மாநிலங்களவையில் ஒருமித்த ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது

மாநிலங்களவையில் ஒருமித்த ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது

மாநிலங்களவையில் ஒருமித்த ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது

புதுடெல்லியில் : எதிர்கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. சபையில் இருந்த 203 உறுப்பினர்களும், மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். அதிமுக எம்பிக்கள் மட்டும் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்தனர். பொருளாதார சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2006ம் ஆண்டு தயாரித்தது. இது மக்களவையில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்கட்சியான பா.ஜ எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதன்பின் தேர்தல் வந்ததால் இந்த மசோதா நிறைவேறவில்லை.

பா.ஜ ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டி மசோதாவை சில மாற்றங்களுடன் கொண்டு வந்தது. மக்களவையில் ஆளும் கட்சிக்கு பலம் இருந்ததால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. பா.ஜ அரசு செய்த திருத்தங்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதாவை பா.ஜ அரசால் கடந்த ஓராண்டாக நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மசோதவை நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். ஆனால் பா.ஜ அரசு செய்த மாற்றங்களை ஏற்க காங்கிரஸ் பிடிவாதமாக மறுத்துவிட்டது. இந்நிலையில், அடுத்த சந்திப்புகள், கூட்டங்கள் ஆகியவற்றை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்த திருத்தங்களை செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஒரு சதவீத கூடுதல் உற்பத்தி வரி, மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவாய் இழப்பை சரிக்கட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

முன்னதாக இது 3 ஆண்டுகளாக இருந்தது. மாற்றத்துக்கு பின்னர், ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் செய்ய காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதிமுக மட்டும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று தாக்கல் செய்த போது, அவையில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர். அதன்பின் அவர் பேசியதாவது: இந்திய வரலாற்றில் இது மிகவும் குறிப்பிடத்தக்க வரி சீர்திருத்த மசோதா. பல கட்சிகளுடன், பல மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, ஒருமித்த கருத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து எதிர்கட்சி தலைவர்களுக்கும் குறிப்பாக குலாம் நபி ஆசாத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டாட்சி அமைப்பில் சிறப்பான பொருளாதார நிர்வாகத்தை கொண்டு வரும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் சிறப்பம்சமே, சரக்கு மற்றும் சேவைக்கு நாடு முழுவதும் ஒரே விதமான வரி என்பதுதான். இந்த முறை இந்தியாவை ஒரே சந்தையாக மாற்றும்.

நாட்டுக்குள் எங்கு வேண்டுமானலும் சரக்குகளை கொண்டு செல்ல ஜிஎஸ்டி வழிவகுக்கும். வரி ஏய்ப்பு, முறைகேட்டை தடுக்கும். இந்த வரி, நமது நாட்டின் பொளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இந்த வரி படிப்படியாக குறைந்து மக்களுக்கு பயன் அளிக்கும்,
மத்திய, மாநில அரசுகளுக்கு போதுமான வருவாயை ஈட்டித் தரும். வரிக்கு வரி விதிப்பு முறையை ஜிஎஸ்டி ஒழிக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலின் மூன்றில் 2 பங்கு வாக்கு அதிகாரம் மாநிலங்களைச் சேர்ந்தது. மத்திய அரசுக்கு ஒரு பங்குதான். இவ்வாறு அவர் பேசினார். 18% வரிக்கு மேல் கூடாது: இந்த மசோதா குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ஜிஎஸ்டி என்று கருத்துக்கு காங்கிரஸ் ஒரு போதும் எதிராக இருந்ததில்லை. ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்பியது. ஆனால் இந்த விஷயத்தில் அரசு முதலில் பிடிவாதமாக இருந்தது. சேவை வரியை தற்போதுள்ள 14.5 சதவீதத்திலிருந்து 23 அல்லது 24 சதவீதமாக அரசு உயர்த்தினால் பணம் வீக்கம் அதிகரித்து கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

மக்களை முடக்கும்: மார்க்சிஸ்ட் எம்.பி சீதாராம் யெச்சூரி பேசுகையில், ‘‘இது மிகவும் ஆபத்தான மசோதா. நாம் மிகவும் தீவிரமான வரி வசூலிப்பு முறையை செய்து கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களின் நலன்தான் முக்கியம். இந்த வரி மக்களை முன்னேற்றப் போகிறதா அல்லது சீரழிக்கபோகிறதா? இது குறிப்பிட்ட இடைவெளியில் இல்லை என்றால், மக்களுக்கு பெரும் சுமாயான வரியாக இருக்கும். 24 முதல் 25 சதவீத ஜிஎஸ்டி வரி பெரும்பாலான மக்களை முடக்கும். ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களின் வருவாய் வெகுவாக பாதிக்கப்படும். இதற்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?’’ என்றார். விவாதத்துக்கு பதில் அளித்து அருண்ஜெட்லி பேசியதாவது: ஒரே நாடு ஒரே வரி என்பதுதான் ஜிஎஸ்டியின் அடிப்படை. இதில் மிகவும் நியாயமான வரி விதிக்க நாங்கள் முயற்சி செய்வோம். சேவை வரி அதிகமாக இருக்கும். ஆனால் விலை குறைவாக இருக்கும். மத்திய அரசு இல்லாமல் மாநில அரசுகள் இருக்க முடியாது. நாம் ஒரு புதுவிதமான கருத்தை பரிசோதிக்கிறோம்.

இதன் மூலம் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரே விதமான வரி அமைப்பை பெற முடியும். மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என கூறுவது நியாயம் அல்ல. மாநில அரசுகளும் மத்திய அரசு மீது அதிகாரம் செலுத்த முடியும். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைப்படிதான் நாங்கள் செயல்படுவோம். மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதுதான் முக்கியம். ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது பெரும் தலைவலி. முன்னாள் நிதியமைச்சராக இருப்பதுதான் இப்போது சொகுசான வாழ்க்கை. கடந்த 2011ம் ஆண்டு ஜிஎஸ்டி மசோதாவை, மாநில அரசுகளுக்கு அனுப்பினால், ஒரு மாநிலம் கூட ஆதரிக்காது. மத்திய விற்பனை வரியில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகை அளிக்கப்படாததால், அந்த மாநில நிதியமைச்சர்களும், மத்திய நிதியமைச்சரை நம்பத் தயாராகவில்லை. ஆனால் கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய விற்பனை வரியின் பங்கை நான் தவனை முறையில் மாநிலங்களுக்கு அளித்து வருகிறேன். 2011ம் ஆண்டு ஜிஎஸ்டி மசோதாவில் இழப்பீடு என்ற பிரிவே இல்லை. இவ்வாறு அருண்ஜெட்லி பதில் அளித்தார்.

அதன்பின் ஜிஎஸ்டி மசோதா மீது மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஓட்டெப்புக்கு முன் ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் தவிர அவையில் மொத்தம் 203 உறுப்பினர்கள் இருந்தனர். ஓட்டெடுப்பில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஆதரவாக 203 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

தமிழகத்துக்கு ரூ.9270 கோடி இழப்பு அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ‘‘பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழ்நாடு. இந்த ஜிஎஸ்டி வரியால் மாநிலத்துக்கு ரூ.9270 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்’’ என்றார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>