நரேந்திர மோடி, என்னை கொலை கூட செய்யலாம்:அரவிந்த் கேஜரிவால்

நரேந்திர மோடி, என்னை கொலை கூட செய்யலாம்:அரவிந்த் கேஜரிவால்

நரேந்திர மோடி, என்னை கொலை கூட செய்யலாம்:அரவிந்த் கேஜரிவால்

“ஆம் ஆத்மி கட்சியை அழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, என்னை கொலை கூட செய்யலாம்’ என்ற கடும் குற்றச்சாட்டை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை முன்வைத்தார்.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்காக கேஜரிவால் பேசிய 10 நிமிட விடியோ, இணையத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அந்த விடியோவில், அவர் பேசியிருப்பதாவது:

ஆம் ஆத்மியின் தொண்டர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது, நாம் இப்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தான். எதிர் வரும் நாள்களில் இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.

கொலை செய்யப்படலாம்: ஆம் ஆத்மியை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் (பிரதமர் மோடி) எந்த எல்லைக்கும் செல்வார். நாம் கொலை செய்யப்படலாம். நான் கூட கொல்லப்படலாம். எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் மட்டும், எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள். எதையும் தாங்கும் வலு இல்லாதவர்கள், விலகி சென்றுவிடுங்கள்.

நாட்டுக்கு ஆபத்து: நாட்டின் பிரதமர், கோபத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளத் தொடங்கினால் அது நாட்டுக்கே ஆபத்தாக முடிந்து விடும். ஆம் ஆத்மிக்கு எதிராக கோபத்தில் முடிவுகளை எடுக்கும் பிரதமர், அதேபோன்றுதான் பிற விவகாரங்களில் முடிவுகளை எடுத்திருப்பார். இதனால், நமது நாடு பாதுகாப்பான நபரின் கரங்களில் தான் இருக்கிறதா? என்ற கேள்வியெழுகிறது.

சதித் திட்டம்: ஆம் ஆத்மியை நசுக்க வேண்டும் என்பதற்காக சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதற்கு மூளையாக இருப்பவர் மோடிதான். தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர இரட்டை பதவி வகிப்பதாக பொய் குற்றச்சாட்டை கூறி, 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் பதவியை பறிக்கவும் முயற்சி நடக்கிறது.

இதற்கு என்ன காரணம்? தில்லி மக்களின் நலனுக்காக ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும் பணிகளை மோடியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ தில்லி பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வியையும் அவர் இன்னும் மறக்கவில்லை என்கின்றனர். இன்னும் சிலர், அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறும் பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு பெருகி வரும் ஆதரவை மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கின்றனர்.

மோடி விரக்தி: ஆம் ஆத்மி அரசை முடக்க வேண்டும் என்பதற்காக தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை, சிபிஐ, காவல்துறை, வருமான வரித் துறை ஆகியவற்றை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், நமது துணிவை அசைக்க முடியவில்லை. நாம் வளைந்து கொடுக்கவில்லை. இதனால், பிரதமர் மோடி கடும் விரக்தியில் இருக்கிறார். அவர் அடுத்து என்ன செய்வார் எனத் தெரியாது.

இரு வழிகள்: ஆட்சிக் கட்டிலில் அமர இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று, நம்மை போல சமூக பணியாற்றி, மக்களின் ஆதரவோடு ஆட்சியை பிடிப்பது. மற்றொன்று, எதிர்க்கட்சிகளை எப்படியாவது ஒழித்துகட்டிவிட்டு ஆட்சியில் அமர்வது. அதைத் தான், பாஜக செய்து கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் நிலையற்ற வெளியுறவுக் கொள்கைகளால், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடான இந்தியாவின் உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சீர்கெட்டுள்ளது என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ள கேஜரிவாலுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. “பிரதமரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்’ என்று கேஜரிவாலுக்கு பாஜக அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பிரதமர் மோடி மீது கேஜரிவால் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள், கண்டிக்கத்தக்கவை. வெட்ககேடான கருத்துக்களை அவர் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராகவும், நன்னடத்தைகள் குறித்தும் பேசும் அவர், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட தனது கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக நிற்பது ஏன்? சட்ட விதிகளை மீறுவோர் யாராக இருந்ததாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த் சர்மா.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>