தமிழக அரசு என்ற  ஒன்று செயல்பட்டால் தானே,  அதிலே உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதிட முடியும். திமுக தலைவர் மு.கருணாநிதி

முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று தன்னுடைய  பணியினை தொடர்கின்ற வரையில்,  தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட  உரிய ஏற்பாடுகள்  முறைப்படி, சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதே  நமது வேண்டுகோள்

முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று தன்னுடைய  பணியினை தொடர்கின்ற வரையில்,  தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட  உரிய ஏற்பாடுகள்  முறைப்படி, சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதே  நமது வேண்டுகோள்

தமிழக மக்களின் அவசரத் தேவைகள் நிறைவேற!

நான் உனக்கு மடல் எழுதி இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன!  தமிழக அரசு என்ற  ஒன்று செயல்பட்டால் தானே,  அதிலே உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதிட முடியும்.  செயல்படாமல் விட்டு விட்டால்,  பிறகு எதைப் பற்றி எழுது வார்கள் என்று நினைத்து,  தமிழக அரசை செயல்படவிடாமலே அப்படியே போட்டு விட்டார்கள்.   அமைச்சர்களுக்கு  தலைமைச் செயலகம் என்ற ஒன்று இருப்பதே மறந்து போயிருக்கும்.  அதிகாரிகள் எந்தப் பிரச்சினையிலும் நமக்கென்ன என்ற நிலையில் இருக்கிறார்கள்.   இரண்டொரு நாட்களில் இல்லம் திரும்பி விடுவார் என்று கூறப்பட்ட முதலமைச்சரின் உடல் நிலையில் அன்றாடம்  முன்னேற்றம் ஏற்பட்டாலும்,  அவர் முழு நலம் பெற்று இல்லம் திரும்பி முதலமைச்சர் பணிகளை ஆற்ற இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அப்பல்லா மருத்துவ மனை அறிக்கை கூறுகிறது.   முதலமைச்சர் அலுவலகத்திலும்,  மற்ற அமைச்சர்கள் அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான கோப்புகள் முடிவினை எதிர்பார்த்துத் தேங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது.   காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட மத்திய உயர் மட்டக் குழு,  தாங்களாகவே  மேட்டூர், பவானி அணைகளுக்குச் சென்று  தீவிர ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  தமிழக அரசின் சார்பில் அவர்களை வரவேற்று, அழைத்துச் சென்று, நம்முடைய நியாயங் களை எடுத்துச் சொல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறதா?   அந்தக் குழுவினரை அழைத்துச் சென்று  தமிழகத்திலே உள்ள பல்வேறு விவசாயச் சங்கத்தினரைச் சந்திக்க வைத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்க வைத்திருக்க வேண்டும்.  இதற்கெல்லாம் மாநிலத்தில்  ஒரு செயல்படும் அரசு வேண்டும்.  

     தமிழகத்திலே உள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா என்ற கவலையுடனும், வேதனையுடனும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.   அவர்களுக்கு தமிழக அரசு எந்த வழியைக் காட்டப் போகிறது என்பது பற்றி எந்தவிதமான அறிக்கையும் இல்லை.   மாநில அரசு என்ன சொல்கிறது?  மத்திய அரசு என்ன சொல்கிறது?  உச்ச நீதி மன்றம் என்ன சொல்கிறது?  என்று ஒவ்வொரு நாளும்  விவசாயிகள் காத்துக் கிடக்கிறார்கள். 

     உச்ச நீதி மன்றமோ  கடந்த செப்டம்பர் மாதத்தில்  அடுத்தடுத்து தமிழகத்திற்கு ஒவ்வொரு நாளும்  இத்தனை கன அடி தண்ணீர் திறக்க வேண்டு மென்று உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தது.  ஆனால் கர்நாடக மாநில அரசோ அதைப் பற்றி கவலைப்படவில்லை.  அனைத்துக் கட்சித் தலைவர் களின் கூட்டங்களையும், அமைச்சரவைக் கூட்டங்களையும், சிறப்புப் பேரவை கூட்டங்களையும் தொடர்ந்து  நடத்தி,  தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று பிடிவாதமாகத் தெரிவித்து வருகிறார்கள்.

     அது போலவே உச்ச நீதி மன்றம், மத்திய அரசு நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்  கின்றது.  ஆனால் மத்திய அரசோ,  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உத்தரவிட உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை, நாங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்கிறது.  வேண்டுமானால் உயர் மட்டக் குழு ஒன்றினை அமைக்கிறோம் என்கிறார்கள்.  உச்ச நீதி மன்றம் அதை ஏற்று, அவ்வாறே உத்தரவு பிறப்பித்து, தற்போது அந்தக் குழு தான் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது.

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை,  ஒரு மாநில அரசோ, மத்திய அரசோ  மதிக்க வில்லை என்றால்,  மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்?

     நீதி மன்றத் தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் சாதாரண மக்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்வது தவறு என்ற போதிலும், கருத்துரிமை   போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தில் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  அது அவர்களுடைய உரிமை என்று வாதிடப்படுகிறது.  ஆனால்  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது  பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதலமைச்சரே,  உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை,  “அது கர்நாடகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி” என்று பேசுவது நிச்சயமாக  நீதி மன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.    இந்தியாவில் உச்ச நீதி மன்றம் தான் நாட்டின்  நீதி பரிபாலனத்துக்கான  உயர்ந்தபட்ச அதிகாரம் கொண்டது.   அதன் தீர்ப்பை மதிக்காமல் இருப்பது இந்திய அரசியல்  சட்டத்தையே மதிக்காமல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொள்வதற்குச்  சமமாகும்.  எதிர்க் கட்சிகள் காவிரி நீரைத் தமிழகத்துக்கு விடக் கூடாது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும்,  முதலமைச்சர் பொறுப்பிலே உள்ளவர்,  அது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சியில் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று சமாதானம் கூற வேண்டும்.  ஆனால் கர்நாடகாவில் ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க. வும் விரைவில்  அங்கே நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதிலே கொண்டு அரசியலை  முன்னிலைப்படுத்தியும் சட்டத்தைப் பின்னுக்குத் தள்ளியும் செயல்படுகின்றன என்பது தான் உண்மை.   இந்தத் தொற்று நோய் ஒவ்வொரு மாநிலமாகப்  பரவிப் பாதிக்குமானால், இந்தியாவின் ஒற்றுமை – ஒருமைப்பாடு  என்பதெல்லாம்  அகழாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகி விடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.

     மத்திய அரசின் வழக்கறிஞர் ரோத்தகி அவர்கள், உச்ச நீதி மன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க முடியாது என்று கூறியவுடன்,  நீதிபதிகள் அவரை நோக்கி,  உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், காவிரி கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்திய  மத்திய அரசு,  தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்த முன்வராதது ஏன் என்றும்;  2013ஆம் ஆண்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது, இப்போது மட்டும் ஏன் மறுக்கிறீர்கள் என்றும்;  கடந்த

30-9-2016 அன்று உச்ச நீதி மன்ற  நீதிபதிகள்  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்ட போது, எதிர்ப்போ,  மாற்றுக் கருத்தோ  தெரிவிக்காத மத்திய அரசு,  பின்னர்  மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஏன் என்றும் வினவியிருக்கிறார்கள்.  மத்திய அரசு வழக்கறிஞரால், நீதிபதிகளின் இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் கூற முடியவில்லை என்பது தான் உண்மை. 

     காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு திடீரென்று முடிவெடுக்க என்ன தான் காரணம்?   இந்தக் கேள்விக்கு “டில்லியில் நடந்த ஆக்ரோஷ அரசியல் அழுத்தம் – மத்திய அரசை “பல்டி”  அடிக்க வைக்க கர்நாடகா” என்ற தலைப்பில் “தினமலர்” நாளேடு அரைப் பக்கத்திற்குச் செய்தி வெளியிட்டுள்ளது.  அதில், “கச்சிதமாகத் திட்டமிட்டு, வலுவான அழுத்தங்களை, டில்லி அதிகார மட்டங்களில் கர்நாடக  அரசு தந்ததும், அதில் ஒரு துளியளவு கூட அழுத்தம் தர,  தமிழக அரசு சார்பில்  ஆள் இல்லாமல்  போனதும் தான்,  காவிரி விவகாரத்தில்  மத்திய அரசின் “பல்டி”க்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.   தென் மாநிலங்களில் பா.ஜ.க. வுக்கு செல்வாக்கு இல்லை,  கர்நாடகாவில் மட்டுமே ஓரளவுக்குச் செல்வாக்கு உள்ளது.  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால், கர்நாடகாவில் உள்ள செல்வாக்கையும் இழந்து விடுவோம் என்பது போன்ற வாதங்களை மத்திய பா.ஜ.க. அரசில் உள்ள அமைச்சர்கள் எடுத்து வைத்துள்ளார்கள்.  உச்ச நீதி மன்ற உத்தரவை அடுத்து, பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் போது,  கர்நாடகாவைச் சேர்ந்த அமைச்சர்களும், நீர்ப்பாசன அமைச்சரான உமாபாரதியும்  தான் உடன் இருந்திருக்கிறார்கள்.  இந்தக் கூட்டத்தில் முழுக்க முழுக்க அரசியல் ரீதியில் கர்நாடகாவில் பா.ஜ.வுக்கு ஏற்படப் போகும் பின்னடைவு குறித்தே உமாபாரதி பேசியதாகக் கூறப்படுகிறது.  கர்நாடகாவுடனான உமா பாரதியின் ஆன்மிகத் தொடர்பும் இந்த விஷயத்தில் முக்கிய பங்காற்றியது.  அங்குள்ள முக்கிய மடங்களின் தலைவர்களும் உமா பாரதியிடம் பேசியுள்ளனர்.  இவரது தனிச் செயலாளர் ஒருவர், கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரி எனத் தெரிகிறது.  கர்நாடகாவின் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும், டில்லி அதிகார  மட்டங்களுக்குக் கடும் அழுத்தத்தைத் தந்த சமயத்தில், இதில் துளி அளவு கூட தமிழக அரசியல் தரப்பில் அழுத்தம் தர ஆள் இல்லாமல் போய் விட்டது.  கடந்த வாரம் “அடுத்த மூன்று நாட்களில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயார்”  என்று உச்ச நீதி மன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு, திடீரென பின்வாங்கி, “பல்டி” அடித்ததன் பின்னணியில் இத்தனையும் உள்ளன என்று  டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று எழுதியுள்ள உண்மைகள் தான், மத்திய அரசின் மாற்றத்திற்குக் காரணமாகத் தோன்றுகின்றது. 

“மத்திய அமைச்சர் அனந்த்குமார் லாபியால் மனம் மாறிய பிரதமர்”  என்ற தலைப்பில் “தினகரன்” வெளியிட்டுள்ள செய்தியில்,  “கர்நாடக பா.ஜ. அமைச்சர்கள், பா.ஜ. எம்.பிக்களின் லாபியால் காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்று எழுதியுள்ளது. 

இந்தச் செய்திகளை உண்மையாக்கும் விதத்தில் தான், தமிழகத்தை ஆளும் அதிமுக வுக்கு ஐம்பது எம்.பி.க்களுக்கு, தமிழகத்தின் சார்பில் மனு ஒன்றினைப் பிரதமரிடம் நேரில் தருவதற்குக் கூட டெல்லியில் அனுமதி வழங்கப்படவில்லை.  இன்னும் சொல்லப் போனால், மத்திய பா.ஜ.க. அரசுக்கு அ.தி.மு.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுசரணையாக பல பிரச்சினைகளில் இருந்த போதும்,  தமிழகத்திற்கான ஒரு முக்கிய பிரச்சினை குறித்து மனு ஒன்றினை இணைந்து தருவதற்கு மத்திய பா.ஜ.க. அரசோ, பிரதமரோ அனுமதி வழங்கவில்லை என்பது, தமிழகத்தையே புறக்கணிக்கும் செயலாகாதா?     பா.ஜ.க. அரசு அந்த அளவுக்கு அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவில்லையே என்பதற்காக அ.தி.மு.க. சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  மத்திய பா.ஜ.க. வுக்கு  கர்நாடக மாநிலத்தின் ஆதரவு தான் வேண்டுமென்றால்,  தமிழக மக்களின் ஆதரவு பா.ஜ.க. வுக்குத் தேவையில்லையா?   முந்தி வருவது கர்நாடக மாநிலச் சட்டசபை தேர்தல் தான் என்றால், அதற்குப் பிறகு எந்தத் தேர்தலும் நடைபெறாதா?  அப்போது தமிழக மக்களின் தயவு பா.ஜ.க. வுக்குத் தேவையில்லையா!

     முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ மனையிலே இருக்கின்ற காரணத்தால், சரியான வழி காட்டுதலின்றி  தமிழக அரசே செயல்பாடற்ற நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது  என்பது தான் அனைவரின் கருத்து.  அ.தி.மு.க. அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டமோ, அமைச்சரவைக் கூட்டமோ,  சிறப்புச் சட்டமன்றமோ  எதுவும் நடத்தப் படாவிட்டாலும்,  தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து, தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்கத்தோடு  ஓங்கிக் குரல் கொடுத்து வருகின்றன.    கடந்த  7ஆம் தேதியன்று கூட,  தஞ்சையில் கழகப் பொருளாளர், தம்பி மு.க. ஸ்டாலின் தலைமையில்,  முதன்மைச் செயலாளர் தம்பி துரைமுருகன் முன்னிலையில்  உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெற்றுள்ளது.  அந்த உண்ணாவிரதத்தில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எல்லாம் பங்கேற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள்.   “நியாயம், நியாயமென்ற காரணத்தினாலே மட்டும் வெற்றி பெற்று  விடுவது கிடையாது;  நியாயத்தின் பக்கம்  வலிமை சேர வேண்டும்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னபடி, காவிரிப் பிரச்சினையில் நம் பக்கம் வலிமை சேர்க்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும்.  அமைச்சர்களோ, தலைமைச் செயலாளரோ  இதுவரை தாங்களாக  தன்னிச்சையாக எந்த அறிக்கையும் கொடுத்துப் பழக்கமில்லை என்பதால் காவிரிப் பிரச்சினையில்  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்களோ என்னவோ?       

     காவிரிப் பிரச்சினை போன்ற மிக முக்கியமான பிரச்சினையில் அவசர மாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில்,  முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ மனையிலே இருக்கின்ற காரணத்தால்,  அவரிடம் கலந்து கொள்ளாமல், எந்த முடிவும் எடுக்க அமைச்சர்களோ, தலைமைச் செயலாளரோ தயாராக இல்லாத காரணத்தால்,  ஒரு செயலற்ற நிலைமை தான் தமிழகத்திலே  உள்ளது.   இதனை நான் மட்டும் கூறவில்லை.  பிரபல செய்தியாளர் இந்து ராம் அவர்கள் இன்று பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு அடுத்த பேட்டியில்,   “அரசாங்கத்தைப் பொறுத்தவரை செயல்படவே இல்லை.   அதிகாரிகள் தான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அமைச்சர்கள் தங்களது பணிகளை செய்வ தில்லை.    அமைச்சர்களைப் பொறுத்தவரை பணிகளைச் செய்யக் கூடாது என்ற நோக்கம் எதுவும் இல்லை.   அவர்களால் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கிறது.  அமைச்சர்களுக்கு முடிவெடுக்கும் தைரியம் எதுவும் இல்லை.  அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை நடத்த முடியாத நிலையில் நிச்சயமாக ஒரு மாற்று ஏற்பாடு தேவை.  அரசியல் சாசனப்படி பிரதமரோ அல்லது முதல்வரோ செயல்பட முடியாத நிலையில் இருக்கும்போது மாற்று ஏற்பாடுகள் அவசியம், தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றெல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறாhர். 

           இந்த நிலையில் தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து அறிக்கைகளைக் கொடுத்து வருகிறார்கள்.   அதுபற்றியெல்லாம் முடிவெடுத்து, அரசின் நிலை அவ்வப்போது  மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.    இதுபற்றி மத்திய அரசோ,  தமிழக ஆளுநரோ முடிவெடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பது தான் தமிழ் நாட்டு மக்களின் விருப்பம்.   முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று தன்னுடைய  பணியினை தொடர்கின்ற வரையில்,  தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட  உரிய ஏற்பாடுகள்  முறைப்படி, சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதே  நமது வேண்டுகோள்; நாட்டு மக்களின் வேண்டுகோள்!

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>