ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2016-10-9-02-33-43

சென்னை : ரயில் பயணிகளை வாட்டி வதைக்கும் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: கட்டண உயர்வு இல்லாத நிதிநிலை அறிக்கை என்றும், அனைத்துத் தரப்பு மக்களுக்குமான நிதி நிலை அறிக்கை என்றும் கடந்த 25-2-2016ல் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரயில்வே நிதிநிலை அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். அவர் பாராட்டி 7 மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், இப்போது திடீரென்று ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் 50 சதவீத கட்டண உயர்வு என்று அறிவித்திருப்பது நாடு முழுவதும் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த அறிவிப்பு, ரயில்வே துறை பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறை என்ற உன்னத நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல் அடுத்த கட்டமாக ரயில் பயணிகள் தலையில் சுமத்தவிருக்கும் கட்டண உயர்வுக்கு இது முன்னோட்டம் போலவே அமைந்துள்ளது. முகூர்த்த நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் சில ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை நேரத்திற்கு ஒருவிதமாக கட்டணத்தை உயர்த்தி விற்பனை செய்வது வழக்கமாக இருக்கிறது. விமானங்களிலும் இதுபோன்ற டிக்கெட் கட்டண முறையை வைத்து பயணிகளை வாட்டி வதைக்கிறார்கள். அதுபோல் பொதுச் சேவையில், குறிப்பாக பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகவும் அதிகமாக பயன்படும் ரயில்களில் இந்த கடும் கட்டண உயர்வை அறிமுகம் செய்வது கண்டனத்திற்குரியது. இந்த கட்டண உயர்வு நடுத்தர மக்கள் மட்டுமின்றி, அவசரத்திற்கு இந்த ரயில்களைப் பயன்படுத்தும் அடித்தட்டு மக்களையும் பெரிதும் பாதிக்கும். பயணிகள் விரோத கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>