விரக்தியில் பேசுகிறார் கமல்: டி.டி.வி.தினகரன்

விரக்தியில் பேசுகிறார் கமல்: டி.டி.வி.தினகரன்

நடிகர் கமல்ஹாசன் விரக்தியில் பேசுகிறார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்லாமல் யாருடைய பிரச்னை குறித்தும் தமிழக அரசுக்கு கவலை இல்லை. நடிகர் ரஜினிகாந்த் பேசும் ஆன்மிக அரசியல் என்பது திராவிட கட்சிகளை அழிக்கவா எனத் தெரியவில்லை. பெரியார், அண்ணா போன்றோர் வளர்த்த திராவிடர் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.
நடிகர் கமல்ஹாசன் விரக்தியில் பேசுகிறார். முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் அரசியல் நடத்த முடியாது. ஆர்.கே.நகர் தேர்தலை நேரில் பார்க்காத அவர் கருத்து கூறுவது தவறு. ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய விளையாட்டு. அதனை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் கொடுத்து வியாபாரம் ஆக்கக்கூடாது. தமிழக அமைச்சர்களுக்கும் எங்களுக்கும் பங்காளி சண்டை மட்டுமே நடக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை ஜனநாயக முறைப்படி போராடிப்பெறுவேன் என்றார் அவர்.
வாக்காளர்களை அவமதிக்கிறார் கமல்: முன்னதாக, அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த, சென்னை ஆர்.கே. நகர் பகுதி செயலாளர் எஸ்.சந்தானத்தின் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி, கொருக்குப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆர்.கே. நகர் மக்கள் பணத்துக்கும், 20 ரூபாய் டோக்கனுக்கும் விலைபோய்விட்டதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மேலும், பணத்தின் மூலம் நான் வெற்றி பெற்றதாக அவர் கூறுகிறார். அவரது வாதத்தின்படி பார்த்தாலும் ரூ.6 ஆயிரம் பணம் கொடுத்தவர்கள் தானே வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் ஆர்.கே.நகர் வாக்காளர்களை கமல் அவமரியாதை செய்கிறார். என்னிடம் யாரும் பணமும் கேட்கவில்லை, நானும் கொடுக்கவில்லை. நடிகர் விஷாலுக்கு இருந்த தைரியம் கூட நடிகர் கமலுக்கு இல்லை. கமல்ஹாசன் களத்துக்கு வந்து பேச வேண்டும். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது முறையல்ல என்றார் தினகரன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>