பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : ஆட்டோ, கால் டாக்சிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறது

பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : ஆட்டோ, கால் டாக்சிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறது

சென்னை: பேருந்து ஊழியர்களின் அறிவிக்கப்படாத திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

போக்குவரத்துகள் இயங்காததால் பயணிகள் மின்சார ரயில்கள், மெட்ரோ உள்ளிட்டவற்றை நாடிச் சென்றாலும், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.

நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திடீரென அரசுப் பேருந்துகள் இயக்கங்கள் குறைந்தன. புறப்பட்ட பேருந்துகளும் ஆங்காங்கே பயணிகளை இறக்கி விட்டு பணிமனைகளுக்கு திரும்பின. இதனால் பல்வேறு பேருந்து நிலையங்களில் அலுவல் முடித்து வீடு திரும்ப முடியாமல் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

பின்னர், மின்சார ரயில்களையும் மெட்ரோவையும் நாடிச் சென்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்டோக்கள் மூன்று மடங்கு கட்டணம் வசூலித்ததாகவும், இதர தனியார் வாகனங்களும் கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தி விட்டதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சென்னையை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், திருவண்ணாமலை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. சில பகுதிகளில் போராட்ட அறிவிப்புக்கு முன்னரே போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய பகுதிகளில் 99 சதவீதம் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

நாமக்கல்லில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். இன்றும் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அலுவலகம் மற்றும் இதர பணிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில், 20 சதவீத பேருந்துகளே இயக்கப்படுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்துகள் இயக்கப்படாததால் மின்சார ரயில்களில் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது.

பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>