மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க மாறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவோம்: மு.க.ஸ்டாலின்

2017-06-09-11-02-45

சென்னை: மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் மாறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கொட்டிவாக்கம் ஓய்.எம்.சி.ஏ. திடலில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நேற்று மாலை நடந்தது. முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். மா. சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றி பேசியதாவது: பவளவிழா மலரை உருவாக்க கடந்த ஓராண்டாக இரவு பகல் என்று பாராமல், கண்துஞ்சாமால், உணவு, உறக்கம் மறந்து, மலர் சிறப்பாக உருவாக்கிட, வெற்றி பெற்றிட உழைத்த, திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, முத்து வாவாசி, பேராசிரியர் ராமு ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்த வரலாற்று மலரை, படிவத்தை மிகவும் சிறப்பான முறையில் அச்சடித்து கொடுத்த அரசு ஆர்ட்ஸ் உரிமையாளர் கோபிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த வைகோ ‘‘இப்படி ஒரு வரலாற்று மலரை நான் என்வாழ்நாளில் பார்த்ததில்லை’’ என்று கூறினார். இப்படிப்பட்ட மலரை தயாரித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முரசொலி காட்சி அரங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் இதுவரை, கடந்த ஒரு மாதகாலத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தது மட்டுமல்ல, உணர்ச்சிவப்பட்டுள்ளனர் என்றால் அது மிகையல்ல. ஒரு மாதத்திற்கு தான் அரங்கத்தை வைக்க முடிெவடுத்தோம். இந்த அரங்கத்தை பொதுமக்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் வந்து பார்த்து பெருமை சேர்த்து வருகிறார்கள். அங்குள்ள கலைஞர் மெழுகு உருவ சிலை அருகில் நின்று ஆர்வத்துடன் படம் எடுத்துச் செல்கிறார்கள். இதற்கு துணை நின்றவர்கள், விழா ஏற்பாடுகளை செய்த அனைவரையும் பாராட்டுகிறேன். பத்திரிகை உலக ஜாம்பவான்களை அழைத்து விழா நடத்திய பெருமை நமக்கு உண்டு.

சென்னை நந்தனத்தில் இந்த விழா மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அன்று மழை வந்ததால்தான் இன்று வைகோ வந்திருக்கிறார். ஜி. ராமகிருஷ்ணன் வந்திருக்கிறார். இந்த விழா அன்றைய தினம் நடந்திருந்தால் வைகோ வந்திருக்க மாட்டார். இந்த விழா மேடை ஏற்பாடுகள் அனைத்தையும் நான் நினைத்ததை விட சிறப்பாக மா. சுப்பிரமணியன் செய்திருக்கிறார். அவருக்கு ஈடு அவர் தான். தனது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் பேராசிரியர் இங்கே வந்துள்ளார். கருணாநிதி இந்த விழாவுக்கு வர முடியவில்லை. ஆனால் இந்த விழாவையும் தலைவர்கள் பேச்சையும் தொலைக்காட்சியில் பார்க்கிறார். அவர் உடல் கோபாலபுரத்தில் இருந்தாலும் அவரது உள்ளம் இந்த மேடையில்தான் இருக்கும்.
நாட்டில் ஆட்சி மாற்றம் வருகிறதோ இல்லையோ மீட்சி உருவாகப் போகிறது. போருக்கு முன் சங்கு ஒலிக்கும் என்று முத்தரசன் கூறினார். நாட்டுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இங்கு மாணவி அனிதா படமாக இருக்கிறார். நீட் தேர்வுக்கு அவரை பலி கொடுத்து இருக் கிறோம். இவ்வளவு தலைவர்கள், கட்சிகள் இருந்தும் இங்குள்ள கையாலாகாத மாநில அரசு சமூக நீதியை குலைக்கும் மத்திய அரசுடன் கைகோர்த்து இருப்பதால் அனிதாவை இழந்து இருக்கிறோம்.

சமூக நீதியை பாதுகாக்க, மாநில உரிமைகளை பாதுகாக்க நாம் உறுதி ஏற்கும் விழாவாக இந்த விழாவை கருத வேண்டும். முரசொலி முதல் ஆண்டு விழா 1943ல் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட கருணாநிதி, இந்த பவள விழாவுக்கு வர முடியவில்லை. கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி கலைஞர் வைரவிழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது. அகில இந்திய தலைவர்களை அழைத்து அந்த விழாவை நடத்தினோம். அதனால் இங்குள்ள தலைவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது. திருமாவளவன் உரிமை காரணமாக எடுத்துக் கூறினார். முதலில் அகில இந்திய தலைவர்கள் வாழ்த்தட்டும். பிறகு நீங்கள் வாழ்த்துங்கள், பாராட்டுங்கள் என்று இந்த விழாவை நடத்துகிறோம். இதன் மூலம் அந்த குறை அகற்றப்பட்டு இருக்கிறது.
திராவிட இயக்கத்திற்கு எத்தனையோ ஏடுகள் இருந்தன. ஆனால் முரசொலி இன்று பவள விழா காண்கிறது. பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி, இந்தியாவில் சுதந்திர வரலாறு போல 1942ல் முரசொலி தொடங்கப்பட்ட வரலாறு உண்டு. இன்று எத்தனையோ 144 தடை உத்தரவுகள். ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த தடை உத்தரவு. கதிராமங்கலம், நெடுவாசல் செல்ல தடை, சேலம் ஏரியை பார்க்க தடை, அன்று கருணாநிதி முரசொலியில் எழுதியதால் சிதம்பரம் செல்ல தடை விதிக்கப்பட்டது. அது அதிகார வர்க்கத்தை மிரள வைத்தது. என் தம்பி கருணாநிதியும் மாறனும் கட்சித் தொண்டினை கலை மணம் குழைத்து முரசொலியில் தருகிறார்கள் என்று அண்ணா பாராட்டினார்.

இத்தனை காலம் முரசொலி பாடுபட்டு வந்த கொள்கைகளுக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. மாநில சுயாட்சிக்கு ஆபத்து வந்திருக்கிறது. மாநில உரிமைகளுக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூக நீதிக்கு ஆபத்து வந்திருக்கிறது. நாம் பல கட்சிகளாக பிரிந்திருந்தாலும் மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் மாறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அதற்கு உறுதி ஏற்க முழக்கமிடும் விழாவாக இந்த விழா அமையட்டும்.
மத்தியில் உள்ள ஆட்சி மிருக பலத்துடன் இருப்பதால், மதவாதத்தை அடிப்படையாக வைத்து, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் எப்படியாவது அதை பரப்பிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் மதவாதத்தை காலூன்றி, பாஜ ஆட்சி கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் நீண்ட விளக்கம் அல்ல ஒரே ஒரு விளக்கம் சொல்கிறேன். ‘‘எட்டாத கனிக்கு கொட்டாவி விடாதே அப்பனே’’ என்பதுதான் அந்த விளக்கம்.

நாம் தமிழினத்தை காப்போம், தமிழகத்தை காப்போம். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்த இந்தியாவை காப்போம் என்று நாம் உறுதி எடுப்போம். பிரதமர் மோடி தேர்தலுக்கு முன் என்ன சொன்னார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம், வானத்தை பிளந்து, வைகுண்டத்தை காட்டுவோம், மணலைக்கூட கயிறாக திரிப்போம் என்றெல்லாம் கதைகளை விட்டு ஆட்சிக்கு வந்தார்கள். மோடி பிரதமராவதற்கு முன் என்ன சொன்னார். நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார். கருப்பு பணம் நாட்டில் ஒழிக்கப்பட்டு விட்டதா, சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என்றார், கொண்டுவருவது மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்வேன் என்றார். டெபாசிட் செய்தாரா? தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, மீனவர்களை பாதுகாப்பேன் என்றாரே செய்தாரா? நதிகள் இணைக்கப்படும் என்றாரே இணைக்கப்பட்டு விட்டதா? மோடி சென்னதையும் செய்யவில்லை, நாம் கேட்பதையும் நிறைவேற்றவில்லை. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு மோடி ஆட்சி அல்ல அது ஒரு மோசடி ஆட்சி. இந்த மோசடி ஆட்சியை அப்புறப்படுத்த நாம் தயாராவோம், ஒன்று திரண்டு போராடுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>