறது. விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாகத் தொழில் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றன.

விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்பது தீர்வா, தீர்வில்லையா என வாதம் எழுப்புவதைவிட, தற்போதைக்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய – மாநில அரசுக்கு உள்ளது’’ என்றார் சிவஞானம்.

‘‘விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதால், அரசுக்கு ஏற்படக்கூடிய சுமைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் சீனுவாசன்.

அவரே மேலும், “2008-ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, ரூ.70 ஆயிரம் கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது. ஆனால், இப்போது அந்தந்த மாநில அரசுகள் கடனைத் தள்ளுபடி செய்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்திலும், மகாராஷ்ட்ராவிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால், விவசாயக் கடன் தள்ளுபடித் தொகை அதிகரித்துக்கொண்டே போகும். இவை எந்த அளவுக்கு அரசுக்குச் சுமையாக இருக்கும் என்பதை ஆராய வேண்டும். அரசுக்குப் பணம் தேவை என்றால், மக்களிடம் இருந்தோ அல்லது கடனாகவோ வாங்க முடியும். ஆனால், அரசு கடன் தள்ளுபடி செய்யும் போது, ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்தக் கடன் சுமை மக்கள் தலையின் மீதே வந்து விழும் என்பது உண்மை.

விவசாயிகள் வாங்கிய கடனில், சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் வாங்கிய கடன் வெறும் 30% மட்டுமே. 70% அளவுக்கு விவசாயிகள் வேறு இடங்களில் இருந்து வாங்குகின்றனர். எனவேதான், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டபிறகும், அவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட முடியாத நிலையிலேயே உள்ளனர்.

விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளைக் கண்டறியாமல்விட்டதன் விளைவுதான், விவசாயிகளின் தற்கொலையும், மரணமும் தொடர்கிறது. விவசாயிகளுக்கு எங்கிருந்து நஷ்டம் வந்தது என்பதை ஆராய்ந்து, அதனைத் தீர்க்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் 1967-க்குப் பிறகு பெரிய அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. அதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. கடன் தள்ளுபடி செய்வதைவிட, பயிர் காப்பீட்டை முறையாக மத்திய – மாநில அரசுகள் நடைமுறைபடுத்தினாலே விவசாயிகள் மீண்டுவர முடியும்.

பயிர் காப்பீட்டை ஒழுங்குபடுத்தாத வரையில் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. விவசாயிகளுக்கு அடிப்படையாக உள்ள நீர் ஆதாரத்தைப் பெருக்க வேண்டும். விதை, உரம் போன்ற இடுபொருள்களைக் கொடுக்க வழிவகை செய்யவேண்டும். உற்பத்திக்கான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உற்பத்திப் பொருள்களைப் பதப்படுத்தி வைக்கும் கிடங்குகளை உருவாக்க வேண்டும்.இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், கடனை மட்டுமே தள்ளுபடி செய்வது தீர்வாகிவிடாது” என்றார்.

“கடன் தள்ளுபடியானது விவசாயிகளின் வாழ்வு மேம்படுவதற்கானத் தீர்வைத் தராது. இந்த வருடம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால், அடுத்த வருடத்துக்கும் கடன் தள்ளுபடி செய்வார்களா என்ற கேள்வி எழுகிறது. லாபகரமான விலையும், நீர் ஆதாரங்களை வளப்படுத்தும் நடவடிக்கை களையும் அரசாங்கங்கள் செய்தாலே போதும். கடன் தள்ளுபடியோ, இலவசமோ விவசாயி களுக்குத் தேவையில்லை. உற்பத்திச் செலவைக் குறைக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை நிர்ணய ஆணையத்தின் கொள்கைகளைப் பின்பற்றி, அதன் அடிப்படையில் சரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

2004-ல் விவசாயக் கடன் மூலம் ரூ.4.5 லட்சத்தில் ஒரு டிராக்டர் வாங்கினேன். அதில் ரூ.2 லட்சம் திரும்பக் கட்டிவிட்டேன். மீதம் ரூ.2.5 லட்சம் எஞ்சியிருந்த நிலையில், தற்போது வட்டியோடு சேர்ந்து ரூ.21 லட்சமாகத் திரும்பக் கேட்கிறார்கள். கிணறு வெட்டக் கடன், பைப் லைன் கடன் எனச் சலுகைகள் இருந்தாலும், விவசாயிகளின் நீர் ஆதாரங்களைப் பலப்படுத்தாமல் கடன் தந்தால் போதுமா?

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது எனக் கூறிவிட்டு, தனியார் நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது மத்திய அரசு. இதுதான் வளமான இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் லட்சணமா?’’ என்றார் அவர்.
“விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதும், தள்ளுபடி செய்வதும் இடைக்காலத் தீர்வுதான். அது நிரந்தரத் தீர்வாகாது. மத்திய அரசாங்கம் சம்பள கமிஷனை நடைமுறைபடுத்தியது போல, விவசாயக் கமிஷனை நடைமுறைபடுத்தினால் பிரச்னைகளைச் சமாளிக்க முடியும். விவசாயிகள் தற்கொலை, 2004-ல் தொடங்கியது. அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, எம்.எஸ் சுவாமிநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு, விவசாயிகள் பிரச்னை குறித்த அறிக்கையை 2005-ல் கொடுத்தது. அதனை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

2014-ல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பேசிய நரேந்திர மோடி, பி.ஜே.பி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால் விவசாய கமிஷனை நடைமுறைப்படுத்தும் என்றார். அந்த வாக்குறுதியை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றாதது ஏன்?’’

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது அரசுக்குக் கடன் சுமையை அதிகரிக்கும் என்பதுடன், விவசாயிகளுக்கு இது நிரந்தரமான தீர்வாகாது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. எனினும், பெரிய விவசாயிகளின் கடனை ரத்து செய்யவில்லை என்றாலும், இரண்டு ஏக்கருக்குக் குறைவாக வைத்திருக்கிற விவசாயிகளின் கடனை ரத்து செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

விவசாயிகளின் கடன் பிரச்னையை ஓட்டு வாங்குவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக நினைக்காமல், நிரந்தரத் தீர்வுக்கு அரசாங்கங்கள் நேர்மையாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>