தமிழகத்துக்கு உரிய அளவில் காவிரிநீர் கிடைக்குமா? : கண்காணிப்பு குழு இன்று கூடுகிறது

daily_news_8053203821183

பெங்களூரு : காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழு இன்று டெல்லியில் கூடுகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். இதில் பாசன ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆகஸ்ட் மாதம் வரை வழங்க வேண்டிய 94டிஎம்சி தண்ணீரில் 50.052 டிஎம்சி கர்நாடகா தரவில்லை. இதனால், தமிழகத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை. சம்பாவும் சாகுபடி செய்ய முடியாதநிலை ஏற்பட்டதால் தமிழக அரசு 50.052 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரை கணக்கிட்டு 10 நாட்களுக்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக வரும் 16ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. இந்த உத்தரவை ஏற்று கர்நாடக அரசு கடந்த 6ம் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் உள்ள விவசாயிகளும், அனைத்து அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் காவிரி கண்காணிப்பு குழுவிடம் தமிழக அரசும், கர்நாடக அரசும் மனு செய்துள்ளன. தமிழக அரசு மேலும் தண்ணீர் திறந்து விடும்படி கேட்டு உள்ளது. கர்நாடக அரசோ தங்களுக்கு குடிநீருக்கு தான் தண்ணீர் உள்ளது. உயர்நிலை அதிகாரிகளைக்கொண்டு அணையை ஆய்வு செய்து கொள்ளலாம் என கூறி உள்ளது.

இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஆய்வு நடத்துவதற்காக டெல்லியில் இன்று காலை காவிரி கண்காணிப்பு குழு கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர் வளத்துறை செயலர் சசிசேகர் தலைமையில் நடக்கிறது. இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை அதிகாரிகள் பங்கேற்று தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் ராமமோகனராவ், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு ஆலோசகர் சுப்ரமணியம் ஆகியோரும், கர்நாடகா சார்பில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலர் அரவிந்த் ஜாதவ், அரசு தலைமை வக்கீல் மதுசூதன் நாயக் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று நடைபெறும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் எடுத்து வைக்கப்படும் வாதத்தின் அடிப்படையில்தான் கண்காணிப்பு குழு ஒரு அறிக்கை தயாரித்து உச்ச நீதிமன்றத்தில் அளிக்கும். அந்த அறிக்கையின்படி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்பதால் கண்காணிப்பு குழுவில் வைக்கும் வாதம் மிக முக்கியமானது. இதன் மூலம் தங்கள் தரப்புக்கு நியாயம் கிடைக்கும் என தமிழகம், கர்நாடக அரசுகள், விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

* தமிழகத்துக்கு கர்நாடகா, இம்மாதம் மட்டும் 40 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்.
* ஆகஸ்ட் வரை வழங்க வேண்டிய 94டிஎம்சி தண்ணீரில் 50 டிஎம்சி தரவில்லை.
* வினாடிக்கு 15,000 கனஅடி நீர் 10 நாட்களுக்கு திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>