துக்ளக் ஆட்சி:பாமக நிறுவனர் மரு. இராமதாஸ்

thukluk-mod

மரு. இராமதாஸ் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முகமது பின் துக்ளக் நடத்திய மூடத்தனமான ஆட்சியை பார்க்கவும், படிக்கவும் தவறியவர்களுக்கு வாழும் உதாரணமான நடைபெற்றுக் கொண்டிருப்பது தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஏட்டிக்குப் போட்டி அரசாகும். கடலூரில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அவர் அறிவித்த திட்டங்களைப் பார்க்கும் போது அப்படித் தான் நினைத்து சினம் கொள்ளத் தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மக்களுக்கு ஏராளமானத் திட்டங்களை அறிவிப்பதாகக் கூறி, ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடம் தடுப்பணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கிடைக்காததால் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவை அனைத்தும் வெற்று அறிவிப்புகளே தவிர, உடனே செயல்படுத்தப்படவுள்ள அறிவிப்புகள் அல்ல.

கடலூர், நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் நாகை மாவட்டம், குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டப்படும் என்று 04.08.2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பின் 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இப்போது தான் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். ரூ.400 கோடி திட்டத்திற்கு 40 நாட்களில் திட்ட அறிக்கை தயாரித்து விட முடியும். ஆனால், இதற்கு 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணாக்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கு நபார்டு வங்கியின் நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக மானியக் கோரிக்கையில் அரசே கூறியுள்ள நிலையில், உடனடியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பில்லை. அந்த வகையில் தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்பது வெற்று அறிவிப்பு என்பதில் சந்தேகமில்லை.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கிடைக்காததால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திட்டக்குடி பகுதிக்கு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தான் துக்ளக் தனமான அறிவிப்பாகும். கொள்ளிடம் ஆற்றில் ஜெயலலிதா அறிவித்த தடுப்பணை ரூ.400 கோடியில் 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருந்தால் இந்தத் திட்டம் தேவையில்லை. அதுமட்டுமின்றி, கொள்ளிடம் கடலில் கலக்கும் அளக்குடி பகுதியில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் கொள்ளிடத்தில் 20 கி.மீ. தொலைவுக்கு கடல்நீர் உட்புகுந்து முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் நீர் உட்புகுந்ததால் நிலத்தடி நீரும் உப்பாக மாறிவிட்டது. இதனால், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர் விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி விட்டன. இதையெல்லாம் தடுத்திருந்தால் கடலூர் மாவட்டத்தில் சுவையான நிலத்தடி நீர் குறைந்த ஆழத்தில் கிடைத்திருந்திருக்கும். ஆனால், நல்ல நீரை உப்பு நீராக்குவதற்கான அனைத்து சதிகளையும் செய்து விட்டு, இப்போது உப்பு நீரை நல்ல நீராக்கும் திட்டத்தை ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்போவதாக முதலமைச்சர் கூறுகிறார்.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கிடைக்காததால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப்படி தண்ணீர் வழங்க முடியவில்லை என்று கூறுகிறார். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வழியாக மட்டும் 900 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டியிருந்தால் கடலூர், நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பெருகியிருந்திருக்கும். ஆனால், அதை செய்ய பினாமி அரசு தவறி விட்டது.கடலூர் மாவட்டத்தில் புளியங்குடி, அரசூர், நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாக்குடி ஆகிய இடங்களில் கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களிலும் 50 அடி ஆழத்திற்கும் மேலாக மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்காததற்கு இது தான் காரணம் ஆகும். இதையெல்லாம் தடுக்கத் தவறிய எடப்பாடி பழனிச்சாமி இப்போது புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறுவது துக்ளக் பாணி அறிவிப்பு என்பதைத் தவிர வேறு என்ன?

கொள்ளிடம் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. பல கட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. அதனடிப்படையில் 2014ஆம் ஆண்டிலேயே கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறை இதற்கான திட்ட மதிப்பீட்டை தமிழக அரசுக்கு அனுப்பிவிட்டது. அதனடிப்படையில் இத்திட்டத்தை அறிவிப்பதற்கு பதிலாக புதிதாக ஆய்வு நடத்தப்படும் என்று முதல்வர் கூறியிருப்பது அத்தியாவசியமான இத்திட்டத்தை தட்டிக்கழிக்கும் செயலாகும். மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தாமல் ஊழல் செய்வதில் மட்டுமே தீவிரம் காட்டம் இந்த அரசு எப்போது ஒழியும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. அதை உணர்ந்து பினாமி அரசு பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>