பாந்திரா குடிநீர் குழாய் உடைந்த சம்பவத்தில் உடைமைகளை இழந்து தமிழ் குடும்பங்கள் தவிப்பு

201707090302253171_Bhandra-drinking-water-pipeLosing-possessionsTamil_SECVPF

பாந்திராவில் குடிநீர் குழாய் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உடைமைகளை இழந்து தமிழ் குடும்பங்கள் தவித்து வருகின்றன. அவர்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய் உடைந்து விபத்து
மும்பை பாந்திரா டெர்மினஸ் எதிரே உள்ள இந்திராநகரில் நேற்று முன்தினம் காலை நீரின் அழுத்தம் தாங்க முடியாமல் 92 ஆண்டுகள் பழமையான ராட்சத குடிநீர் குழாய் உடைந்து, அதில் இருந்து தண்ணீர் அசுர வேகத்தில் பீறிட்டு அடித்தது. அப்போது குழாய் அருகே விளையாடி கொண்டு இருந்த பிரியங்கா(வயது9) என்ற சிறுமியும், அவளது தம்பி விக்னேசும்(8 மாதம்) தண்ணீரின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஆவணங்கள் அடித்து செல்லப்பட்டன
இந்தநிலையில் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் அந்த பகுதியில் ஆறு போல வெள்ளமாக ஓடியது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தமிழர்கள் உள்பட சுமார் 50–க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. அங்கு வசித்து வருபவர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

இதேபோல பள்ளி மாணவர்களின் புத்தகங்களும் தண்ணீரில் சென்றன. சிலர் மாற்று துணி கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அரசு உதவ வேண்டும்
இது குறித்து தமிழர் ஒருவர் கண்ணீருடன் கூறியதாவது:–

இந்த பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். திடீரென ராட்சத குடிநீர் குழாய் உடைந்து எங்கள் உடைமைகள் எல்லாம் போய்விட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நாங்கள் இழந்த உடைமைகள், பொருட்கள், ரே‌ஷன்கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்க அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் புத்தகங்கள்…
தாராவி கம்பன் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வரும் பரத் என்ற மாணவன் கூறுகையில், ‘‘குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீரில் எங்கள் வீட்டில் இருந்த எல்லா பொருட்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. பள்ளி புத்தகங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. நாங்கள் தமிழ் வழிக்கல்வி படிப்பதால் அந்த புத்தகங்கள் இங்கு கிடைக்காது.

இங்கு பல தமிழ் குடும்பங்கள் உள்ளன. எனவே இங்குள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்க தமிழ் பிரமுகர்கள் உதவி செய்யவேண்டும்’’ என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>