வாழைப்பழத் தோலைச் சாப்பிட்டவருக்கு மட்டும் தண்டனையா?தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி

 ஜெயலலிதாவுக்குப் பிடித்த ஒரு “குட்டிக்கதை”!  ஒரு ஊரில் ராஜாவும், ராணியும் பால்கனியில் உட்கார்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு விட்டு, அதன் தோலை தெருவில் எறிந்தார்களாம்.  அந்த வழியே சென்ற ஒரு பிச்சைக்காரன் அந்தத் தோலை எடுத்துச் சாப்பிட்டானாம்.  அதைப் பார்த்து ராஜா உடனே அந்தப் பிச்சைக்காரனை அழைத்து சவுக்கடி கொடுக்கச் சொன்னானாம்.  ராணி அந்தக் காட்சியைப் பார்த்து கலகலவென சிரித்தாளாம்.

ஜெயலலிதாவுக்குப் பிடித்த ஒரு “குட்டிக்கதை”!  ஒரு ஊரில் ராஜாவும், ராணியும் பால்கனியில் உட்கார்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு விட்டு, அதன் தோலை தெருவில் எறிந்தார்களாம்.  அந்த வழியே சென்ற ஒரு பிச்சைக்காரன் அந்தத் தோலை எடுத்துச் சாப்பிட்டானாம்.  அதைப் பார்த்து ராஜா உடனே அந்தப் பிச்சைக்காரனை அழைத்து சவுக்கடி கொடுக்கச் சொன்னானாம்.  ராணி அந்தக் காட்சியைப் பார்த்து கலகலவென சிரித்தாளாம்.

கேள்வி :- தமிழகத்திற்குப் புதிய ஆளுநர் பொறுப்பேற்றிருக்கிறாரே?

கலைஞர் :-  தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக, மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், பொறுப்பேற் றிருக்கிறார். திரு வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு வரவேற்பும் , விடைபெற்றுச் செல்லும் திரு.ரோசய்யா அவர்களுக்கு வாழ்த்தும், நன்றியும் கூறுகிறேன்.

கேள்வி :- சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அமைச்சரவையில் மாற்றம் செய்யலாமா?

கலைஞர் :- இதே கேள்விக்கு “ஜூ.வி.” இதழில் அளித்த பதிலில், “சட்ட சபை நடக்கும்போது அமைச்சர் களைப் புதிதாகச் சேர்க்க மாட்டார்கள்.  பதவியைப் பறிக்க மாட்டார்கள்.  துறை மாற்றமும் இருக்காது.    சபையை விட்டு வெளியில் அரசு சார்பான அறிவிப்பு கள் இருக்காது.  அதை மீறி, இப்போது அமைச்சர் சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார். கே.டி. ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின் ஆகியோரது துறைகள் மாற்றப்பட்டுள்ளன.  மரபுகளை மாற்றுவதே மரபாகிவிட்டது”  என்று  கூறப்பட்டிருப்பதைக் காண்க!

கேள்வி :- முன்னாள் பிரதமர், இளந் தலைவர், இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு, 25 ஆண்டுக் காலத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் சின்ன சாந்தன், முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் “பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக் கம்பிகளுடன் 25 ஆண்டுகளாக இல்லறம் நடத்துகிறேன்”  என்று எழுதியிருக்கிறாராமே?

கலைஞர் :- மிகப் பெரிய கொடுமை அது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையிலே இருப்பவர் சின்ன சாந்தன்.  முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான ஜெபமணி மோகன் ராஜ், “ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் சின்ன சாந்தனும் இருந்திருக்கிறார். அதற்கான போட்டோ ஆதாரத்தை இந்த வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன், தான் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு” என்ற புத்தகத்திலே வெளியிட்டுள்ளார்” என்று கூறியிருக்கிறார்.  இதுபற்றி சின்ன சாந்தன்,  ரகோத்தமன் புத்தகத்தில் சின்ன சாந்தன் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நபர், தான் இல்லை என்று மறுத்துவிட்டார். இதற்காக ரகோத்தமன் மீது வழக்குத் தொடரும் நிலையிலே அவர் இருக்கிறார்.  அதுபற்றி ரகோத்தமன் கூறும்போது, தனது புத்தகத் தால் சாந்தனுக்கு சங்கடம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.  வழக்கு முடிந்து பல ஆண்டுகள் கழித்து சிறையிலே உள்ள கைதிகள் தங்கள் பிரச்சினைகளைக் கூறும்போது மிகவும் பரிதாபகரமாகவும் வருத்தமாகவும் உள்ளது.  இனியாவது அந்த வழக்குப் பிரச்சினையில் உண்மை என்ன என்பதை அறிந்து, சிறையிலே வாடிக் கொண்டிருப்பவர்களின் வாட்டம் போக்கி, விரைவில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வருவார்களா என்பது தான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

கேள்வி :- ஜெயா ஆட்சியில் 100 நாட்களில் செய்த சாதனைகள் என்று 25 சாதனைகளைக் குறிப்பிட்டு நாளேடுகளில் முழுப் பக்க விளம்பரம் செய்ததற்கு, 100 நாள் வேதனைகள் என்று நீங்கள் தெரிவித்தது நல்ல பொருத்தம்தானே?

கலைஞர் :-  நான் தெரிவித்ததைப் போலவே “ஜூனியர் விகடன்” இதழும்,  “100 நாள் ஆட்சி… 110 காட்சி” என்ற தலைப்பில் “கவர் ஸ்டோரி”  எழுதி யிருக்கிறார்கள். அந்தச் செய்திக் கட்டுரையின் முதல் பக்கத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்தினை வெளியிட்டு, அதன் மீது சட்டம் ஒழுங்கு – நிதி நிலைமை – சட்டமன்ற ஜனநாயகம் – ஆட்சி நிர்வாகம் – விளம்பரம் என்று ஐந்து தலைப்புகளை எழுதி, முதல் நான்கு தலைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை “இல்லை” என்றும்; கடைசித் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை “உண்டு” என்றும் வெளியிட்டுள்ளார்கள். மேலும் அந்தத் தலைப்பில், “அ.தி.மு.க. ஆட்சி அமைந்து  100 நாட்கள் கடந்து விட்டன. சினிமா பட ரேஞ்சுக்கு 100வது நாள் கொண்டாட்டங்கள் களை கட்டின. நூறு நாட்களில் செய்த சாதனைகளைப் பட்டியல் போட்டு பல கோடி ரூபாய் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்திருக்கிறது.  ஆனால், இந்த விளம்பரங்களைத் தாண்டி, வேறு விதமாக இருக்கிறது யதார்த்தம். 100 நாட்களில் நடந்த 110 காட்சிகள் இங்கே” என்று எழுதிவிட்டு, இந்த 100 நாட்களில் என்னென்ன நடைபெற்றது என்பதை வரிசையாகத் தொகுத்திருக்கிறார்கள். படித்துப் பார்க்க சுவாரஸ்யமான தொகுப்பு அது!

கேள்வி :-  தனியார் கம்பெனியின் பத்திரிகை விளம்பரங்களில் நமது பிரதமரின் உருவப் படம் போடப்பட்டுள்ளதே?

கலைஞர் :- அண்மையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கும்,  அந்தத் “தனியார்” கம்பெனியின் விளம்பரத்தில்தான் பிரதமர் படம் போடப்பட்டுள்ளது என்பதற்கும் ஏதாவது சம்மந்தம் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல.

கேள்வி :- தாது மணல் விவகாரம்தான் என்ன?

கலைஞர் :- சில நாட்களுக்கு முன்பு, அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவையில் பேசும்போதே, தமிழக முதலமைச்சர் தன்னைத் தாக்கியதாகவும், தன் பதவியை ராஜினாமா செய்யச் சொல்வதாகவும் பேசினார். அவருடைய முழு ஆதரவாளர்தான், வி.வி. மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் எனக் கூறப்படுகிறது. எனவே இவருக்கு எதிராக ஆவணங்கள் தேடப்பட்டன அல்லது திரட்டப்பட்டன. அதில் ஒன்றுதான், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் என்பவர் சென்னைக்கு வந்து திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தன் சகோதரர் மீது புகார்களைக் கூறுகிறார்.  அதில் ஒன்றுதான், “தாது மணல் வியாபாரத்துக்கு தடை போடப்பட்டிருந்த காலத் தில், வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை அனுமதியில்லாமல் கடத்தியது.  அதனால் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பிசினஸ் நடந்தது” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

வைகுண்டராஜன் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல், அவருக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் மீதுதான் தற்போது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடவடிக்கை எடுக் கப்பட்ட அதிகாரிகள் தரப்பினரை விசாரித்தால், “ஜெயா தொலைக்காட்சி உட்பட, சொத்துக் குவிப்பு வழக்கிலே கூறப்பட்ட பல நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்தவர் தானே வைகுண்டராஜன்! மேலிடம் ஆதரித்தால் தவறில்லை, நாங்கள் ஆதரித்தது மட்டும் தவறா?” என்கிறார்களாம். 

கேள்வி :- 6402 கோடியில் மோனோ ரெயில் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்களே?

கலைஞர் :- அறிவிப்புதானே! வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.  ஆனால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கும், மோனோ ரெயில் திட்டத்திற்கும்  எப்படி மாறி மாறி இந்த அரசு நடை போடுகிறது என்பதற்கு உதாரணம்தான் இது.   மோனோ திட்டம்தான் சிறந்தது என்பார்கள்.  திடீரென்று நான் எங்கே அப்படிச் சொன்னேன், மெட்ரோ திட்டம் தான் நாங்கள் ஆதரிப்பது என்பார்கள்.  சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ திட்டம் என்று ஒரு திட்டத்தை  அறிவித் தார்கள். இப்போது மோனோ திட்டம் ஒன்றை அறிவித் திருக்கிறார்கள். நடைமுறைப்படுத்தும்போது பார்க்கலாம். மோனோ திட்டம் பற்றி மூன்றாவது முறையாகச் செய்யப்படும் அறிவிப்பு இது. முதல் இரண்டு முறை அறிவித்தபோது நடைமுறைக்கே வராதது, மூன்றாவது அறிவிப்பினாலா வந்துவிடப் போகிறது ?

கேள்வி :- மகப்பேறு கால விடுப்பு ஒன்பது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளதே?

கலைஞர் :- திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் “மகளிர் நலன்” என்ற தலைப்பில் முதலில் சொல்லியிருப்பதே, “அரசுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் ஆறு மாத பேறு கால விடுமுறையை 9 மாதங்களாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொல்லப்பட் டிருந்தது.  அந்தத் தேர்தல் அறிக்கையைப் பார்த்து விட்டுத்தான் பிறகு அ.தி.மு.க. இந்த அறிவிப்பினையும் சேர்த்து வெளியிட்டிருந்தது. தற்போது அதைத்தான் அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பில் முக்கியமான வாக்கியம் – “அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு  நடவடிக்கைகளை எனது தலைமை யிலான அ.தி.மு.க. அரசு எடுத்து வருகிறது” என்ற வாக்கியம்தான்!  ஆட்சிக்கு வந்த இந்த ஆறு ஆண்டு களில், அரசு ஊழியர்களின் சங்கப் பிரதிநிதிகளை முதலமைச்சர் ஒரு முறையாவது சந்தித்துப் பேசியது உண்டா என்று அவர்கள் கேட்கிறார்களாம்!

கேள்வி :- பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதே?

கலைஞர் :- அரசு அலுவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் கொடுப்பதைப் போல, அவ்வப்போது மத்திய அரசினால் செய்யப்படும் ஒரு காரியம் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.  இந்த அறிவிப்பு வந்தவுடன் நானும், தமிழக முதல் அமைச்சரும், மற்ற கட்சித் தலைவர்களும் அந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென்று ஒரு அறிக்கை விடுவதும், அதனைப் பத்திரிகைகள் வெளியிடுவதும்தான் நடக்கிறதே தவிர, ஒரு முறையா வது மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வோமே என்று நடந்து கொண்டதில்லை.  “ஊதுற சங்கை ஊதி வைப்போம்” என்பதைப் போலத்தான் இந்த அறிக்கைகளின் கதி!

கேள்வி :- காவல் துறை பற்றிப் பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :-  காவல் துறை மானியத்தை எதிர்க் கட்சிகளையெல்லாம் வெளியேற்றிவிட்டு, எதிர்த் தரப்பு என்ன கூறுகிறது என்று கேட்காமலேயே பலத்த போலீஸ் பாதுகாப்பைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு, பதில் உரையை மட்டும் ஆற்றிய வீரப்பெண்மணி அல்லவா? காவலர்களின் நலன்களுக்காக காவல் ஆணையம்  அமைக்கப்பட்டது என்றால் அது தி.மு.கழக ஆட்சிக் காலங்களில் மட்டும்தான்! 1969இல் திரு. ஆர்.ஏ. கோபாலசாமி அய்யங்கார், ஐ.சி.எஸ்., தலைமையிலும், 1989ஆம் ஆண்டு திரு. சபாநாயகம், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தலைமையிலும், 2006இல் திரு. பூரணலிங்கம், ஐ.ஏ.எஸ்., தலைமையிலும் மூன்று காவல் ஆணையங்கள் அமைக் கப்பட்டது தி.மு.கழக ஆட்சியில்தான்.  ஆனால் காவல் துறையினருக்காக ஒரு காவல் ஆணையத்தைக்கூட அமைக்காத ஜெயலலிதா, தி.மு.க.விற்கு தகுதியில்லை என்று கூறியிருக்கிறார்.  இன்னும் சொல்லப்போனால், தி.மு.கழகம் ஆட்சிக்கு வராததற்கு முன்பே, “உதயசூரியன்” என்ற நாடகத்தில் போலீஸ்காரர்கள் படுகின்ற அவலங்களைக் குறிப்பிட்டு ஒரு பாடலையே  எழுதினேன். காவல் துறையில் ஜெயலலிதா அரசுக்கு எவ்வளவு அக்கறை உண்டு என்பதை அந்தத் துறையிலே உள்ளவர்களிடம் ரகசியமாக விசாரித்தாலே உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.   ஏன், தலைமைச் செயலக வாசலில் பேரவை முடிகின்ற நாளன்று ஒரு பெண் இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயற்சி செய்திருக்கிறாரே, அது ஒன்று போதாதா, காவல் துறையினரின் மீது  இந்த அரசுக்கு எவ்வளவு அக்கறை என்பதைக் காட்டுவதற்கு?

தி.மு.க.வுக்கு காவல் துறையினருக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது பற்றி பேசுவதற்கு எதனால் தகுதி யில்லை என்று ஜெயலலிதா கூறுகிறார் தெரியுமா? “1980ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர். காவலர் வீட்டு வசதிக் கழகத்தை ஏற்படுத்தினார்.  தி.மு. கழக ஆட்சியில் 1989ஆம் ஆண்டு காவல் துறை வீட்டு வசதிக் கழகத்தைக் கலைத்துவிட்டார்கள். அதன் பின்னர் 1991ஆம் ஆண்டில் நான் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் காவல் துறை வீட்டு வசதிக் கழகத்தை மீண்டும் துவக்கினேன்.  அதனால் தி.மு.க. வுக்கு தகுதியில்லை” என்று கூறியிருக்கிறார். அதைப் பற்றிய விவரத்தையும் கூறுகிறேன்.  அ.தி.மு.க. ஆட்சி யில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 70 வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டு, அத்தகைய வாரியங்கள் முறையாகச் செயல்படாத காரணத்தால் 1989இல் கழக ஆட்சியில் அந்த வாரியங்கள் கலைக்கப்பட்டன என்பது உண்மை தான். ஆனால் 1981ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் இம்மாநிலம் முழுவதும் எட்டு ஆண்டுகளில் 1,561 வீடுகளையும், 601 குடியிருப்பு களையும் மட்டுமே கட்டியிருந்தது. அதனால் இக்கழகம் 31-3-1989 அன்று கலைக்கப்பட்டது.  இதைப் பற்றி 28-4-1989 அன்று காவல் துறை மானியத்தின் மீது நான் பேசும்போது, “பல வாரியங்கள் அகற்றப்பட்டு, வாரியங்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற தலைவர்களை  அமைப்பது என்பது நிறுத்தப்பட்டுவிட்டு, அந்த வரிசையிலே இந்தக் காவலர் குடியிருப்பு வாரியமும் அகற்றப்பட்டதே தவிர, காவலர் குடியிருப்பு இருக்கிறது. அந்த வாரியம் இல்லாவிட்டாலும்கூட வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.  இது கைவிடப்பட்டு விடவில்லை.  காவலர்களுக்கு  வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அரசு எப்பொழுதும் போல், பொதுப்பணித் துறையின் மூலம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப் பிட்டு, அது அவை நடவடிக்கைக் குறிப்பிலே இருப்பதை இன்றும் காணலாம். 

 இந்தக் காரணத்தை வைத்துக் கொண்டு காவல் துறை பற்றிப் பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதியில்லை, தனக்குத்தான் தகுதி உண்டு என்று கூறும் ஜெயலலி தாவுக்கு காவல் துறையினர்பால் எவ்வளவு அக்கறை என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறுகிறேன். 

12-9-2003 அன்று அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டார்.  அதில், ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றிய மயில்சாமி என்பவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, திடீரென்று உடல் சுகவீனமுற்று மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.  அவருடைய குடும்பத்திற்கு முதலமைச் சர் ஜெயலலிதா பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்த அறிக்கை ஏடுகளில் எல்லாம் வெளிவந்தது.  ஜெயலலிதாவின் அறிக்கையில் “பாதுகாப்பு பணியில்” என்று பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருந்த போதும், உண்மையில் அவர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியிலே ஈடுபட் டிருந்த போதுதான் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.    முதல் அமைச்சர் அறிவித்த  ஒரு இலட்சம் ரூபாயை வழங்குவதற்கான கோப்பு, அறிவிப்புக்கு 15 மாதங் களுக்குப் பிறகு  22-12-2004 அன்று முதல் அமைச்சர் அலுவலகத்திற்கு உத்தரவிற்காக அனுப்பப்பட்டது.  கோப்பு திரும்ப வரவே இல்லை.  ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அதாவது  14-9-2005 அன்று இறந்து போன மயில்சாமியின் தாயார், அந்தத் தொகையைக் கேட்டு வலியுறுத்துவதாகவும், கோப்பினை திரும்ப அனுப்ப வேண்டுமென்றும் கோரி, ஒரு குறிப்பு முதல் அமைச்சர் அலுவலகத்திற்கு துறையிலிருந்து அனுப்பப்படுகிறது.  இதற்குப் பிறகாவது அந்தத் தொகை வழங்கப்பட்டதா என்றால் இல்லை.  மீண்டும் 4 மாதங்கள் கழித்து 24-1-2006 அன்று உள்துறையிலிருந்து ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் அந்தக் குடும்பத் திற்கு வழங்க முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டது. அந்தக் கோப்பில் நிதித் துறை செயலாளர் 27-1-2006 அன்று கையெழுத்திட்டு முதலமைச்சர் அலுவலகத்திற்கு கோப்பினை அனுப்பிய போதிலும், அந்தக் கோப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டு திரும்ப அனுப்பவில்லை.  அதற்குப் பிறகு பொதுத் தேர்தல் நடைபெற்று, தி.மு. கழக ஆட்சி பொறுப்பேற்று, நான் முதலமைச்சராக ஆன பிறகு, அந்தக் கோப்பு மீண்டும் எனக்கு அனுப்பப்பட்டு 11-6-2006 அன்று நான் கையெழுத்திட்டு துறைக்கு அனுப்பினேன். இந்த விவரத்தை நான் சட்டப்பேரவை யிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். காவல் துறையைப் பற்றி பேசுவதற்கான தகுதி யாருக்கு இருக்கிறது? எவ்விதத் தகுதியும் இல்லாதவர்களெல்லாம், தகுதி பற்றி வாய் கிழியப் பேசும் காலம் இது !

கேள்வி :- கடந்த ஆட்சிக் காலத்தில்  ஜெயலலிதா “காணொலி” காட்சிகள் வாயிலாக  பலவற்றைத் திறந்து வைத்ததற்கான புகைப்படம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்போது, ஜெயலலிதாவுக்கு அருகில் அந்தப் புகைப்படங்களில் தவறாமல் காணப்படும் தலைமைச் செயலாளர் மீதே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு “சஸ்பென்ட்” செய்யப்பட்டிருக்கிறாரே? 

கலைஞர் :-  ஜெயலலிதாவுக்குப் பிடித்த ஒரு “குட்டிக்கதை”!  ஒரு ஊரில் ராஜாவும், ராணியும் பால்கனியில் உட்கார்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு விட்டு, அதன் தோலை தெருவில் எறிந்தார்களாம்.  அந்த வழியே சென்ற ஒரு பிச்சைக்காரன் அந்தத் தோலை எடுத்துச் சாப்பிட்டானாம்.  அதைப் பார்த்து ராஜா உடனே அந்தப் பிச்சைக்காரனை அழைத்து சவுக்கடி கொடுக்கச் சொன்னானாம்.  ராணி அந்தக் காட்சியைப் பார்த்து கலகலவென சிரித்தாளாம்.  ராஜா, ராணியைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டபோது, ராணி, “தோலைச் சாப்பிட்டதற்கே இந்தத் தண்டனை என்றால், சுளையைச் சாப்பிட்ட உனக்கு என்ன காத்திருக்கிறதோ” என்று பதில் அளித்தாளாம். அந்தக் கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>