பரோலில் வீட்டுக்கு வந்தார் ரவிச்சந்திரன்

பரோலில் வீட்டுக்கு வந்தார் ரவிச்சந்திரன்! ஆரத்தழுவி வரவேற்றார் தாயார்

பரோலில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு வந்தார். அவரை தாயார் ராஜேஸ்வரி ஆரத்தழுவி வரவேற்றார்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரன், ஒரு மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்று உள்ளேன். எனக்கு பரோலில் செல்ல உரிமை உண்டு எனத் தமிழக முதன்மைச் செயலர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ல் பரோலில் வந்த நிலையில் 2014-க்குப் பிறகு, பரோலில் வரத் தகுதி உண்டு. எனவே, 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எனது குடும்பத்தின் சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு மாத காலம் நீண்ட பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

பல கட்ட விசாரணைக்குப் பின் நீதிபதிகள், ரவிச்சந்திரனுக்கு மார்ச் 5 முதல் 19-ம் தேதி வரை பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் அரசியல் பேசக் கூடாது. பேட்டி அளிக்கக் கூடாது. விடுப்புக் காலங்களில் வழக்கறிஞரை சந்திக்கக் கூடாது. பதிவுத்துறை அலுவலகம், மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லலாம். சொத்துகளைப் பார்வையிடலாம் என்று நிபந்தனை விதித்து பரோல் வழங்கினர்.

இந்நிலையில், இன்று காலை 9.20 மணி அளவில் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் அவரது இல்லத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அவரை தாயார் ராஜேஸ்வரி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஆரத்தவிழுவி வரவேற்றனர். வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதுடன், சி.சி.டி வி கேமரா, மெட்டல் டிடெக்டர் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்துள்ளது. பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பும்வரை துப்பாக்கி ஏந்திய போலீஸார் வீட்டைச் சுற்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

You may also like...