தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பால்வளத்துறை அமைச்சர் சண்முகநாதன், டிஸ்மிஸ் பள்ளிக் கல்வி அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன்.

சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனை முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 பேரின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. மாபா பாண்டியராஜன், புதிய அமைச்சராக இன்று பதவி ஏற்கிறார். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின் அமைச்சரவையில் எடுக்கும் முதல் நடவடிக்கை இது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் மே 16ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடைபெற்றது. இதில் 133 இடங்களில் அதிமுக வெற்றிபெற்று, 6வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும், மே மாதம் 23ம் தேதி பதவியேற்றார்.
அப்போது அவருடன் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 2 நாட்கள் கழித்து மீண்டும் 4 பேர் தமிழக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து தற்போது, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 32 பேர் உள்ளனர். இதில் பால்வளத்துறை அமைச்சராக தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தொகுதியில் வெற்றிபெற்ற எஸ்.பி.சண்முகநாதன் பதவியேற்றார். இந்நிலையில், அதிமுக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனை ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கினார். இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை செயலாளர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் வகித்து வந்த பால்வளத்துறையை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கவனிப்பார். ராஜேந்திர பாலாஜியிடம் இருந்த ஊரக தொழில் துறை பொறுப்பு, பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த பி.பென்ஜமினிடம் வழங்கப்படுகிறது.

புதிய அமைச்சராக ஆவடி எம்எல்ஏ மாபா பாண்டியராஜன் நியமிக்கப்படுகிறார். அவர் பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறையை கவனிப்பார். புதிய அமைச்சர் பதவியேற்பு விழா இன்று மாலை 4.35 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும். ஆளுநர் ரோசய்யா புதிய அமைச்சருக்கு பதவியேற்பு பிரமாணம் செய்து வைப்பார்” என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி பறிப்பு ஏன்? சசிகலா புஷ்பா, நாடாளுமன்றத்தில் கட்சி தலைமை தன்னை அடித்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அவரை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். பால்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், பெண் எம்பி சசிகலா புஷ்பாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் அதிமுக தலைமைக்கு ஆதாரத்துடன் புகார்கள் வந்தது. இதையடுத்து சசிகலா புஷ்பாவுடன் நெருக்கமாக இருந்தவர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.

முதலில் அமைச்சர் சண்முகநாதனின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியை, கடந்த 17ம் தேதி ஜெயலலிதா அதிரடியாக பறித்தார். அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அப்போதே சண்முகநாதனின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. அந்த சமயம் சட்டப்பேரவை கூட்டம் நடந்து வந்தது. இதனால் பேரவைக் கூட்டம் முடிந்ததும் பதவி பறிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சண்முகநாதனின் பதவியை நேற்று ஜெயலலிதா அதிரடியாக பறித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அமைச்சர் ஒருவரின் பதவியை பறித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று, பள்ளி கல்வித்துறை அமைச்சரின் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் பென்ஜமினிடம் இருந்த இலாகா மாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று, தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு வந்து, வெற்றிபெற்ற மாபா பாண்டியராஜனுக்கு தற்போது அதிமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பல ஆண்டுகளாக எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இருந்து எஸ்.பி.சண்முகநாதன் நீக்கப்படுவது இது 3வது முறையாகும். 2001ல் முதல் முறையாக அமைச்சராக நியமிக்கப்பட்ட சண்முகநாதன் 9 மாதத்தில் நீக்கப்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சியின்போது, ஜெயலலிதா அமைச்சரவையில் சண்முகநாதன் இடம் பெற்றார். பின்னர் அந்த வருடமே நவம்பர் மாதம் சண்முகநாதன் அமைச்சர் பதவியை பறித்து, சி.த.செல்லபாண்டியனுக்கு ஜெயலலிதா வழங்கினார். பின்னர் 17-6-2013ம் ஆண்டு செல்லப்பாண்டியன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கினார்.

இந்நிலையில், 2016ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி சண்முகநாதன் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பதவியேற்று 99வது நாளில் சண்முகநாதன் பதவி மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 21 முறை அமைச்சரவையை மாற்றி அமைத்தார். தற்போது, ஜெயலலிதா கடந்த மே மாதம் பதவியேற்றபின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இதுதான் முதல்முறை ஆகும்.

பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று 110வது விதியின் கீழ் 3 அறிக்கை படித்தார். அதில், ஒன்று பால்வளத்துறை சம்பந்தமான அறிவிப்பாகும். ஜெயலலிதா சட்டப்பேரவையில் நேற்று பேசி முடித்ததும், துறை சார்ந்த அமைச்சர்கள் பாராட்டி பேசினர். பால்வளத்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டதால், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று பால்வளத்துறை அமைச்சர் என்ற முறையில் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டி பேசினார். பாராட்டி பேசிய சில மணி நேரத்தில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>