தமிழகம் முழுவதும் நீராதாரங்களை உறிஞ்சும் கருவேல மரங்கள் அதிகரிப்பு

தற்போதைய வறட்சி நிலை தொடர்ந்து நீடித்தால், எதிர்காலத்தில் நாம் அனைவரும் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டருடன் அலையவேண்டி இருக்கும்

தற்போதைய வறட்சி நிலை தொடர்ந்து நீடித்தால், எதிர்காலத்தில் நாம் அனைவரும் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டருடன் அலையவேண்டி இருக்கும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. வயல்வெளிகள் இருந்த இடமெல்லாம் தற்போது போதிய தண்ணீர் கிடைக்காமல் தரிசு நிலங்களாக மாறி, அங்கெல்லாம் ஏராளமான கருவேல மரங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, அங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் உள்ளன. அவற்றில் அதிகளவு கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இத்தகைய கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்து, அப்பகுதியின் நீராதாரங்களை வெகுவாக உறிஞ்சி வருகின்றன. இதனால் மற்ற உணவு பயிர்களை அங்கு விளைவிக்க முடியவில்லை. அப்பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டு வருகிறது என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, ‘தரிசு நிலங்களில் கருவேல மரங்கள் ஆழமாக வேரூன்றி, அடுத்தடுத்து வளர்ந்து கருவேல மரக்காடுகளாக வளர்ந்துவிடுகின்றன. இதனால் அப்பகுதி நிலத்தடி நீர் வேகமாக உறிஞ்சப்பட்டு, அங்குள்ள நிலங்களில் உவர்ப்பு தன்மை ஏற்படுகிறது. இதனால் அங்கு நெல் உள்ளிட்ட எந்த உணவு பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்காது.

மேலும், அப்பகுதி நிலங்கள் பாளம் பாளமாக வெடித்து விடுகின்றன. எனவே, கருவேல மரங்களை மேம்போக்காக வெட்டி அகற்றாமல், அவற்றை வேரோடு வெட்டி அகற்ற வேண்டும். இல்லையெனில், அப்பகுதியின் பசுமை தன்மையை முற்றிலும் அழித்துவிடும். இதுதவிர, தற்போது கொத்துமல்லி உள்ளிட்ட பல்வேறு கீரை வகைகளுடன் பார்த்தீனிய வகை விஷச் செடிகளும் வளர்கின்றன. இவை மற்ற கீரைகளுடன் கலந்து விடுவதால், அவற்றை உண்பவர்களுக்கு நாளடைவில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இத்தகைய விஷச் செடிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அவற்றை உடனடியாக களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் நீராதாரங்களை உறிஞ்சி வரும் கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதிமுக தலைவர் வைகோ உட்பட பல்வேறு தரப்பினர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற வழக்கு விசாரணையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இதுவரை 10 சதவிகித மரங்களே அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் 15 நாட்கள் கால அவகாசத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதேபோல், இதுதொடர்பாக 2 மாதங்களுக்குள் தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. வர்தா சூறாவளி புயலில் விழுந்த பிரமாண்ட மரங்களுக்கு பதிலாக, ஆளுங்கட்சி தரப்பில் 69 லட்சம் மரக்கன்றுகளை நடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த காலங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு போதிய தண்ணீர் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படாததால், அவை அனைத்தும் கருகி காய்ந்துவிட்டன.

அந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து, அனைத்து தரப்பினரும் வளர்த்திருந்தாலே, தற்போது தமிழகம் முழுவதும் பசுமையாக மாறியிருக்கும். ஏற்கெனவே நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, புதிய மரக்கன்றுகள் நடுவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு பகுதியிலும் ஒரு வீட்டுக்கு 3 மரங்களை கொடுத்து, அவற்றை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும் என்று பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்.
தற்போதைய வறட்சி நிலை தொடர்ந்து நீடித்தால், எதிர்காலத்தில் நாம் அனைவரும் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டருடன் அலையவேண்டி இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இவற்றை தவிர்க்க, தமிழகம் முழுவதும் பயனுள்ள மரங்களை நட்டு பராமரிப்பதில் அனைத்து தரப்பினரும் முன்வருவார்களா? இவ்விஷயத்தில் தமிழக அரசும் தீவிர நடவடிக்கை எடுக்குமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>