வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் : மு.திலிப்

water_12116

சென்னை : தமிழகம் முழுவதும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், மக் கள் ஆங்காங்கே சாலை மறியல், அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போலீ சாருடன் மோதல் சம்பவங் களும் நடந்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக கடுமையான வறட்சி நிலவுகிறது. மேலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மழைக்காலங்களில் மட்டும் 250 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதன்காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர். பெண்கள் சமையல் செய்வதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் திணறி வருகின்றனர். பல இடங்களில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தண்ணீர் பிரச்னைக்கு பயந்தே தொகுதிக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். டாஸ்மாக் போராட்டத்துக்கு பிறகு குடிநீர் போராட்டம் தான் தற்போது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பேதமில்லாமல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னையில் 20 நாளைக்கு ஒருமுறை, மாதத்துக்கு ஒருமுறையே தெருக்குழாய்களில் தண்ணீர் வருகிறது. மற்றும் பணம் கொடுத்து லாரிகளில் வரவழைத்து பயன்படுத்துகின்றனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் பல்வேறு ஏரிகள் வறண்டு விட்டன. 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளதே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்று தமிழக அரசு திரும்ப திரும்ப கூறி வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கல்குவாரியில் உள்ள தண்ணீர், சென்னைக்கு அருகில் உள்ள போரூர் ஏரியில் இருந்து தண்ணீரை நகர மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதேபோல சென்னை புறநகர் மற்றும் பிற மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக திண்டுக்கல், திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சேலம், தருமபுரி உள்பட பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. இதற்காக பஸ்கள் சிறைபிடிப்பு, போலீசாருடன் தகராறு, பஞ்சாயத்து, கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை என நடந்து வருகிறது. விஸ்வரூபம் எடுத்துள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்தில் உள்ள தனி அலுவலர்கள் தத்தளித்து வருகின்றனர்.

தாகத்தில் தவிக்கும் திருத்தணி: திருத்தணி அருகே கோரமங்கலம் காலனியில் 750க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் குடிநீர் விநியோகிக்க திறக்கப்படும் கேட் வால்வ் பைப் பழுதடைந்தது. இதன் காரணமாக கோரமங்கலம் காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணும்படி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 6.30 மணியளவில் திருத்தணி – சித்தூர் சாலையில் கோரமங்கலம் ேபருந்து நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர். மேலும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிடவே, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு குடிநீர் விநியோகத்தை சீரமைப்பதாக உறுதியளித்தார். இதேபோல், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் கடந்த 20 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அக்கையா நாயுடு சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

பாசன தண்ணீர் குடிக்கும் ஊத்துக்கோட்டை மக்கள்: ஊத்துக்கோட்டையில் கடந்த 10 நாட்களாக, மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகிக்கவில்லை. இதனால் வயல்வெளியில் உள்ள மோட்டார் பம்ப் ெஷட்டுகளில் தண்ணீர் பிடித்து, பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை, காலி குடங்களுடன் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லியில் தண்ணீர் பஞ்சம்: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பைபாஸ் சாலையையொட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களில் 15க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் இரவு, பகலாக தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுவதால் நிலத்தடிநீர் குறைந்து, சென்னீர்குப்பம் பகுதி மக்களுக்கு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பூந்தமல்லி – ஆவடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். பெண்கள் காலி குடங்களுடன் வந்தனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீசார், 50 பேரையும் கைது செய்தனர். கோவை: கோவை மாநகர மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திக் தலைமையில் சிங்காநல்லூர் உழவர் சந்தை முன்புறம் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில், திரளான பெண்கள் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் குடிநீர் பிரச்னை காரணமாக சுற்றுப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500 பெண்கள் உட்பட ஆயிரம் பேர் நேற்று காலை முக்காணி மெயின்ரோட்டில் 3வது முறையாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு உணவு சமைப்பதற்காக பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இதை பார்த்து ஆத்திரமடைந்த டிஎஸ்பி தீபு, பாத்திரங்களை தூக்கி வீசினார். இதனால் கிராம மக்களுக்கும், டிஎஸ்பிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற போலீசார் தலையீட்டு கிராம மக்களை சமாதானப்படுத்தினர். இதேபோல ஈரோட்டிலும் நேற்று போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் நடந்து வரும் தண்ணீர் பிரச்னையால் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், ஆளும் கட்சியினர் இயற்கையின் மீது பழியை போட்டு தப்பிக்கும் பணியில் ஈடுபட்டும், உள்கட்சி பிரச்னையில் சிக்கி உள்ளதால், மக்களின் தண்ணீர் தாகத்தை தணிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>