மருத்துவப்படிப்பு: தமிழக மாணவர்களின்  எதிர்காலம் குறித்து விவாதம் தேவை:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

கைகளில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாகத் கூறி, கைகளையே துண்டித்தால் எப்படி இருக்குமோ, அதேபோன்ற நிலை தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த  மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் (NEET) ஏற்பட்டிருக்கிறது.

கைகளில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாகத் கூறி, கைகளையே துண்டித்தால் எப்படி இருக்குமோ, அதேபோன்ற நிலை தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த  மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் (NEET) ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவப்படிப்பு: தமிழக மாணவர்களின் 

எதிர்காலம் குறித்து விவாதம் தேவை!

கைகளில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாகத் கூறி, கைகளையே துண்டித்தால் எப்படி இருக்குமோ, அதேபோன்ற நிலை தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த  மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் (NEET) ஏற்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி வணிகம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், ஊரக ஏழை மாணவர்களின் வாய்ப்புகள் மட்டுமே பறிக்கப்பட்டுள்ளன.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்த போது அதற்காக சொல்லப்பட்ட காரணங்களில் முக்கியமானது ‘‘தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையின்றி நடைபெறுகிறது; தகுதியே இல்லாத மாணவர்கள் அவற்றில் சேர்க்கப்படுகிறார்கள்; இந்த நிலை மாற்றப்பட வேண்டும்’’ என்பது  தான். ஆனால், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் எந்த வெளிப்படைத் தன்மையும் ஏற்படுத்தப்படவில்லை. மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்திய மத்திய அரசு, அதனடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கையை நடத்தும் பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைத்திருந்தால் மட்டுமே வெளிப்படைத்தன்மையை உருவாக்கியிருக்க முடியும்.

ஆனால், மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய அளவில் நடத்தி தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் பொறுப்பை தனியார் கல்வி நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. கடந்த காலங்களில் தனியார் மருத்துவக்கல்வி நிறுவனங்கள் எப்படி மருத்துவ இடங்களை விலை பேசி விற்பனை செய்தனவோ, அதேபோல் தான் இம்முறையும் மருத்துவ இடங்களை தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விலை பேசி விற்பனை செய்யப் போகின்றன.

ஏனெனில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 51 ஆயிரம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால், நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் 4.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது ஒரு மருத்துவ இடத்திற்கு 8 பேர் போட்டி போடுகின்றனர். தனியார் கல்லூரிகள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 100 இடங்களுக்கு 800 பேர் போட்டியிட்டால், அவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ, அவர்களின் விண்ணப்பங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் விண்ணப்பங்களை ஏதோ ஒரு காரணம் கூறி கல்லூரி நிர்வாகம் நிராகரிக்கும் ஆபத்து உள்ளது. மாணவர் சேர்க்கையில் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பு இல்லாத பட்சத்தில் அனைத்து விதமான முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டு விடும். எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசுகளே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய சுகாதாரத்துறை ஆணையிட வேண்டும்.

மற்றொருபுறம், மருத்துவ மாணவர் சேர்க்கை இனி தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 12&ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு பயனில்லாமல் போகிறது. அதுமட்டுமின்றி,  தேசிய நுழைவுத் தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ) அதன் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து 3% மதிப்பெண்களுக்கு மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் தமிழக அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களே கைப்பற்றிக் கொள்ளும் நிலை ஏற்படும். மாநிலப் பாடத்திட்டத்தில்  படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகிவிடும். ஐ.ஐ.டி. படிப்பு எப்படி மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு எட்டிப்பிடிக்க முடியாத தொலைவுக்கு சென்று விட்டதோ அதேபோல், மருத்துவப் படிப்புகளும் ஆகிவிடும். இது எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது தான் இந்த பிரச்சினைக்கு  முழுமையான தீர்வாக அமையும். உச்சநீதிமன்றத்தின் கெடுபிடி காரணமாக அது சாத்தியமாகவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வருவது, நுழைவுத் தேர்விலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவது, மாநிலப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும். இது குறித்து  விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக நீதியில் அக்கறையுள்ள கல்வியாளர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>