தமிழக, இலங்கை மீனவர் பிரச்னை தீர்க்க கூட்டு நடவடிக்கை குழு அமைப்பு

jakkamma news

புதுடெல்லி: இந்தியா – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையே டெல்லியில் நேற்று பேச்சு நடந்தது; மீனவர்கள் பிரச்னையைத் தீர்க்க இரு நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த குழுவின் முதல் கூட்டம் வரும் ஜனவரி 2ம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது. தமிழக மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருநாட்டு அரசுகளும் தொடர்ந்து பேசி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ேபச்சில் எந்த பலனும் ஏற்படவில்லை. தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நடந்து வருகிறது.
மீனவர்கள் பேச்சு: இந்நிலையில், தமிழகம், புதுவை மற்றும் இலங்கை மீனவர்களிடையே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியாக, கடந்த 2ம் தேதி டெல்லியில் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசினர்.

இரு நாட்டு மீனவர்களும் தங்களது கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்தினர். ‘படகுகளை விடுதலை செய்ய வேண்டும், பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், முடிவுகள் அடிப்படையில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் நவ.5ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் ஆலோசனை: இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீராவுக்கு இடையே டெல்லியில் நேற்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஆணையாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக, இலங்கை மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில், இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க இரு நாட்டு பிரதிநிதிகள் குறிப்பாக இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்கள், வெளிவிவகாரத் துறை பிரதிநிதிகள், இருநாட்டு கடலோர காவல் படை, கடற்படையினர் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி பிரச்னைகளை ஆய்வு செய்து தீர்த்து வைக்கும். இந்த குழுவின் முதல் கூட்டம் 2017 ஜனவரி 2ம் தேதி கொழும்பில் நடக்கவுள்ளது.

குழு பொறுப்பு என்ன: மீனவர் பிரதிநிதிகள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கூடிப்பேசவும் முடிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதில் இருநாடுகளும் ஒரு சரியான நடைமுறையைக் கையாள வேண்டும் என்றும் கூட்டு நடவடிக்கை குழுவின் வழிமுறைகளின்படி இரு நாட்டு கடலோர காவல்படையினரின் ரோந்து பணியில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் குறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இரு நாட்டு கடலோர காவல்படையினரும் மீனவர்களை சிறைபிடிக்கும்போது தகவல்களைப் பரிமாற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக உள்ள மீனவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து நிரந்தர முடிவை எட்டுவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருநாட்டு மீனவர்களின் சங்கங்களும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் இரு நாட்டு கடற்படைகளும் மீனவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடாது என்றும் இரு நாட்டு பிரதிநிதிகளும் கூட்டத்தில் உறுதியளித்தனர். மேலும், இரு நாட்டு மீனவர்கள் சங்கங்களும் நவம்பர் 2ம் தேதி நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி பிரச்னைகள் குறித்து விவாதிப்பதை இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவால் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல் குறையும் என்று மீனவ சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
* கொழும்பில் முதல் கூட்டம் ஜன. 2ல் நடக்கிறது
* டெல்லியில் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>