முதல்வர் பதவி கோரிக்கை நிராகரிப்பு : எடப்பாடி-ஓபிஎஸ் அணி பேச்சு முறிந்தது

1489493571-0426

* முதல்வர் பதவி ஒன்று தான் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிபந்தனை.

* ஆனால், அதை அடியோடு எடப்பாடி அணி நிராகரித்து விட்டது.

* இதையடுத்து, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பறந்தன.

* கடைசியில் பேச்சு நடக்கா மலேயே முறிந்து விட்டது.

* இதனால் இணைப்பு என்பது சாத்தியம் இல்லாதது என்று தெரிகிறது.

சென்னை: ஓபிஎஸ் அணியின் முதல்வர் பதவி கோரிக்கையை எடப்பாடி அணி அடியோடு நிராகரித்து விட்டது; தொடர்ந்து இரு அணிகளும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி மோதிக்கொண்டன. இதனால், பேச்சு நடக்கும் முன்பே முறிந்து விட்டது. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தபிறகு கட்சி, ஆட்சி ெபாறுப்பில் சசிகலா வர முயன்றதால் அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. அதிமுகவில் சசிகலா அணி என்றும், ஓபிஎஸ் அணி என்றும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால், முதல்வர் பதவி கனவு கை நழுவி போனது.

எனினும் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சசிகலா அணியினரின் கை ஓங்கியே இருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு போவதற்கு முன், அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்து, தொடர்ந்து கட்சியை வழிநடத்தி செல்வார் என்றும் அறிவித்து விட்டு சென்றார்.இதனால் அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் டி.டி.வி.தினகரன் கைக்கு மாறியது. முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள், கட்சியில் உள்ள முன்னணி தலைவர்கள் அனைவரும் தினகரன் கூறியபடி நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில், மிகவும் பவ்யமாக செயல்பட்ட டி.டி.வி.தினகரன், நாள் ஆக ஆக மிரட்டல் நடவடிக்கையால் அனைவரையும் ஆட்டிப்பார்த்தார். இது அமைச்சர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தினகரனுக்கு எதிரான இந்த சம்பவங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியிலும், அமைச்சர்கள் மத்தியிலும் எதிர்ப்பு உண்டாவதை எடப்பாடி தரப்பு உணர்ந்தது.

‘சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தால் இரண்டு அணியினரும் இணைந்து செயல்படலாம்’ என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் மூத்த அமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்தனர். உடனடியாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு ஓபிஎஸ் அணியினருடன் பேசி ஒன்றாக இணைந்து முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் எடப்பாடியிடம் ஆலோசனை செய்தபிறகு அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி விட்டோம். ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படும்” என்றார். இதைத்தொடர்ந்து பேட்டி அளித்த டி.டி.வி.தினகரனும், நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன். இனி என்னுடைய தலையீடு எதுவும் இருக்காது. ஆனால் துணை பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவிடம் கலந்து பேசித்தான் ராஜினாமா செய்வேன் என்று கூறினார். டி.டி.வி.தினகரன் இந்த அறிவிப்பு எடப்பாடி தரப்பினரை உற்சாகம் அடைய செய்தது. இனி எந்த முட்டுக்கட்டையும் இல்லாமல் ஓபிஎஸ் அணியினருடன் பேசலாம் என்ற கருத்து நிலவியது.

அதன்படி மறைமுகமாக ஓபிஎஸ் அணியினருடன் எடப்பாடி அணியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதல்வர் பதவி மற்றும் பொதுச்செயலாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க வேண்டும். மேலும், கூடுதலாக ஓபிஎஸ் அணியில் உள்ள சில எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஆனால் இதை எடப்பாடி தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் இருந்த 122 எம்எல்ஏக்கள் ஆதரவும் தொடர்ந்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன், முதல்வர் பதவியை ஓபிஎஸ்சுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவியை வேண்டுமானால், தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்த பிறகு ஓபிஎஸ்சுக்கு வழங்கலாம் என்ற கருத்து எடப்பாடி அணியினர் சார்பில் ஓபிஎஸ் அணியினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதே கருத்தை, தம்பிதுரை எம்பி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் வெளிப்படையாக பத்திரிகைகளுக்கு தெரிவித்தனர்.

எடப்பாடி அணியினரின் கருத்தால் ஓபிஎஸ் அணியினர் விரக்தி அடைந்தனர். நேற்று காலை 10 மணிக்கு சென்னை, அடையாரில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், மனோஜ் பாண்டியன் மற்றும் ஆதரவு எம்பி, எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். 4 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து பேட்டி அளித்த கே.பி.முனுசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், சசிகலா, டி.டி.வி.தினகரனிடம் இருந்து ராஜினாமா கடிதம் வாங்க வேண்டும் என்று 2 நிபந்தனைகளை விதித்தார். அவர் மேலும் கூறும்போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு ஊழல் அரசு, அது மக்களுக்கே நன்றாக தெரியும். சசிகலா தயவால் தான் எடப்பாடி முதல்வர் ஆனார். அவர் அதிமுக முதல்வர் இல்லை. சசிகலா குடும்பத்தின் முதல்வர் என்று பகிரங்கமாக பேட்டி அளித்தார்.

ஓபிஎஸ் அணியில் உள்ள கே.பி.முனுசாமியின் இந்த பேட்டியில் எடப்பாடி அணியினரை மட்டுமல்ல அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஆரம்பத்தில், ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் தர்மயுத்தம் நடத்துகிறோம் என்று ஓபிஎஸ் கூறினார். இப்போது, ஓபிஎஸ்சுக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்று தெரிந்ததால், விரக்தியின் உச்சிக்கே சென்று புதிய புதிய கோரிக்கைகள் வைக்கிறார்கள். இவர்களை பார்த்தால், ஏதோ பதவிக்காகத்தான் இத்தனை நாள் தொண்டர்களிடம் ஏதோ கூறி வந்தார்கள் என்று கருத்து தற்போது ஏற்பட்டுள்ளது.

கே.பி.முனுசாமியின் பேட்டிக்கு உடனடியாக பதிலடி கொடுத்த, வைத்திலிங்கம் எம்பி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, “நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரியாகி விடும். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று வழக்கு போட்டதே ஓபிஎஸ் தான். அவர் வழக்கை வாபஸ் வாங்கினால் இரட்டை இலை தானாக கிடைத்துவிடும். அவர் கூறியபடி கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றி விடலாம்” என்றனர்.

இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கான குழுவை இன்று அறிவிப்பார்கள் என்று தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஓபிஎஸ் அணியினரின் திடீர் முட்டுக்கட்டையால் இரண்டு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. குழு அமைப்பதற்கு முன்பே பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாகவே தொண்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதன்மூலம், வருங்காலங்களில் இரு அணிகளும் தனித்தனியே செயல்படும் நிலையே மீண்டும் ஏற்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>