ரயில் கொள்ளை வழக்கு போலீசார் திணறல் : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

ரயில் கொள்ளை வழக்கு போலீசார் திணறல் : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

ரயில் கொள்ளை வழக்கு போலீசார் திணறல் : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

சென்னை : ஓடும் ரயில் கூரையில் ஓட்டை போட்டு ரூ.6 கோடியை கொள்ளையடித்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் ரயில்வே போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார். சேலத்தில் இருந்து கடந்த 8ம் தேதி இரவு சென்னை எழும்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கி பணத்தை கொண்டு வருவதற்காக தனிப்பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பெட்டியில் சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து வங்கிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பழைய, கிழிந்த ரூபாய்த்தாள்கள் சுமார் 342 கோடி ரூபாய் கொண்டு வரப்பட்டது. அவை 226 மரப்பலகை பெட்டிகளில் அடைத்து கொண்டு வரப்பட்டன. ரயிலில் பாதுகாப்பிற்காக சேலம் ஆயுதப்படை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், காவலர்களும் வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை(9.08.16) காலை ரயில் சென்னை எழும்பூர் வந்தது. பிறகு தனியாக கழற்றப்பட்ட பெட்டி 1வது நடைமேடை அருகே உள்ள சரக்குகள் ஏற்றி இறக்கும் இடத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. அங்கு வந்த ரிசர்வ் வங்கி உதவி மேலாளர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பணத்தை எடுக்க ரயில் பெட்டியை திறந்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. நாட்டில் முதல் முறையாக ஓடும் ரயிலில் கூரையில் துளைபோட்டு கொள்ளைடித்த சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான ரயில்வே போலீஸ் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணையை தொடங்கினர். ரயில் பெட்டியினுள் நுழைய வசதியாக கூரையில் வெட்டி எடுக்கப்பட்ட தகடு வழியில் எங்காவது விழுந்திருக்கிறதா என்று நேற்றுமுன்தினம் ரயில்வே பாதுகாப்பு படையினர் தேடத்தொடங்கினர்.

மின்மயமாக்கப்படாத புதிய ரயில்பாதையான சேலம் – விருத்தாசலம் இடையேதான் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்பதால் 140 கிமீ நீளத்திற்கு நேற்று முன்தினம் இரவும் தேடும் பணி தொடர்ந்தது. ஆனால் கொள்ளையர்கள் வெட்டியெடுத்த பகுதி, பணம் கொண்டுவரப்பட்ட பெட்டியிலேயே இருந்துள்ளது. இந்த விவரத்தை சேலத்தில் தேடுதல் பணியில் ஈடுப்பட்டவர்களுக்கு தகவல் சொல்லவில்லை. ஆனால் அந்த வெட்டப்பட்ட தகட்டை நேற்று முன்தினம் இரவே ரயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றி தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அதனை சென்னை கடற்கரை சாலையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். அங்குள்ள ஆய்வுக்கூடத்தில் கூரை எப்படி வெட்டியெடுக்கப்பட்டது என்று ஆய்வு நடைபெறுகிறது. ரயிலில் கொண்டு வரப்படும் பொருள் காணாமல் போனால் அதனை ரயில்வே பாதுகாப்பு படையினர்தான் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஆனால் ரயிலில் கொண்டு வரப்படும் பொருள் என்னவென்று ரயில்வேக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

அப்படி என்ன பொருள் என்று தெரிந்தால் பொருளின் மதிப்பிற்கு ஏற்ப ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள். திருட்டுப்போனால் வழக்கும் பதிவார்கள். ஆனால் ஒரு பெட்டியை வாடகைக்கு எடுத்து சட்டம் அனுமதிக்கும் பொருட்களை கொண்டு செல்லும் போது சேதமடைந்தாலோ, திருட்டுப்போனாலோ ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது. மேலும் வாடகைக்கு பெட்டியை எடுத்து என்ன பொருட்களை எடுத்துச் செல்கிறேன் என்பதை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அதே அடிப்படையில்தான் ரயில் பெட்டிகளை வாடகைக்கு அமர்த்தி பணத்தை இடமாற்றம் செய்யும் வேலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து செய்து வருகிறது. அப்படிதான் சேலத்தில் இருந்தும் சென்னைக்கு ரயிலில் பணம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தை குலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறையான ரயில்வே போலீசாரே வழக்குப் பதிவு செய்து விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென களமிறங்கிய ரயில்வே பாதுகாப்பு படை நாங்கள்தான் வழக்கு பதிவு செய்வோம் என்று கூறி நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தது. நேற்றிரவு இந்த வழக்கு ரயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டது.

ஐஜி ராமசுப்பிரமணி, எஸ்பிக்கள் விஜயகுமார், ஆணி விஜயா ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் சென்னை, சேலம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் பெட்டி கூரை: கொள்ளை நடந்த ரயில் பெட்டி 2008ம் ஆண்டு சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில்(ஐசிஎப்) தயாரிக்கப்பட்டது. வழக்கமாக ரயில் பெட்டி கூரைகளில் கார்ட்டன் ஸ்டீல் வகை 1.6மிமீ தடிமன் கொண்ட இரும்பு தகடு பொருத்தப்படும். தடிமன் குறைவாக இருந்தாலும் உறுதியானது. அதேபோல் உட்பக்கத்தில் லிம்பர்ட் ஷீட் எனப்படும் கல்நார் தகடுகள்(ஆஸ்பெஸ்டாஸ் ஓடு) பொருத்தப்படும். மேலும் இந்த 2 தகடுகளுக்கு இடையே கண்ணாடி இழை கம்பளி(கிளாஸ் உல்) விரிவுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை வெப்பம் உள்ளே பரவுவதை தடுக்கும். ஆனால் கொள்ளை நடந்த பெட்டியில் உட்பக்கத்தில் கல்நார் தகடுகளுக்கு பதில் சாதாரண வகை இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை கல்நார் தகடுகளை விட உறுதியானது.

வெல்டிங் வைத்து துளை போட்டிருந்தால் கண்ணாடி இழை கம்பளி புகைய ஆரம்பித்திருக்கும். பின்னர் தீயாக பரவவும் வாய்ப்பு உள்ளதாம். அதனால்தான் கொள்ளையர்கள் இரும்பு உளி, இரும்பு தகடு வெட்டி, சுத்தியல் போன்ற சாதாரணமான பொருட்களை துளை போட பயன்படுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் கூலி வேலைகளில் வடமாநிலத்தவர்களே அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணிகளிலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில்வேயில் இப்போது பெரும்பாலும் பீகார், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், உத்ரபிரதேசம், சண்டீகர் என வட மாநிலத்தவர்கள் மட்டுமே அதிக அளவில் வேலை செய்கின்றனர்.

எனவே அவர்கள் ஒப்பந்த பணிகளில், தற்காலிகாக கூலி வேலைகளில் வடமாநிலத்தவர்களை மட்டுமே சேர்க்கின்றனர். அதனால் சேலத்திலும் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையிலும் வடமாநிலத்தவர்கள் அதிகமாக இருப்பதால் உள்ளூர் ஆட்களை போல் இல்லாமல் ரயில்நிலையத்தின் எந்தப்பகுதிக்கும் இலகுவாக சென்று வர முடியும்.
எனவே அவர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ரயில்வே போலீசார் கருதுகின்றனர். மேலும் வடமாநிலங்களில் ரயில் மீது உட்கார்ந்து பயணிப்பது சர்வசாதாரணமான விஷயம். எனவே அவர்கள் ரயில் மீது உட்கார்ந்து கூரையில் ஓட்டை போடுவது, உள்ளே நுழைவது சாதாரணமான விஷயமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் பணப்பெட்டிகளை திங்கட்கிழமை ஏற்றும்போதே பெட்டிக்குள் நுழைந்து அவர்கள் மறைந்து உட்கார்ந்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு இருக்கிறது. எனவே சேலம் முதல் விருத்தாசலம் வரை உள்ள பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரயில்பாதையோரம் உள்ள கிராமங்களில், குடியிருப்பு பகுதிகளிலும் தனிப்படையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆக.8ம் தேதி சந்தேகப்படும்படியான ஆட்களின் நடமாட்டம் இருந்ததா என்றும் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம் முதல் விருத்தாசலம் வரை உள்ள செல்போன் டவர்களில் பதிவான ஒரே எண்கள் எத்தனை என்ற விவரங்களையும் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளை நடந்த ரயில் பெட்டி சேலம் – சென்னை ரயிலில் இணைப்பதற்கு முன்பே கொள்ளை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. அதேபோல் பணப்பெட்டிகள் ஆக.8ம் தேதி பகல் 1.30 மணிக்கு ஏற்றப்பட்டுள்ளது. அப்போது முதலே ஆயுத படையினர் பாதுகாப்பை ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி ரயில் பெட்டி ரயில்நிலையத்திலோ, யார்டிலோ நிற்கும்போது பெட்டி மீது துளை போடுவது சாத்தியம் கிடையாது. மேலும் அந்த இடங்கள் எல்லாம் மின்மயமாக்கப்பட்ட பாதைகள். மேலும் எழும்பூர் யார்டில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டபோதும் இதுப்போன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு கிடையாது என்று ரயில்வே அதிகாரிகள் மறுக்கின்றனர்.

மேலும் துளையை பார்க்கும்போது பெட்டியின் உட்பக்கத்தில் இருந்து துளை போட்டிருக்க முடியாது என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் முன் கூட்டியே லேசாக வெட்டி வைத்து விட்டு, பின்னர் ரயில் புறப்படும் நேரத்தில் உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தமிழக போலீசார் இதுவரை பார்த்திராத, ஏன் கேட்டிராத வகையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற விசாரணையில், கொள்ளை எப்படி நடந்தது என்பது குறித்து கூட தடயங்கள் சிக்கவில்லை.
இந்த தடயங்கள் கிடைத்த பிறகுதான், கொள்ளையர்கள் யார் என்ற அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியும். இந்நிலையில் இந்த வழக்கை நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார்.

பணம் செல்லும் தகவல் தெரிந்தது எப்படி?

வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயிலில், சேலம் இந்தியன் வங்கியின் 43 ெபட்டி, சேலம் ஐஓபி-யின் 83 பெட்டி, ராசிபுரம் எஸ்பிஐயின் 42 பெட்டி, கிருஷ்ணகிரி இந்தியன் வங்கியின் 38 பெட்டி மற்றும் சத்தியமங்கலம் எஸ்பிஐயின் 20 பெட்டி என, 226 பெட்டியில் ரூ.342 கோடி பணம் கொண்டு செல்லப்பட்டது. இதில், ஒரு பெட்டியில் இருந்த 500 ரூபாய் நோட்டு ரூ.4 கோடியும், மற்றொரு பெட்டியில் இருந்த 100 ரூபாய் நோட்டு ரூ.1.75 கோடியும், மற்றொரு பெட்டியில் இருந்த 10 ரூபாய் நோட்டு ரூ.530-ம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்படும் விஷயம், மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கப்படும். இது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி என்பது மர்மமாகவே உள்ளது

8 பேர் கொண்ட கும்பல் கைவரிசை?

ரிசர்வ் வங்கி அனுப்பிய ரூ.342 கோடி பணம், 226 பெட்டிகளில் வைத்து கொண்டு செல்லப்பட்டது. இதன் ெமாத்த எடை 23 டன் ஆகும். தற்ேபாது கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடி பணம் சுமார் 200 கிலோ வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதனை ஓரிரு நபர்களால் தூக்கி செல்லமுடியாது என சந்தேகித்துள்ள போலீசார், அந்த கும்பலில் 8 பேர் வரை இருந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கார் மூலம் கொண்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே ஏற்கனவே ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட, கும்பல் பட்டியல் எடுத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 சேலம்-எழும்பூர் ரயில்(11064) சேலத்தில் புறப்பட்ட நேரம் இரவு 9 மணி. எழும்பூருக்கு அதிகாலை 4.27 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது.

2 பகல் 11.30 மணிக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வந்து பெட்டியின் சீல் உடைத்து திறந்த போது கொள்ளை நடந்தது தெரிய வந்தது.

3 226 பெட்டிகளில் கொண்டு வந்த மொத்த பணத்தின் எடை 23 டன். கொள்ளை போன ரூ.5.78 கோடியின் எடை கிட்டத்தட்ட 200 கிலோ.

4சேலம் மார்க்கெட்-ஆத்தூர் இடையே கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு. ரயில் புறப்பட்ட 2 மணி நேரத்தில் கொள்ளை நடந்திருக்கலாம் என போலீஸ் சந்தேகம்.

5மேற்கூரையை வெட்ட உளி அல்லது பெரிய அளவிலான கட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.

6சரக்கு பெட்டியில் தனியார் பார்சல் நிறுவன ஊழியர்கள் 7 பேர் பணம் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

7பணம் கொண்டு செல்லப்படும் தகவல் தெரிந்தவர்கள் 70 பேர். போலீசார் மேலும் 30 பேர் மீது சந்தேகம்.

8ரயில்வே, வங்கி ஊழியர்கள் மொத்தம் 100 பேரின் செல்போன் பேச்சு ஆய்வு. சேலம்-விருத்தாசலம் இடையே ரயில் பயணம் செய்த நேரத்தில் பதிவான செல்போன் பேச்சுகளும் ஆய்வு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>