மழை காலத்தில் புதுப்பாளையம் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு: 10 கி.மீ தூரம் சுற்றி செல்லும் கிராம மக்கள்

2016-06-10-22-10-40m

ஊத்துக்கோட்டை: மழை காலத்தில் புதுப்பாளையம் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது 10 கிமீ துாரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, மங்களம் கிராம ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே மங்களம், ஆத்துமேடு, புதுப்பாளையம், காரணி, எருக்குவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் புதுப்பாளையம் குறுக்கேயுள்ள தரைப்பாலம் வழியாக ஆரணிக்கு சென்று அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரபேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

இதுபோல் திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் இந்த வழியை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். மழை காலத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். அவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கிவிடும். அந்த சமயத்தில் தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாமல் 10 கி.மீ துாரம் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். அப்படி இல்லாவிட்டால் படகு மூலம் ஆற்றை கடந்து பெரியபாளையம் – ஆரணி மெயின் ரோட்டிற்கு சென்று அதன் பிறகுதான் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வார்கள்.

எனவே, மங்களம் கிராமத்திற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மங்களம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் நாங்கள் நெல், கரும்பு, பூ செடிகள் உள்ளிட்டவை பயிர் செய்துள்ளோம். மழை காலத்தில் புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கும்போது நீண்டதூரம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டியுள்ளது. அப்போது தற்காலிகமாக படகு மூலம் செல்ல அரசு ஏற்பாடு செய்கிறது. ஆனால் படகில் செல்லும்போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்கிறோம்.

தேர்தலின்போது ஓட்டு கேட்டு வரும் எம்எல்ஏ, எம்பி வேட்பாளர்கள் பாலம் கட்டி தருவதாக வாக்குறுதியளிக்கின்றனர். ஆனால் வெற்றி பெற்றவுடன் எங்களை மறந்துவிடுகின்றனர். தற்போதுள்ள எம்எல்ஏ விஜயகுமாரிடம் பாலம் கட்டுவது தொடர்பாக மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து சட்டசபையில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தற்போது ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி வருகிறோம்” என்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>