‘வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கே ஜி.எஸ்.டி. வரி வலி தரும்’ வெங்கையா நாயுடு பேச்சு

மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை மற்றும் சரக்கு, சேவை வரி கருத்தரங்கம் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:–

இந்தியா முழுவதும் ஒரே தேசம் ஒரே வரி என்ற அடிப்படையில் எளிமையான வரி முறை அமலுக்கு வந்துள்ளது. அவசர கதியில் கொண்டு வராமல் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வரியை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தன. தற்போது வரியை கொண்டு வருவதற்கு முன்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விளக்கி கூறினோம். பொதுவாக நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் சரக்கு, சேவை வரியால் பாதிப்பு இருக்காது. முறையாக வரி செலுத்தாதவர்களும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் சரக்கு, சேவை வரி அறிமுகம் என்பது வலி தரும் செய்தி என்பதால் அவர்கள் தான் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு மட்டுமே சரக்கு, சேவை வரி பாதிப்பை தரும்.

அதேநேரம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 70 ஆண்டுகள் பின்னோக்கிய நாட்டை, இளமையை நோக்கி முன்னோக்கிய பாதையில் கொண்டு செல்வதில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்படுகிறார்.

உலக நாடுகளில் முன்னேறிய நாடுகளை போன்று இந்தியாவும் இருக்க வேண்டும் என்பதிலும் பிரதமர் கவனமாக இருந்து வருகிறார். ஊழலற்ற தன்மை, வெளிப்படைத் தன்மை, முன்னேற்றம் என்ற மந்திரத்தை கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு காரணம் தமிழகம் உற்பத்தி மாநிலமாக உள்ளது. அதேபோல மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலமும் சரக்கு, சேவை வரியால் மாநில வருமான குறையும் என்று கருத்து தெரிவித்தன.
இதுகுறித்து மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த போது, ‘சரக்கு, சேவை வரியை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு, நிதி மந்திரியிடம் இது குறித்து ஆலோசித்து வருகிறது. உற்பத்தி மாநிலங்கள் பாதிக்காத வகையில் சரக்கு, சேவை வரி அமையும். பாதிக்கப்படும் பட்சத்தில் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், சரக்கு சேவை வரியை அமல்படுத்த அ.தி.மு.க. குறுக்கே நிற்காது என்றார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். தற்போது அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையிலே சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.

சரக்கு, சேவை வரிக்கு சுங்கவரி இல்லை. அத்துடன் இந்த வரியால் ஏழை எளிய பொதுமக்கள் பயனடைவார்கள். இந்த வரியை முறையாக கட்டாதவர்களுக்கு தான் பிரச்சினை ஏற்படும். அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியிடம் பொருளாதார ரீதியாக சரியான பாதையில் செல்வதாக அமல்படுத்தப்பட்டுள்ள சரக்கு, சேவை வரி திட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வர்த்தகர்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. நுகர்வோர்களிடம் இருந்து வரியை வசூலித்து முறையாக அரசுக்கு செலுத்த வேண்டும். சரக்கு, சேவை வரியில் ஏற்படும் பிரச்சினைகளை அப்படியே விட்டுவிடப்போவதில்லை. அவ்வப்போது கூடும் சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் பேசி தீர்வு காணப்படும். சரக்கு, சேவை வரியால் குறைந்த வலியில் நிரந்தர தீர்வு ஏற்படும். குறிப்பாக உரத்திற்காக இருந்த 12 சதவீதம் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

113.26 கோடி மக்கள் ஆதார் பதிவு செய்துள்ளனர். ஆதார் உங்களுக்கான அடையாள அட்டை தான். நானும் சிறு வயதில் இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். ஆனால் பின்நாளில் டெல்லியில் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் அதில் தவறில்லை.
ஆனால் உங்கள் தாய் மொழியில் புலமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மாறாக மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. நம்முடைய தொடர்பு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக சிலர் எதிர்ப்பது ஏன்? என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>