புதுச்சேரியில் கவர்னரை கண்டித்து முழு அடைப்பு மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1000 பேர் கைது

201707090308119127_Condemned-the-governor-in-PuducherryThe-entire-shutter-was_SECVPF

புதுச்சேரி,

மாநில அரசின் பரிந்துரையின்றி புதுவை சட்டமன்றத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நேரடியாக நியமித்தது. புதுவை அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் ஏற்கனவே அதிகார போட்டி இருந்துவந்த நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்ட விவகாரம் ஆளும் காங்கிரஸ் மற்றும் அரசியல் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த தன்னிச்சையான முடிவினை கண்டித்தும், கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெறக் கோரியும் புதுவையில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதற்கு காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதைத்தொடர்ந்து முழுஅடைப்பு போராட்டம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த முழுஅடைப்பினையொட்டி புதுவை பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், குபேர் பஜார் போன்றவையும் இயங்கவில்லை. முக்கிய வர்த்தக பகுதியான நேருவீதி, அண்ணாசாலை, காமராஜ் சாலை, மி‌ஷன் வீதி, 100 அடி ரோடு என முக்கிய கடைவீதிகளில் இருந்த கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் அந்த சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மருந்து, பால் கடைகள் மட்டுமே திறந்து வைத்து இருந்தனர்.

குடியிருப்பு பகுதியில் இருந்த பெட்டிக்கடைகள் உள்பட அனைத்துக்கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தன. பழைய பஸ் நிலையத்தில் உள்ள உழவர் சந்தையும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் ஓடுகின்றன. பந்த் காரணமாக இந்த பஸ்கள் எதுவுமே ஓடவில்லை. அதேபோல் டெம்போக்களும், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. ஆனால் வழக்கமான போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேநேரத்தில் தமிழக பகுதியில் இருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்கள் காலையில் இயக்கப்பட்டன. இந்தநிலையில் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, மரப்பாலம் சந்திப்பு அருகே தமிழக அரசு பஸ்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

அதேபோல் புதிய பஸ் நிலையம் அருகே புதுவை அரசின் சாலைப் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ், மூலக்குளத்தில் ஆந்திர அரசுக்கு சொந்தமான பஸ், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே வெளிநாட்டினர் வந்த சுற்றுலா பஸ் கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன. இதுதவிர லாரி, டெம்போ மீதும் கல்வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த பஸ்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் புதுவையில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்துக்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியபடி வந்தனர்.

அங்கு திடீரென்று அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், படைப்பாளி மக்கள் கட்சி செயலாளர் வரதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை தலைமை தபால் நிலையம் அருகே தடுப்புகளை அமைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தடுப்புகளை தள்ளிவிட்டு கவர்னர் மாளிகை நோக்கி அவர்கள் செல்ல முயன்றனர். இதைத்தொடர்ந்து 150 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று நடந்த போராட்டங்களின்போது நகரப் பகுதியில் மட்டும் இரா.சிவா எம்.எல்.ஏ. உள்பட சுமார் 750 பேர் கைது செய்யப்பட்டு கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை சிறிது நேரத்தில் போலீசார் விடுவித்தனர்.

புதுவை – கடலூர் சாலையில் அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மறியல் செய்வதற்காக அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி தலைமையில் 300–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திரண்டனர். அப்போது புதுவையில் இருந்து அரியாங்குப்பம் வழியாக கடலூருக்கு கவர்னர் கிரண்பெடி செல்வதாக தகவல் பரவியது.

உடனே ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள், கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டுவதற்காக அங்கு தயாராக இருந்தனர். இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்து, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. உள்பட 300 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

இந்தநிலையில் அரியாங்குப்பம் புறவழிச்சாலை வழியாக கவர்னர் கிரண்பெடி காரில் கடலூருக்கு சென்றார். இதன்பிறகு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>