புற்று நோய், நீரிழிவு, இதய நோயை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை: மத்திய அரசு புதிய திட்டம்

புற்று நோய், நீரிழிவு, இதய நோயை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை: மத்திய அரசு புதிய திட்டம்

புற்று நோய், நீரிழிவு, இதய நோயை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை: மத்திய அரசு புதிய திட்டம்

புதுடெல்லி: வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த பிரச்னைகள் மக்களை பாதித்து வருகின்றன. இதையொட்டி விழிப்புணர்வு பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது கேன்சர் உள்ளிட்ட நோய்களை கண்டறியும் வகையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 100 மாவட்டங்களில் இதை செயல்படுத்த உள்ளது. இதை தொடர்ந்து படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவில் இந்த நோய்களின் பாதிப்பு காரணமாகவே 35 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். 55 சதவீதம் உயிரிழப்புகள் 30 முதல் 69 க்கு உட்பட்ட வயதில் முதுமைக்கு முன்பே உயிரிழக்கும் நிலை உள்ளது. மத்திய அரசின் இந்த திட்டம் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஏற்கனவே இது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 100 மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்’ என்றார்.

முதல் கட்டமாக இதற்காக ரூ.232 கோடி செலவிடப்பட உள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீதித் தொகையை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். வட கிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்களில் 90 சதவீத நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தன்னார்வ நிறுவனங்களும் இணைத்துக்கொள்ளப்படும் . இவற்றில் ஈடுபடும் குழுக்களுக்கு சிறிய அளவிலான பரிசோதனை கருவிகளும் வழங்கப்படும். இவர்கள் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து, ரத்த மாதிரிகளை சேகரிப்பர். ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட மருத்துவமனைகளில் இதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘25 சதவீதம் இந்தியர்கள் முதுமைக்கு முன்பே இறக்கும் அபாயத்தில் உள்ளனர். இவை பெரும்பாலும் தொற்று அல்லாத நோய்களான கேன்சர், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் மரணம் ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இவை பெரும்பாலும் தீர்வு காணப்படக் கூடிய நோய்களாகும் என்பதும் கவனிக்கத்தக்கது. நீரிழிவு பாதிப்பு காரணமாக இந்தியர்கள் அண்மை காலமாக பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 2013ம் ஆண்டு கணக்கின்படி 6 கோடியே 30 லட்சம் பேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இது அடுத்த 15 ஆண்டுகளில் 10 கோடியே 12 லட்சமாக உயரக் கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தொற்று அல்லாத நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு மிகப் பெரிய அளவில் செலவு ஏற்படுகிறது. ஹார்வர்டு பல்கலை கழகம் நடத்திய ஆய்வில் 2012 முதல் 2030 வரையிலான கால கட்டத்தில் இந்தியாவில் இதற்காக 4.58 டிரில்லியன் டாலர் அதாவது சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக இதய நோய் சிகிச்சைக்காக 2.17 டிரில்லியன் டாலர், மன நல பிரச்னைகளுக்காக 1.03 டிரில்லியன் டாலர் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவை சராசரி இந்தியர்களுக்கு மிகப் பெரிய சுமையாகவே அமைந்து விடுகிறது. எனவே இந்த வகையில் தொற்று அல்லாத நோய்களை தடுக்கும் விதமாக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>