தமிழ்நாட்டில் ஊழல் அரசு தொடர ஆளுனர் துணை போகக் கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

1a_11503

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அதிமுகவின் தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுனர் மும்பை பறந்து சென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் ஆளுனரிடம் ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் மனு அளிப்பதும், அந்த மனுக்கள் மீது ஆளுனர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடுவதும் வாடிக்கையான ஒன்று தான். அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், ஓர் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக ஒரே ஒரு உறுப்பினர் மனு அளித்தாலும் கூட, அதனால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என்றால், உடனடியாக பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அரசுக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும். மற்ற மனுக்களைப் போன்று இந்த மனுவையும் ஆளுனர் கிடப்பில் போட முடியாது. ஏனெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுனர்களுக்கு உள்ள முதல் கடமையும், நடைமுறையில் உள்ள ஒற்றைக் கடமையும் தங்கள் நிர்வாகத்தில் உள்ள மாநிலத்தில் பெரும்பான்மை வலிமை உள்ள கட்சியை ஆட்சியில் அமர்த்துவதும், பெரும்பான்மை இழந்து விட்டால் அந்த அரசை பதவி நீக்குவதும் தான். அந்தக் கடமையைக்கூட ஆளுனர் தட்டிக் கழிக்கக் கூடாது.

தினகரன் அணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவை திரும்பப் பெற்றுவிட்ட நிலையில், பினாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. இத்தகைய சூழலில் பினாமி முதலமைச்சரை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆணையிடுவது தான் ஆளுனர் செய்ய வேண்டிய பணியாகும். இதற்காக எந்த சட்ட வல்லுனரிடமும் கருத்துக் கேட்கக்கூட தேவையில்லை. ஆனால், அதை செய்யாமல் தினகரன் அணியினரிடம் கடிதங்களை வாங்கிய உடன் அதைப் படித்துக் கூட பார்க்காமல் மராட்டியத்திற்கு ஆளுனர் புறப்பட்டுச் சென்றதன் பொருள் என்ன?

பெரும்பான்மை வலிமை இல்லாத அரசு, எந்த கொள்கை முடிவும் எடுக்க இயலாத காபந்து அரசாக வேண்டுமானால் நீடிக்கலாமே தவிர, அனைத்து அதிகாரங்களும் கொண்ட அரசாக நீடிக்க இயலாது. அவ்வாறு நீடிக்க அனுமதிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும். இவையெல்லாம் இரு மாநிலங்களின் ஆளுனர் பொறுப்பைக் கவனிக்கும் வித்யாசாகர் ராவுக்கு தெரியாத விஷயங்கள் அல்ல. கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சிறிய மாநிலங்களில் இத்தகைய சூழல்கள் பல முறை ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம், ஆதரவை திரும்பப் பெற்றதாக கடிதம் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுனர் மாளிகை வளாகத்தை விட்டு வெளியேறும் முன்பாகவே, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுனர்கள் ஆணையிட்டிருக்கின்றனர்.

இவ்விஷயத்தில் உரிய முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவது குதிரை பேரத்துக்குத் தான் வழிவகுக்கும். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு தொடர ஆளுனர் துணைபோகக்கூடாது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக சட்டப்பேரவையை இந்த வாரத்திற்குள் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நாடகத்தில் ஆளுனரையும் ஒரு பாத்திரமாகவே மக்கள் பார்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>