தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

highcourt_2597637f

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துப் பகுதிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அரசாணைகளை வெளியிட்டாலும், அவைகள் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கவில்லை.

குறிப்பாக, இட ஒதுக்கீடு ஆணை கிடைக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பின்னர்தான் இட ஒதுக்கீடு குறித்த அரசாணைகளே அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்தன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு ரகசியமாக அறிவிப்புகள் வெளியிடப்படுவதால் ஆளும் கட்சிக்கு சாதகமாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக கடந்த 16ம் தேதி உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு 19ம் தேதி சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பதால் இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறை பின்பற்றி முறையாக இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும். அதுவரை தற்போது வெளியிட்ட இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, தற்போது உள்ள அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பை கூட எந்த முன்னறிவுப்பும் இன்றி ரகசியமாக வைத்து திடீரென வெளியிட்டனர்.

சென்னை தவிர எந்த மாநகராட்சியிலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளுக்கான தகவல்களை இணையதளத்திலிருந்து பெற முடியவில்லை. ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் பல இடங்களில் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. காஞ்சிபுரத்தில் பழங்குடி மக்கள் 1.59 சதவீதம் இருந்தும் ஒரு இடம் கூட பழங்குடியினத்தவருக்கு வழங்கப்படவில்லை. இதே போல் சென்னை மாநகராட்சியிலும் 200 வார்டுகள் இருந்தும் ஒரு வார்டு கூட பழங்குடியினருக்கு ஒதுக்கப்படவில்லை.

தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், தேனி, மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரி, துத்துக்குடி மாவட்டங்களிலும் யூனியன் பஞ்சாயத்துகளில் ஒரு இடம் கூட பழங்குடியினருக்கு வழங்கப்படவில்லை. கூடலூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் மட்டுமே யூனியன் பஞ்சாயத்துகளில் பழங்குடியினருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. நாமக்கல், கோவை, வேலூர் பகுதிகளில் மட்டும் மாவட்ட பஞ்சாயத்துகளில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தரப்பில் கடந்த 16ம் தேதி மாவட்ட வாரியாக இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இதில் எந்த விதிகளும் முறையாக பின்பற்றவில்லை. மேலும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கவில்லை. சுழற்சி முறையிலான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தவில்லை என்று கூறினார். இதை கேட்ட நீதிபதி, கடந்த 2006, 2011ம் ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்த அட்டவணைகளை தாக்கல் செய்யுங்கள் என தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை கடந்த வியாழக்கிழமை (29ம் தேதிக்கு) தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் கடந்த 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆஜராகி, அட்டவணையை தாக்கல் செய்தார். பின்னர் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அதன்படி, இந்த வழக்கில் நேற்று மதியம் நீதிபதி கிருபாகரன் தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் அவர் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை சட்டப்படி, முறைப்படி அறிவிக்கவில்லை. அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணை மூன்றும் செல்லும். இதை ரத்து செய்ய முடியாது. இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை பிறப்பித்தது சரியானதுதான். இதை தேர்தல் ஆணையம் சரியாக பின்பற்றவில்ைல. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு 7 நாட்கள் அவகாசம் தேர்தல் ஆணையம் தர வேண்டும். அதை முறைப்படி தரவில்லை.

தேர்தல் ஆணையம் பஞ்சாயத்து சட்டப்படியான நடைமுறையை சரியாக பின்பற்றவில்லை. எனவே, மாநில தேர்தல் ஆணையம் வருகிற 17 மற்றும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 26ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்கிறேன்.எனவே, கீழ்க்கண்ட 9 உத்தரவுகளை அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் பிறப்பிக்கிறேன். அதன்படி, டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த உத்தரவுகளின் பேரில், தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தயாரித்து அதை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யவேண்டும்.

அன்றைக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டும். கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்கவேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுத்தால்தான் ஜனநாயக நாட்டில் நல்லவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நியாயமாக நடக்கும். லாப நோக்கத்துடன் தேர்ந்தெடுப்பவர்கள் பணியாற்ற மாட்டார்கள். சமுதாய நலனில் அக்கறை கொண்டு சமுதாய நலனுக்காக பாடுபடுவார்கள். மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம் என்ற நம்பிக்கையுடன் வாக்களிக்க வகை செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேல்முறையீடு ெசய்ய அரசு முடிவு

தமிழகத்தில் 2 கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி மன்ற தேர்தலை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணைய வக்கீல்கள் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தனர். இன்று மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

1. தேர்தல் ஆணையம் பஞ்சாயத்து சட்டப்படியான நடைமுறையை சரியாக பின்பற்றவில்லை. எனவே, மாநில தேர்தல் ஆணையம் வருகிற 17 மற்றும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கடந்த செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்கிறேன்.

2. புதிய தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு, அதன்படி வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

3. தேர்தல் நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் வரை பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

4. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தங்களது வேட்புமனுவில் குற்றப்பின்னணி குறித்து முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதனை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்குவதுடன், வேட்புமனுவில் குற்றப்பின்னணி தகவல் தெரிவிக்க வேண்டும்.

5. குற்றப்பின்னணி தகவல் குறித்து தனியாக மனு தாக்கல் செய்ய மறுத்தால் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும்.

6. இதுபற்றி தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்ய வேண்டும்.

7. தேர்தல் ஆணையம் அறிவிப்பு பற்றி அதன் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். வேட்புமனுதாக்கலில் குற்றப்பின்னணி குறித்த தகவல் இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

8. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மீண்டும் வெளியிடும் வரை வாக்காளர் பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

9. பஞ்சாயத்து அமைப்பு லாபம் ஈட்டும் அமைப்பு இல்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சியினர் குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளராக நிறுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்கவேண்டும். இதற்காக அரசியல் கட்சிகளுக்கு 4 வாரம் அவகாசம் கொடுக்கவேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>