தொப்பி சின்னம்: டி.டி.வி.தினகரன் கோரிக்கை நிராகரிப்பு

201712041251542267_Decision-to-allocate-hat-symbol-for-Ttv-Dinakaran-at-4-pm_SECVPF

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த தேர்தல் கமிஷன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறு தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி அவரது சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி இந்தர்மீத் கவுர் முன்னிலையில் நடைபெற்றது. டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் ஆகியோர் ஆஜரானர்கள்.

இந்த மனுவின் மீதான விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்க கோரி ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், பாலாஜி சீனிவாசன் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதி இந்தர்மீத் கவுர், ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமிஷன் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவின் மீதான விரிவான விசாரணையை இன்று (அதாவது நேற்று) மேற்கொள்ளப்போவது இல்லை என்று கூறினார்.

அதேநேரத்தில், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக கூறிய அவர் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அத்துடன் அந்த வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 12-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்கு முன்பாக அனைவரும் நோட்டீசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டார்.

பின்னர் டி.டி.வி.தினகரனுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் ஒதுக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட கோரும் மனு மீது நீதிபதி இந்தர்மீத் கவுர் விசாரணை நடத்தினார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால்தான் தேர்தல் கமிஷன் முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்தது. தற்போது தேர்தலை தள்ளிவைக்கும் நோக்கத்திலேயே இந்த வழக்கை அவர் தாக்கல் செய்து உள்ளார். தொப்பி சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம்.

தேர்தல் விதிமுறைப்படி சுயேச்சை வேட்பாளர்களில் யாருக்கு, என்ன சின்னம் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதியின் தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்ய முடியும். இந்த பிரச்சினையில் கோர்ட்டு உத்தரவிட முடியாது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பலர் போட்டியிடுகின்றனர். அவர்கள் தங்களுக்கு குறிப்பிட்ட சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோருகின்றனர். தேர்தல் கமிஷன் அந்த குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்காத பட்சத்தில் அத்தனை பேரும் கோர்ட்டை அணுகினால் என்ன செய்வீர்கள்? டி.டி.வி.தினகரன் எந்த கட்சியையும் சாராத சுயேச்சை வேட்பாளர். அப்படி இருக்க அவர் தனக்கு இந்த சின்னம் தான் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. ஒத்திவைக்கப்பட்டுத்தான் தற்போது மீண்டும் நடைபெறுகிறது. மேலும் கடந்த முறை மனுதாரருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டதன் அடிப்படையில், இப்போது அந்த சின்னத்தை மீண்டும் அவருக்கே வழங்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை வெளியிட்டு, மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதனால் உடனடியாக மேல்முறையீடு செய்ய எங்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. மேலும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தற்போது கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

மனுதாரர் சுயேச்சை வேட்பாளர் அல்ல. அவர் அ.தி.மு.க.வின் ஒரு குழுவின் சார்பில்தான் வேட்பாளராக மனு தாக்கல் செய்து இருக்கிறார். அவருக்கு 5 அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. அவருக்கு ஏற்கனவே கடந்த முறை தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. எனவே இப்போதும் மனுதாரருக்கு தொப்பி சின்னம் வழங்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்தர்மீத் கவுர் டி.டி.வி.தினகரன் தரப்பு கோரிக்கையை நிராகரித்தார்.

இந்த மனுவில் கோரிக்கை விடுத்து இருப்பது போல், மனுதாரருக்கு தொப்பி சின்னம் வழங்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, தேர்தல் அதிகாரியே சின்னம் வழங்குவது தொடர்பாக முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>