தமிழர்களுக்கு எதிரான வன்முறை எதிரொலி : ஓட்டல்கள், ஏடிஎம், பஸ், லாரிகள் மீது தாக்குதல்

daily_news_8411022424698

சென்னை : கர்நாடகாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரி, பஸ்கள் எரிக்கப்பட்டதன் எதிரொலியாக, சென்னை மயிலாப்பூரில் தனியார் ஓட்டல் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்பையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் கிச்சன் பகுதிக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இட்லி, சட்னி, சாம்பார் உள்ளிட்டவை தரையில் சிதறி காணப்பட்டது. இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கூடாது என்பதை கண்டித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக பதிவு எண் கொண்ட பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள், தமிழர் நடத்தும் கடைகளை குறி வைத்து தாக்குதல் நடந்து வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்டஸ் ஓட்டல் மீது சிலர் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து விருகம்பாக்கத்தில் உள்ள கர்நாடகா வங்கி முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் கர்நாடக பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்ஸின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தமிழகத்தில் கன்னடர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள், உடமைகளை பாதுகாக்கும் வகையில், 43 கர்நாடக பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோயம்பேடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டையில் உள்ள முருடிஸ் ஓட்டலுக்கு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவகுமார் தலைமையில் 16 பேர் பூட்டு போட முயன்றனர். அவர்கள் அனைவரையும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள தனியார் ஓட்டல் பாதுகாப்புக்காக 2 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இருப்பினும், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமையில் 12 பேர் ஓட்டலுக்குள் புகுந்தனர். ஓட்டலின் கண்ணாடி, மேஜை, டம்ளர்களை அடித்து நொறுக்கினர். பின்னர் கிச்சனுக்குள் நுழைந்து அங்கிருந்த இட்லி, சட்னி, சாம்பார் போன்றவற்றை கீழே கொட்டினர். அதைத் தொடர்ந்து, கர்நாடகாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த கும்பலை அந்த 2 போலீசாரால் தடுக்க முடியாமல் ஒருவர் வேடிக்ைக பார்க்க, மற்றொருவர் உடனடியாக தங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து 12 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டல் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி: வேளச்சேரி, நூறடி சாலையில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று காலை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10 பேர், கட்சி கொடியை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடி வந்தனர். அப்போது, அவர்கள் ஓட்டல் முன்பக்க கண்ணாடியை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கினர்.

பின்னர், அவர்கள் ஓட்டலுக்குள் நுழைந்து சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவு பொருட்களை தரையில் கொட்டியும், பாத்திரங்களை வெளியில் வீசி எறிந்தும் ஓட்டலை சூறையாடினர். இதை சற்றும் எதிர்பாராத வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, சாப்பிடுவதை பாதியில் நிறுத்திவிட்டு அலறியடித்து ஓட்டலுக்குள் ஓடி ஒளிந்தனர். இதையடுத்து தாக்குதலை நிறுத்திவிட்டு நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேல், கிண்டி உதவி கமிஷனர் சங்கரநாராயணன், இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஓட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஓட்டல் உரிமையாளர் முரளி கிண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10 பேரை தேடி வருகின்றனர்.

பஸ் கண்ணாடி உடைத்த 2 பேர் கைது

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை செக்போஸ்ட் பகுதியில் நேற்று கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு பஸ் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் டிரைவரோ அல்லது பயணிகளோ இல்லை. இந்த நேரத்தில் ஒரு பைக்கில் 2 பேர் வந்து பஸ்சின் அருகில் நின்றனர். திடீரென சாலையோரத்தில் கிடந்த கற்களை எடுத்து பஸ்சின் மீது சரமாரியாக வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தது. பின்னர் கர்நாடகாவை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தாக்குதல் நடத்தியவர்கள் தமிழர் முன்னேற்றக்கழகம் அமைப்பை சேர்ந்த சென்னை முகப்பேரை சேர்ந்த அதியமான் (41), எப்ரீம் (28). தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதில் தாக்குதல் நடத்தினர் என்பது தெரியவந்தது.

பிரதமர் மோடி, சித்தராமையா உருவ பொம்மை எரிப்பு

தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால், அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் எழுச்சி இயக்கத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்தும் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் உருவ பொம்மை எரித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் உருவ பொம்மையில் தண்ணீரை ஊற்றி தீைய அணைக்க முயன்றனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>