மதுரை சனாதனிகளுக்கு மீனாட்சியம்மன் கொடுத்த மரியாதை

ஐயப்பன் கோவிலில் 10-50 வயதுடைய பெண்களும் வந்து வழிபட அனுமதித்திருப்பதற்கு, பந்தள மகாராஜாவின் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. வேறு பல சனாதனிகளும் இதனைக் கடுமையாக எதிர்த்து, புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள்.

இப்படித்தான் மதங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் செய்யப்படும் ஒவ்வொரு மாற்றங்களையும் ஒரு கும்பல் எதிர்த்துவந்திருக்கிறது. இவற்றை மீறியே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதற்கு சரியான உதாரணம் மதுரை!

மதுரைக் கோவிலுக்குள் ஒடுக்கப்பட்டவர்கள் நுழைவதை எதிர்த்த மீனாட்சியம்மன் கோவில் பட்டர்கள், முடிவில் பல நூற்றாண்டுகளாக தாங்கள் அனுபவித்துவந்த பல உரிமைகளை இழந்தனர்.

அந்த காலகட்டத்தில் இந்தியாவிலுள்ள பெரும்பலான கோவில்களுக்குள் ஒடுக்கப்பட்டவர்களும் நாடார்களும் செல்ல முடியாது. பிற இடைநிலைச் சாதியினரும் பிராமணர்களும் மட்டுமே சொல்லலாம். அதிலும் பிராமணர்கள், அர்த்த மண்டபம் வரை சென்று வழிபடலாம்.

1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை ஐந்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு நாடாரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மேல் ஜாதி அதிகாரிகள் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்குள் நுழைந்தனர். கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவும் பிற ஊழியர்களும் அவர்களை வரவேற்று மீனாட்சி சன்னதிக்கு அழைத்துச் சென்று சாமியைக் கும்பிட வைத்தனர். அங்கிருந்த பொன்னுசாமி பட்டர் அவர்களுக்கு பிரசாதம் அளித்தார்.
Meenakchi_jakkamma

ஆனால், அதற்கு அடுத்த நாள் , ஜூலை 9ஆம் தேதி முத்து சுப்பர் பட்டர் என்பவர் காலை வழிபாட்டை முடித்துவிட்டு , மாலையில் கதவுகளைத் திறக்க மறுத்தார். சுத்தீகரண சடங்குகளைச் செய்யாமல் கோவில் கதவுகளைத் திறக்க முடியாது என்று கூறினார். சாவிகளைப் பெற நிர்வாக அதிகாரி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

வெளியூருக்குச் சென்றிருந்த சந்து பட்டர் என்பவர் அன்று இரவு ஊர் திரும்பினார். அடுத்த நாள் காலையில் கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

இதற்குப் பிறகு பூஜைக்கு வராத பட்டர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட சந்து பட்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். திருநெல்வேலியிலிருந்து பட்டர்கள் அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடந்தன.
கோவிலை விட்டு வெளியேறிய பூசகர்களுக்கு ‘சனாதனர்’ என்ற வைதீக அமைப்பு பெரும் ஆதரவு அளித்தது. ஒடுக்கப்பட்டோர் கோவிலுக்குள் நுழைவதை இந்த அமைப்பு கடுமையாக எதிர்த்தது. அப்போது செயல்பட்டுவந்த வர்ணாஸ்ரம ஸ்வராஜ்ய சங்கத்தின் (விஎஸ்எஸ்) உறுப்பினர்களாகவும் இந்த அமைப்பினர் இருந்தனர்.

இந்த விஎஸ்எஸ்ஸின் தலைவராக இருந்தவர் நடேச அய்யர். தலித்துகள் நுழைந்ததால் கோவில் அசுத்தப்பட்டுவிட்டது என்றும் தெய்வங்கள் திருக்கோவிலைவிட்டுச் சென்றுவிட்டன என்றும் அறிவித்தார். திருக்கோவிலைச் சுத்தம் செய்தால்தான் தெய்வங்கள் திரும்பவும் கோவிலுக்குள் வருவார்கள் என்றும் அறிவித்தார்.

ஜூலை 13ஆம் தேதி இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அதற்கிடையில் மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றியது. தலித்துகள் கோவிலுக்குள் நுழைய உதவியாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அந்தச் சட்டம் தடை செய்தது. இதனால் நடேச அய்யரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜூலை 29ஆம் தேதி நடேச அய்யர் கோவிலைச் சுத்தம் செய்ய வேண்டுமென கோவிலுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால், நாயுடு சுத்தீகரணச் சடங்குகளைச் செய்யவோ, வேலை நீக்கம் செய்யப்பட்ட பட்டர்களை உள்ளே அனுமதிக்கவோ மறுத்துவிட்டார்.

இந்த மோதல் தொடர்ந்துவந்த நிலையில் , சாமி திருவிழாக் காலங்களில் ஊர்வலம் வரும்போது, பக்தர்கள் யாரும் காணிக்கை செலுத்தக்கூடாது என சனாதனிகள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால், மக்கள் பெருந்திரளாக வந்து தெய்வங்களை வணங்கியதோடு, காணிக்கையும் செலுத்தினர்.
ஜூலை மாத இறுதியில் பல கோவில்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் திறக்கப்பட்டன.

ஆகஸ்ட் ஐந்தாம் தேதி கோவில் நுழைவு அனுமதிச் சட்டம் 22/1939 சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பரில் வைசிராய் இந்தச் சட்டத்திற்கு அனுமதி அளித்தார். இது தொடர்பாக நடேச அய்யர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடியாயின.

மதுரை நகரமெங்கும் சனாதனர்கள் கோவில் நுழைவுக்கு எதிராக கூட்டங்களை நடத்தினர். சந்து பட்டரின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது. 1970கள் வரை இந்த ஒதுக்கல் தொடர்ந்தது.

இதற்கிடையில், கோவில் நுழைவை எதிர்த்த பட்டர்கள் மதுரை நகரில் தற்போது தமிழ்ச் சங்கம் சாலையில், தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் புதிதாக மீனாட்சி சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். அதுவே உண்மையான மீனாட்சி என்றும் கூறினர். ஆனால், இதனைப் பொதுமக்கள் ஏற்கவில்லை.

நான் சிறுவயதில் அந்த இடத்தைப் பார்த்திருக்கிறேன். புதர் மண்டிக் கிடக்கும். ஒடுக்கப்பட்டோரை அனுமதித்த மீனாட்சியம்மன் கோவிலோ, பக்தர் கூட்டத்தாலும் வழிபாட்டாலும் ஜொலிஜொலிக்கும்.

1939லிருந்து 1945வரை இந்த பட்டர்கள் கோவிலிலிருந்து நீங்கியிருந்தனர். இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவில் சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ‘சுத்தீரகணச் சடங்கு ஏதும் செய்யப்பட மாட்டாது. நிர்வாக அதிகாரியின் உத்தரவே இறுதியானது’ போன்ற நிபந்தனைகளை ஏற்று 1945ல் பட்டர்கள் திரும்பவும் கோவிலுக்குள் வந்தபோது, அவர்களுக்கு நிர்வாகத்திலும் கோவிலுக்குள் தங்கள் நிலையிலும் பழைய செல்வாக்குக் கிடைக்கவில்லை.

மதுரைக் கோவிலில் ஒடுக்கப்பட்டவர்களும் நாடாரும் நுழைந்தால் கோவில் தீட்டுப்பட்டுவிடும் என்று கூறப்பட்ட காலத்தில், புறத் தோற்றத்தில் ஜாதி அடையாளம் தெரியாத ஒடுக்கப்பட்டவர்களும் நாடார்களும்கூட, இந்தத் தடையை மீறி கோவிலுக்குள் செல்ல மாட்டார்கள். காரணம், தன்னால் தெய்வம் தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்ற நம்பிக்கைதான்.

ஆனால், இந்த தீட்டு என்பது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இல்லாமல் போனது. முடிவில் சட்டமே நின்றது. ஆனால், அதற்குப் பின்னால் மாநில அரசின் அரசியல் உறுதி இருந்தது.

இந்த ஐய்யப்பன் கோவில் விவகாரத்திலும் மாநில அரசும் சட்டமும் உறுதியாக இருந்தால், யார் இந்த மாற்றங்களை எதிர்க்கிறார்களோ, அவர்களே செல்வாக்கு இழப்பார்கள். தெய்வங்கள் மக்களால் உருவாக்கப்பட்டவை.

Via: Muralidharan Kasi Viswanathan

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>