போலி நகை – ரூ. 20.55 கோடி கடன் வாங்கிய 2 பேரின் ஜாமீன் ரத்து

சென்னை: போலி நகைகளை அடமானம் வைத்து 20 கோடியே 55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. செங்குன்றத்தைச் ேசர்ந்த ஜெ.ஸ்ரீராம் மற்றும் அவரது கூட்டாளி கே.பத்மநாபன் ஆகியோர் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள கர்நாடகா வங்கியில் கடந்த 2010 முதல் நகைக் கடன் பெற்றுள்ளனர். ஸ்ரீராம் செங்குன்றத்தில் லட்சுமி தங்க நகை மாளிகை என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2016 ஆகஸ்ட் முதல் வாரத்தில் வங்கி விஜிெலன்ஸ் பிரிவு அதிகாரிகள் கர்நாடகா வங்கியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஸ்ரீராம் மற்றும் பத்மநாபன் ஆகியோர் வங்கியில் அடமானம் வைத்த நகைகள் போலியான நகைகள் என்று தெரியவந்தது.

போலி நகைகளை அடமானம் வைத்து அவர்கள் 20 கோடியே 55 லட்சம் கடன் பெற்றுள்ளனர் என்றும் இதற்கு வங்கியின் முன்னாள் மேலாளர்கள் வசந்தா செனாய், சுராஜ், நகை மதிப்பீட்டாளர் புண்ணியகோடி ஆகியோர் உதவியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்ரீராம், பத்மநாபன் உள்ளிட்ட 5 பேர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வசந்த செனாய் தலைமறைவானார். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஸ்ரீராம் மற்றும் பத்மநாபன் ஆகியோர் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். அவர்கள் பெற்ற ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடகா வங்கியின் மூத்த கிளை மேலாளர் வி.கே.மூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வி.பி.செங்கோட்டுவேல் வாதிடும்போது, போலி நகைகளை அடமானம் வைத்து வங்கிக்கு ₹20 கோடியே 55 லட்சம் இழப்பை ஏற்படுத்திய 2 பேர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர். ஜாமீனுக்காக இருவரும் டெபாசிட் செய்த சொத்து மதிப்பு மிகக்குறைவு. இதை செஷன்ஸ் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. எனவே, இருவரின் ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வங்கிக்கு மிகப்பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தி 2 பேரும் அப்பாவி மக்களின் பணத்தை சுருட்டியுள்ளனர்.
இந்த பணத்தை அதிகாரிகள் மீட்க வேண்டும்.

எனவே, இருவருக்கும் செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. அவர்கள் மோசடி செய்துள்ள பணத்தை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இருவரின் சொத்துக்களையும் வங்கி அதிகாரிகள் முடக்கும் நடவடிக்கைக்கு சென்னை போலீஸ் துணைக் கமிஷனர் உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>