திருமணத்திற்கு பின்பும் அம்மா என்னை திட்டினார்..’ ஹேமமாலினி

hema-malini759

1968–ல் ஹேமமாலினியின் முதல் இந்திப் படமான ‘சப்னோன் கா சாதாகர்’–க்கு ‘கனவுக்கன்னி ஹேமமாலினி நடிக்கும்…’ என்று விளம்பரம் செய்தார்கள். இன்றும் இந்திய சினிமாவின் ‘கனவுக்கன்னி’ இவர்தான் என்கிறார்கள்.

இந்தித் திரையுலகுக்கு தமிழகத் தஞ்சை மண் தந்த தாரகை, ஹேமமாலினி. ஒரு பரதநாட்டியக் கலைஞராக ஆரம்பித்து, நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகி, திரைப்பட அமைப்புகளில் நிர்வாகி, அரசியல்வாதி என்று அனேக அவதாரங்கள் எடுத்தவர்.

எல்லாவற்றையும் தாண்டி தனது பரதநாட்டியக் காதலை இவர் கைவிடவே இல்லை. இன்றும் நேரடி பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இவரது பெரும்பாலான படங்களிலும் ஒரு பரதநாட்டியப் பாடலாவது இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டார்கள் அவரது இயக்குநர்கள். அது ஹேமமாலினியின் பரதநாட்டிய அறிவின் காரணமாகத்தானா என்று கேட்டால், ஆமோதிப்பதாகத் தலையசைக்கிறார்.

‘‘ஆமாம். ‘அபிநேத்ரி’, ‘‌ஷராபாத்’ போன்ற படங் களில் என் கதாபாத்திரங்கள் பரதநாட்டியப் பின்னணி கொண்டவை. ஆனால் நான் முதல்முதலாக கவர்ச்சியைக் குறைத்து நடித்த ‘ஜகான் பியார் மிலே’ போன்ற படங்களிலும் என்னுடைய நாட்டியத் திறமையை வெளிக்காட்டும் வகையில் பாடல் காட்சிகளை அமைத்தார்கள்…’’ என்று கூறும் ஹேமமாலினி, இன்னொரு கசப்பான வி‌ஷயத்தையும் நினைவுகூர்கிறார்!

‘‘என்னுடைய முதல் படத் தயாரிப்பாளரான ஆனந்தசாமி, என்னை ஏழாண்டு கால ஒப்பந்த வளையத்துக்குள் வைத்திருந்தார். அப்போது, நான் எந்தப் படங்களில் நடிப்பது என்று அவர்தான் முடிவு செய்வார், நான் சம்பாதித்ததில் ஒரு பகுதியையும் வாங்கிக்கொண்டார். ஆனால் அவர் எனக்கு நல்ல படங்களாகத்தான் தேர்வு செய்து கொடுத்தார். இருந்தபோதும், ‘ஷோலே’ படத்துக்கு முன் அவரை என் தாயார் வெளியேற்றிவிட்டார்.’’ என்கிறார்.

‘ஷோலே’ படத்துக்கு முன்பு வரிசையாக வந்த ‘ஹிட்’ படங்கள் ஹேமமாலினியை இந்தி சினிமாவில் ‘நம்பர் 1’ இடத்துக்குக் கொண்டுபோயின. அதற்கு தனது ஆரம்ப கால இயக்குநர்களுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

பரதநாட்டியம் கற்றது, சினிமாவுக்கு வந்தது தனது தாய், மறைந்த ஜெயா சக்கரவர்த்தியின் விருப்பம்தான் என்கிறார் ஹேமமாலினி.

‘‘நடிகையாக இருப்பதில் ஒன்றும் தவறில்லை என்பது எங்கம்மாவின் கருத்து. வைஜெயந்திமாலாஜி, பத்மினிஜி போன்றோரை எல்லாம் அவர் சுட்டிக்காட்டுவார். வைஜெயந்திமாலாஜி, நான் எல்லாம் இந்திக்கு வருவதற்கு முன் தமிழ்ப் படங் களில் நடித்தோம். ஒரு தமிழ்ப் படத்தில் இருந்து நானும் ஜெயலலிதாவும் வெளியேற்றப்பட்டதெல்லாம் நடந்தது. அப்போது எனக்கு 14 வயதுதான்!’’ என்று புன்னகைக்கிறார்.

ஹேமமாலினியின் மறக்க முடியாத திரைப்பட காலகட்டம், 1980–ல் தான் கரம் பிடித்த தர்மேந்திராவுடன் தொடர்ந்து இணைந்து நடித்தது.

இருவரும் 28 படங்களில் சேர்ந்து நடித்தனர். அதில் முதல் 11 படங்கள் பெரும் வெற்றிப் படங்கள்.

‘‘நீங்கள் இருவரும் எப்போது முதல்முதலாகச் சந்தித்தீர்கள்?’’ என்ற கேள்வியைக் கேட்டதும் ஹேமமாலினியின் முகத்தில் புன்னகை அரும்புகிறது.

‘‘கே.ஏ. அப்பாசின் படமான ‘ஆஸ்மான் மகால்’–ன் சிறப்புக் காட்சி அது. நான் அப்போதுதான் எனது முதல் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தேன். அந்தச் செய்தி பரவியிருந்தது. சிறப்புக் காட்சி நடைபெற்ற திரையரங்குக்கு நான் சென்றபோது அங்கு ஓர் ஓரமாக தர்மேந்திராவும் சசிகபூரும் நின்று பஞ்சாபி மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும், ‘இந்தப் பொண்ணு அழகா இருக்கால்ல?’ என்கிற மாதிரி ஏதோ சொன்னார்கள்’’ –ஹேமமாலினியின் புன்னகை, சிரிப்பாக விரிகிறது.

ஹேமமாலினியிடம் பலரும் வியக்கும் வி‌ஷயம், அவர் எந்தக் குழப்பமும் இன்றி தனது இல்லறத்தை நடத்திச் சென்றதுதான். தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியானாலும், அவரது முதல் குடும்ப விவகாரத்தில் எப்போதும் இவர் தலையிட்டதில்லை. அதேநேரத்தில் தானும், தனது மகள் ஈஷா, அகானாவும் தேடும் நேரத்தில் அங்கே தர்மேந்திரா இருப்பார் என்கிறார், ஹேமமாலினி.

‘‘எனது பரதநாட்டியம் மலிவானது அல்ல, அது ஒருவகையில் தெய்வீகமானது என்று நான் அவருக்கு தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. அதன்பிறகு தான் மகள்கள் நடனம் கற்கச் சம்மதித்தார். நானும் மகள்களும் சேர்ந்து நடனமாடும் நிகழ்ச்சிகளை அவர் பார்ப்பார். அதன்பிறகு, ‘நீங்கள் இன்னும் உங்கம்மாவைப் போல நன்றாக ஆட வேண்டும்’ என்று என் மகள்களிடம் கூறுவார்’’ என்று சொல்லும் ஹேமமாலினி, இன்றும் கூட தான் மேடையில் நடனமாடுவதில் தர்மேந்திராவுக்கு அவ்வளவாக இஷ்டமில்லை.மேடையில் நான் நடனமாடுவதைப் பார்க்கும்போது, தனக்குச் சம்பந்தமில்லாத யாரோ ஒருவர் ஆடுவது போலத் தோன்றுவதாக அவர் சொல்கிறார்’’ என்று விளக்கம் தருகிறார், ஹேமமாலினி.

ஒரு தாயாக தனது கடமையைச் சரியாகச் செய்த நிறைவு ஹேமமாலினிக்கு இருக்கிறது.

‘‘நான் ஒரு பொறுப்பான அம்மா. மகள்களின் சிறுவயதில் நானே அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். அதில், எனக்குப் பிடித்த பாடமான வரலாறும் அடங்கும். அதேபோல, மும்பையில் இருக்கும் நாட்களிலெல்லாம் நானே அவர்களை பள்ளியில் கொண்டுபோய் விடுவதை வழக்கமாய் வைத்திருந்தேன். சொல்லப் போனால், என்னால் படப்பிடிப்புக்கு காலை 11.30 மணிக்குத்தான் வர முடியும். சரியென்றால் சொல்லுங்கள், இல்லாவிட்டால் வேறு நடிகையைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று முன்நிபந்தனை போட்டுவிடுவேன்’’ என்கிறார்.

தன்னுடைய அம்மாவுடன் ஒப்பிடும்போது தான் ஒன்றும் கண்டிப்பான அம்மா இல்லை என்று ஹேமமாலினி சொல்கிறார்.

‘‘எனக்குத் திருமணமான பின்பும் அம்மா என்னிடம் கண்டிப்பாக இருந்தார். ஒருநாள் அவர் அப்படி ஏதோ சொல்ல, ‘‘நீ ஏன் என்னை எப்பவும் கண்டிச்சுக்கிட்டும் திட்டிக்கிட்டும் இருக்கே?’’ என்று நான் கோபமாய் கேட்க, அவர் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அன்றிலிருந்து அவர் என்னை எதுவும் சொல்வதில்லை. இப்போ அம்மா இல்லாததை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.’’ என்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>