தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுமா? ஜெயலலிதா அரசு: கருணாநிதி

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுமா? ஜெயலலிதா அரசு: கருணாநிதி

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேரவையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் அளிக்க முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ்., தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்த குழு, கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு பரிந்துரைகள் கொண்ட 200 பக்க அறிக்கையை அளித்திருக்கிறது. அதில் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன. கட்டாயத் தேர்ச்சி என்பது 4ம் வகுப்பு வரை மட்டுமே அளிக்கப்பட வேண்டும். 5ம் வகுப்பு முதல், தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும் என்பது குழுவின் பரிந்துரை.

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுமா? ஜெயலலிதா அரசு: கருணாநிதி

இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவர். உலகில் கல்வியில் மிக உயர்ந்த இடம் வகித்திடும் பின்லாந்து நாட்டில், 7 வயதில்தான் கல்வி தொடங்குகிறது என்பதையும், 16 வயது வரை 9 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகத் தேர்வு என்பது மாணவர்களுக்கு இல்லாமல், அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்வது நலம். அது மட்டுமல்ல, ஒரு மாணவன் தொடர்ந்து தேர்வு பெறவில்லை என்றால், அந்த மாணவனைத் தொழிற் பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் இருக்கிறது.

ஒரு பக்கம் கல்வி உரிமைச் சட்டம் மூலம், அனைவருக்கும் கல்வி அளிக்க உறுதி பூண்டுள்ள வேளையில் இன்னொரு பக்கம், மாணவனை 12 வயதிலேயே தொழிற்கல்விக்கு அனுப்பத் திட்டமிடுவது நயவஞ்சகம் இல்லையா? மேலும், மறைமுகமாக குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் பேரபாயம் தோன்றி விடும். கல்வி நிர்வாகப் பணிக்கு வருவோருக்கு இந்தியக் கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி மாநில அரசுகள் கல்வித் துறை இயக்குநர்களை நேரடியாக நியமிக்க முடியாது என்பதோடு, அகில இந்தியக் கல்விப் பணியில், அதிகாரிகள் நியமன ஒதுக்கீடு பெறும் மாநிலத்தைப் பற்றிய சரியான புரிதல் இன்றி, பணி ஈடுபாடு வெகுவாகக் குறைந்து விடும். பிளஸ் 2 முடித்தவர்கள் பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று குழுவின் அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் பாடத் திட்டத்தை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படுகிறது. டெல்லியில் அமர்ந்து கொண்டு வகுக்கப்படும் பாடத் திட்டம் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத் திட்டமாகி, இந்தியாவின் அடிப்படைக் கூறான பன்முகம் என்பது காலப் போக்கில் சிதைவுறும்.

நம் நாட்டில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த, தலைசிறந்த வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பெயரால், கல்வியில் தாராளமயம் புகுந்து விடும். கல்வி முற்றிலும் வணிகமயமாகி விடும். கல்விக் கட்டண உயர்வுக்கு வழி ஏற்பட்டு விடும். உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும். இந்திய நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படும் வரை கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்து வந்தது. நெருக்கடி காலத்தில்தான், மாநில உரிமைகளில் ஆக்கிரமிப்பு செலுத்திடும் விதமாக, கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே கல்வியில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே நெருக்கடி நிலை காலத்தில், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து மேலும் மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரத் திட்டமிடப்படுகிறது. இதன் மூலம் இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாசாரத்தையும் திணிப்பதை மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத்துடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிப் போராட்டத்தின் பயனாகக் கிடைத்த இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சமூகநீதித் திட்டங்களும் செயலற்றதாக ஆக்கும் கொள்கை முன் மொழிவுகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுமா? ஜெயலலிதா அரசு: கருணாநிதி

தமிழக அரசு, பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும், ஆசிரியர் மத்தியிலும், மாநில உரிமைகளிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ஏராளமான பிரச்னைகளை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே எதிர்க்கட்சிகளுக்கு போதிய வாய்ப்பளித்து, ஒரு நாள் முழுதும் விவாதித்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்தில் கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தக்கக் காரண விளக்கங்களுடன் அழுத்தமான கோரிக்கையும் இடம் பெற வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, கல்வி சிறந்த தமிழ்நாட்டை நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை. ஜெயலலிதா அரசு, நமது மாநிலத்திற்குச் சிறிதும் பொருந்தாத இந்தப் பிரச்னையை எச்சரிக்கையோடு கையாளுமா? தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுமா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>