பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அருகே போகலூரில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கண்மாயின் வடக்கில் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் காந்தி, பூமிநாதன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து, முனைவர் பட்ட ஆய்வாளர் ஹரி கோபால கிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் களஆய்வு செய்தனர்.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு கூறியதாவது

”வைகை ஆற்றில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள இப்பகுதி காத்தான் ஓடை மூலம் ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்கரையில் உள்ள முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலின் சுற்றுப் பகுதியில் புதிய கற்காலக் கற்கோடரி, தானியங்களை அரைக்க பயன்பட்ட அரைப்புக்கற்கள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடுகள்,மட்பாத்திரங்களை வைப்பதற்குரிய பானைத் தாங்கிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள்,சிவப்பு நிற பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்குப் பயன்படும் தக்களி, வட்டச் சில்லுகள், சுடுமண் கெண்டியின் உடைந்தபகுதி, கைப்பிடி, மான் கொம்பு, இரும்பு தாதுக்கள், இரும்புக்கழிவுகள், இரும்புக் கத்தியின் முனைப்பகுதி ஆகியவற்றை கண்டெடுத்துள்ளோம்.
ko1jpg

புதிய கற்காலம் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான்.

போகலூரில் கிடைத்த கற்கோடரி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. இதன் நீளம் 7 செ.மீ. அகலம் 5.5 செ.மீ. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். இதன் மேல்பகுதியில் சிறு சிறு துளைகள் உள்ளன. இது அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இதன் அகன்ற வெட்டும் பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி கூர்மை குறைந்தும் உள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.

புதிய கற்காலக் கருவிகள், வட தமிழ்நாட்டில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழ்நாட்டில் சமயநல்லூர், கீழடி உள்ளிட்ட ஒருசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>