தமிழ்நாடு சட்டமன்றம்

சென்னை,

Sattasabai copy

வீராணம் திட்டத்தை கையில் எடுக்க தி.மு.க.வுக்கு துணிவு இல்லை என்றும், புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்து வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளேன் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவேசமாக கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை தொகுதி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

உறுப்பினர் மா.சுப்பிரமணியன்:- வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையை சபாநாயகர் நடத்திக்கொண்டிருக்கிறார். நடுநிலையோடு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சபாநாயகர் ப.தனபால்:- இந்த அவை நடுநிலையோடு தான் நடக்கிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- உறுப்பினர் தனது பேச்சின் தொடக்கத்திலேயே வரலாற்று சிறப்புமிகுந்த இந்த சட்டமன்ற பேரவை என்று குறிப்பிட்டார். அவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவை என்பதால்தான் இதையே தூக்கியெறிந்துவிட்டு, ஓமந்தூரார் எஸ்டேட்டில் கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டிடத்தை எழுப்பி அங்கே கொண்டுபோய் வைத்தார்களா என்பதை உறுப்பினர் தெரிவிக்க வேண்டும்.

உறுப்பினர் மா.சுப்பிரமணியன்:- 155 வார்டுகளை கொண்டதாக இருந்த சென்னை மாநகராட்சி 200 வார்டுகளை கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ‘கிளன் சிட்டி’ அவார்டு கிடைத்தது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- நகர மக்கள்தொகை 48 சதவீதத்தை எட்டிவிட்டதாக உறுப்பினர் இங்கே தெரிவித்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தான் ஊராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு அனைத்து வசதிகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், விருதுகளை பற்றியும் உறுப்பினர் இங்கே பேசினார். அ.தி.மு.க. ஆட்சியில் தான் சென்னை மாநகராட்சி 5 விருதுகளை வாங்கியுள்ளது. நீங்கள் (தி.மு.க.) 10 விருதுகளை வாங்கினால் நாங்கள் (அ.தி.மு.க.) 100 விருதுகளை வாங்குவோம்.
உறுப்பினர் மா.சுப்பிரமணியன்:- சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது வாங்கிய விருதைப் பற்றித் தான் சொன்னேன்.

சென்னையை பற்றி…

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் 5 ஆண்டு காலம் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை, அவர் இந்தத் துறை பற்றிய மானியக் கோரிக்கை தமிழ்நாடு முழுவதற்குமானது என்பதை மறந்துவிட்டு, சென்னையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்.

நேற்றைய தினம் பேசிய இன்னொரு எதிர்க்கட்சி உறுப்பினர் பொன்முடியும் சென்னையில் கட்டப்பட்ட மேம்பாலங்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் எத்தனை சாதனைகளை இந்தத் துறைகளில் செய்திருக்கிறோம் என்பதைப் பற்றி எல்லாம் தெரிந்துகொள்ளாமல், தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் அவர் குறுகிய மனப்பான்மையுடன் சென்னையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவர் சென்னை மேயராக இருந்தவர். இப்பொழுது தமிழ்நாடு முழுவதையும் பற்றியும் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், இந்தியா முழுவதிலும் இன்றைக்கு ஆய்வாளர்கள், மக்கள்தொகை நிபுணர்கள், வளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று சொல்கிறார்கள் என்றால் கிராமங்களில் உள்ள மக்களெல்லாம் குடிபெயர்ந்து நகரங்களுக்கு வருகிறார்கள் என்ற அர்த்தம் அல்ல. கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், இவைகளெல்லாம் மாநகராட்சி அந்தஸ்திற்கு படிப்படியாக உயர்ந்து வருகின்றன, வளர்ந்து வருகின்றன, முன்னேறி வருகின்றன என்பது பொருள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய பாலம்

உறுப்பினர் மா.சுப்பிரமணியன்:- சென்னையில் புதிய பாலம் கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது அடிக்கல் நாட்டப்பட்டதா?.

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:- வேளச்சேரி, போரூர், கீழ்க்கட்டளை, கொரட்டூர் மேம்பாலப் பணிகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தான் தொடங்கப்பட்டன. தி.மு.க. ஆட்சியின்போது 5 ஆண்டுகளில் 1,239 பாலங்கள் தான் கட்டப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் 2,095 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- 1996-2001-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் சென்னையில் 9 பாலங்களை 94 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டதாக உறுப்பினர் கூறினார். பீட்டர்ஸ் சாலை, உஸ்மான் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் சரியான திட்டமிடல் இல்லாமலே கட்டப்பட்டது. அந்த பாலங்களில் குறைவான அளவிலேயே வாகனங்கள் சென்று வருகின்றன. பொருள் விரயம் தான் ஏற்பட்டுள்ளது.
(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

சந்தேகம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- எதிர்க்கட்சி உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இந்த விவாதத்தை எப்படிக் கொண்டு போகிறார், இந்த விவாதம் எந்த திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும்போது, நாம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அமர்ந்திருக்கிறோமா, இல்லை சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் அமர்ந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கே வந்துவிட்டது.

உறுப்பினர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட ஒன்றிரண்டு விருதுகளை தெரிவித்துள்ளார். எனது தலைமையிலான அரசு உள்ளாட்சி துறையில் பெற்றுள்ள விருதுகள், பாராட்டுகள் ஆகியவற்றில் ஒரு சிலவற்றை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

2014-ம் ஆண்டிற்கான தொழிற்சாலை மறுசுழற்றி நீர் பயன் விருது தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உள்ள வாட்டர் ரீயூஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பினால் வழங்கப்பட்டது. கார்ப்பரேட் வாட்டர் ஸ்டீவர்டுசிப் 2015 விருது தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனத்திற்கு யுனைட்டட் கிங்டமில் உள்ள குளோபல் வாட்டர் இன்டெலிஜென்ஸ் குரூப் என்கிற அமைப்பினால் வழங்கப்பட்டது.

விருது

ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட் 2014 விருது திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. எர்த் ஹவர் கேப்பிட்டல் 2014 ஆப் இந்தியா விருது கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு டபிள்யூ.டபிள்யூ.எப். என்கிற அமைப்பினால் வழங்கப்பட்டது. வாழ்வாதார சுற்றுப்புறத்தினை மேம்படுத்தியதற்காக சென்னை மாநகராட்சிக்கு 2014-ம் ஆண்டிற்கான ஹட்கோ விருது வழங்கப்பட்டது.

பெஸ்ட் நான் மோட்டாரிசைடு டிரான்ஸ்போர்ட் புராஜக்ட் 2014 விருது மத்திய அரசால் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டிற்கான இந்தியா டுடேயின் பெஸ்ட் சிட்டி விருது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டிற்கான வால்வோ சஸ்டெயினபிள் மொபைலிட்டி விருது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

நகர்ப்புற திட்டம் மற்றும் வடிவமைப்பில் தரமான முறைகளை கையாண்டமைக்காக வாய்ஸ் ஆப் இந்தியா சிட்டிசன்ஸ் விருது ஜனக்கிரஹா என்ற அமைப்பினால் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

திட்ட மதிப்பீடு

அமைச்சர் ஜெயக்குமார்:- பொதுவாக பாலங்கள் கட்டும்போது பொதுப் பணித்துறையில் உள்ள என்ஜினீயர்கள் தான் திட்டமதிப்பீடு போட்டு தருவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சியில் விஞ்ஞான பூர்வமாக சிந்தித்து தனியார் நிறுவனத்திடம் கொடுத்து, பாலப்பணிகளுக்கு கூடுதலாக திட்டமதிப்பீடு தயாரித்தனர். தி.மு.க. ஆட்சியில் பாலப்பணிகளில் நடந்த ஊழல் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் புத்தகமே வெளியிட்டார்.

உறுப்பினர் மா.சுப்பிரமணியன்:- தண்டையார்பேட்டையில் கட்டி திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு தி.மு.க. ஆட்சியில் தான் பணிகள் தொடங்கப்பட்டன.
சபாநாயகர் ப.தனபால்:- நான் கொடுக்கிற வாய்ப்பில் நீங்கள் (மா.சுப்பிரமணியன்) தவறாக பேசுகிறீர்கள். எனவே, 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்யுங்கள்.
(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. உறுப்பினர் க.பொன்முடியும் எழுந்து பேச முயன்றார்)

சபாநாயகர் ப.தனபால்:- உறுப்பினர் சுப்பிரமணியன் பேசுங்கள். இல்லை என்றால் அடுத்த உறுப்பினரை பேச அழைப்பேன்.

(தொடர்ந்து பேசிய உறுப்பினர் மா.சுப்பிரமணியன் மெட்ரோ மற்றும் மோனோ ரெயில் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த கருத்து குறித்து பேசினார்)
சபாநாயகர் ப.தனபால்:- உறுப்பினர் நேரத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

(இந்த நேரத்தில் அமைச்சர் பி.தங்கமணி எழுந்து பேச முயற்சி செய்தார். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்)
சபாநாயகர் ப.தனபால்:- நீங்கள் பேசினால் அமைச்சர்கள் விளக்கம் சொல்லத்தான் செய்வார்கள்.

மெட்ரோ-மோனோ ரெயில் திட்டம்

அமைச்சர் பி.தங்கமணி:- சென்னை பழமையான நகரம். மெட்ரோ – மோனோ 2 ரெயில் திட்டங்களும் இருக்க வேண்டும் என்று தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

உறுப்பினர் மா.சுப்பிரமணியன்:- முதல்-அமைச்சர் பேசியதில் எது உண்மை.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டத்தைப் பற்றி சொன்ன கருத்துக்களை நான் மறுக்கவில்லை. இதெல்லாம் நான் பேசிய கருத்துகள் தான், இது உண்மை தான். இருந்தாலும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. பணிகள் முடித்தாக வேண்டும் என்ற ஒரு நிலைமை, ஒரு கட்டாயம், அதனால் பணிகள் முடிக்கப்பட்டன. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்தத் திட்டத்தை பாதியில் நிறுத்த முடியாது. இதற்கு மத்திய அரசு செய்த உதவியை நான் அங்கீகரித்து அதற்கு நன்றி தெரிவித்தேன். நான் பேசிய பேச்சை நான் மறுக்கவில்லையே.

(தொடர்ந்து உறுப்பினர் மா.சுப்பிரமணியன் உள்ளாட்சி துறை பற்றி பேச முயன்றார்)

சபாநாயகர் ப.தனபால்:- ஆரம்பம் முதல் குறுக்கீடு செய்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

புதிய வீராணம் திட்டம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- தி.மு.க. எதிர்க்கட்சி உறுப்பினர் பேசுகின்றபோது, திட்டங்களை ஆரம்பிப்பதைப் பற்றியும், அவை முடிப்பதைப் பற்றியும் பேசினார். இதில் யார் வல்லவர்கள் என்பதைப் பற்றியும் பேசினார். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல் இவர்களுடைய தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தபோது அவர்களுடைய திட்டத்தைத் தொடங்கி முடித்து வைக்கும் திறனுக்கு வீராணம் திட்டம் ஒன்றே தகுந்த சான்றாகும்.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட வீராணம் குடிநீர் திட்டத்தை ஏன் முடித்து வைக்கவில்லை?. அத்திட்டம் ஏன் முடிக்கப்படாமல் நின்றது?. உங்களுக்கே நம்பிக்கையில்லாமல் போய்விட்டதா?. அதன் பின் சர்க்காரியா கமிஷனும் முடிந்தது, அதன்பின் ஆட்சிக் கலைப்பில் முடிந்தது, அதன் பின் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், அதே வீராணம் திட்டத்தைக் கையில் எடுக்கும் துணிவு உங்களுக்கு இருக்கவில்லை. ஏன்?. அதன் பிறகு நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான், ‘புதிய வீராணம் திட்டம்’ என்று கொண்டு வந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளேன். இத்திட்டத்தினால் சென்னை மாநகரத்திற்கு இன்று வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

(இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து மா.சுப்பிரமணியனுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு தருமாறு கேட்டனர்)
சபாநாயகர் ப.தனபால்:- நீங்கள் எவ்வளவு நேரம் வாதாடினாலும், உங்களுக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. இனி வாய்ப்பு தர மாட்டேன். நீங்கள் ஒருவரே ஒரு மணி நேரம் பேசுகிறீர்கள். ஆனால், ஆளும் கட்சி உறுப்பினர்கள் 45 நிமிடத்தில் 3 பேர் பேசுகிறார்கள். எனவே அடுத்த உறுப்பினரை பேச அழைக்கிறேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>