மதுரை கீழடியில் கிடைத்த பழம்பொருட்களை  காக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

2016-29-9-01-06-14tamil

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரமான மதுரைக்கு அருகில் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வில் 5300&க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழ் நாகரிகத்தின் தன்மையையும், தொன்மையையும் தலைகீழாக மாற்றும் வகையிலான அந்த பொருட்களை தமிழர்கள் பார்வைக்கு வைக்காமல் கிடங்கில் அடைக்கவிருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அரிக்கன்மேடு உள்ளிட்ட 170&க்கும் அதிகமான இடங்களில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றில் கிடைத்த பொருட்களுக்கு இல்லாத சிறப்பும் வரலாறும் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களுக்கு இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். முந்தைய அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் தமிழரின் வாழ்க்கை முறை, வரலாறு ஆகியவற்றை நிரூபிப்பதற்கு உகந்தவையாக மட்டுமே இருந்தன. ஆனால், சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் தமிழர்களின் நாகரிக வரலாற்றையே மாற்றி அமைக்கும் வகையில் உள்ளன. தமிழர்களின் நாகரிகம் கிராமம் சார்ந்தது என்றும், விவசாயம் மட்டுமே அவர்களின் தொழிலாக இருந்தது என்று தான் இதுவரை அறிந்திருக்கிறோம்.

ஆனால், கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருட்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் உள்ளன. கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் கீழடியில் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கு அடையாளமாக 71 தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு பயன்படுத்தப்பட்ட  பொருட்களை வைத்துப் பார்க்கும்போது அங்கு தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும்; அவற்றில் இருந்து தான் அப்பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுடுமண்ணால் ஆன முத்திரைகள், சதுரங்க காய்கள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன. முத்திரைகளை வைத்துப் பார்க்கும் போது அப்போதே முத்திரை குத்திய ஆவணங்களின் அடிப்படையில்  தமிழர்கள் உலககெங்கும் வணிகம் செய்திருக்கின்றனர் என்பதை ஐயமின்றி அறிந்து கொள்ள முடிகிறது.

சங்க காலத்தில் நகர நாகரிகம் செழித்திருந்தது என்பதையும், நாம் நினைப்பதை விட தமிழ் நாகரிகம் தொன்மையானது என்பதையும் கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் நிரூபிக்கின்றன. இவை கிடைப்பதற்கு அரிய பொக்கிஷங்கள் ஆகும். இவற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்காக பாதுகாத்து வைப்பதும்,  அப்பொருட்களின் மூலம் நமது நாகரிகத்தின் வரலாற்றை இப்போதுள்ள தலைமுறைக்கு கற்பிப்பதும் நமது கடமையாகும். அதுமட்டுமின்றி, கீழடியில் பண்டைய தமிழர் நாகரிகத்தின் அடையாளங்கள் 110 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் நிலையில் இதுவரை அரை ஏக்கரில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டால் தமிழர் நாகரிகம் குறித்து இன்னும் வியப்பளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகலாம். ஆனால், மொத்தமுள்ள 110 ஏக்கர் நிலத்தையும் ஆய்வுக்காக பெறுவதில் தொல்லியல் ஆய்வுத் துறையினருக்கு பல நெருக்கடிகள் இருப்பதாக தெரிகிறது.

தொல்லியல் ஆய்வுக்காக கூடுதல் நிலப்பரப்பைப் பெற்றுத் தருவதும், தொல்லியல் ஆய்வில் கிடைத்த  5300 பொருட்களையும் காட்சிக்கு வைப்பதற்கான அருங்காட்சியகத்தை அமைக்க 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதும் தமிழக அரசால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால், தமிழர் நாகரிகம் குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் இல்லாத தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. இதுதொடர்பாக பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அவை செவிடன் காதில் ஊதிய சங்காக பயனற்று போனது சோகம். அதனால், கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் அனைத்தையும் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள்  கர்நாடக மாநிலம் மைசூருக்கு கொண்டு சென்று அங்குள்ள கிடங்கில் போட்டுவைக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அவை கிடங்கில் முடக்கப்பட்டால் தமிழர் நாகரிகம் குறித்த உண்மைகளும் முடக்கப்பட்டுவிடும்.

எனவே, கிழடியில் கிடைத்த பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்காக அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் தமிழக அரசு வழங்க வேண்டும். அதேபோல், கீழடியில் மொத்தமுள்ள 110 ஏக்கர் பரப்பளவுக்கும் தொல்லியல் ஆய்வை விரிவுபடுத்தவும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>