தஞ்சை சட்டமன்ற இடைத் தேர்தல்: கடும் போட்டியில் திமுக மற்றும் அதிமுக

2016-15-11-17-37-59

தஞ்சை
தஞ்சாவூர், தஞ்சாவூரைப் போலவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, சட்டமன்ற உறுப்பினர் இறந்துபோனதால் இடைத் தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில்தான் தேர்தல் நடக்கிறது என்பதால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்கள் முழு பலத்தையும் இந்தத் தொகுதிகளில் காண்பித்து வருகின்றன.

தஞ்சாவூர் தொகுதியைப் பொறுத்தவரை 17 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் உண்மையான போட்டி என்பது அதிமுக வேட்பாளர் எம். ரெங்கசாமிக்கும், திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கும் இடையில் தான்.
அஞ்சுகம் பூபதி

1952லிருந்து 14 முறை தேர்தலைச் சந்தித்திருக்கும் இந்தத் தொகுதியில் திமுக தான் அதிகபட்சமாக 8 முறை வெற்றிபெற்றிருக்கிறது. 1962ல் திமுகதலைவர் மு. கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியும் கூட. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 4 முறை தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. 1991, 2011 என இரு முறை அதிமுக இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது.
தஞ்சாவூர் தொகுதியில் ஆண்கள் சுமார் 1,29,000 பேரும் பெண்கள் சுமார் 1,38,000 பேருமாக மொத்த வாக்காளர்கள் சுமார் இரண்டு லட்சத்து 68 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
பாரம்பரியமாக திமுகவே அதிக முறை வெற்றிபெற்ற இந்தத் தொகுதியென்பதால் இந்த முறை இந்தத் தொகுதியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக. அதனால், 20 மாவட்டச் செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் தேர்தல் வேலையை கவனித்துவருகிறார்கள்.

திமுகவுக்காக களத்தில் தீவிரமாக பணியாற்றும் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு
தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொகுதியிலேயே தங்கியிருந்து தேர்தல் வேலைகளைக் கவனித்துவருகிறார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட தற்போதைய திமுக எம்எல்ஏக்களும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
2016 சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் சகோதரருக்கு இந்தத் தொகுதி கேட்டு தரப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கே.என். நேரு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருந்தபோதும் பழனி மாணிக்கமும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
திமுக வேட்பாளரான டாக்டர் அஞ்சுகம் பூபதி, தான் எளிமையானவர் என்பதையும் படித்தவர் என்பதையும் முன்வைத்து வீடுவீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்துவருகிறார்.
தஞ்சை தொகுதியில் உள்ள பிரச்சனைகள் என்ன?
தஞ்சாவூர் தொகுதியைப் பொறுத்தவரை, பல இடங்களில் குடிதண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துவருகிறது. பல இடங்களில் பாதாளச் சாக்கடை இல்லாதது, கழிவு நீர், மழை நீர் செல்ல வழியில்லாதது, தஞ்சாவூரின் முக்கியப் பூங்காவான சிவகங்கைப் பூங்கா மோசமான நிலையில் இருப்பது, பெரிய கோவிலைச் சுற்றியுள்ள அகழி சுத்தப்படுத்தப்படாதது என்பது போன்ற பிரச்சனைகளை மக்கள் முன்வைக்கிறார்கள்.
வல்லம் போன்ற நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனையைச் சந்தித்துவரும் இடங்களில், கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீருக்கு ஏற்பாடு செய்திருப்பது முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக வேட்பாளருமான ரெங்கசாமிக்கு சாதகமான அம்சம். சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு சற்று முன்பாக சாலைகள் புதிதாகப் போடப்பட்டிருக்கின்றன. இதையும் தன் பணியாக கணக்குக்காட்டிவருகிறார் ரெங்கசாமி.
தவிர, அதிமுக வேட்பாளருக்காக எஸ்.பி. வேலுமணி, ஆர். காமராஜ், விஜய பாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ். மணியன் என 9 அமைச்சர்கள் தீவிரமாக வேலைபார்த்து வருகிறார்கள். திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, தொண்டர் படையுடன் வீடுவீடாகச் செல்கிறார் என்றால், ரெங்கசாமி பெரும் வாகன ஊர்வலத்துடன் வாக்காளர்களை அசர வைக்க முயற்சிக்கிறார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா?
பணம் பெருமளவில் புழங்கிய காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் தேர்தல் ஆணையம் கூடுதலாக கண்காணிப்பது, சில நாட்களுக்கு முன்பாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டது ஆகியவை தொகுதிக்குள் பணப் புழக்கத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. வேட்பாளருக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்கப்படுவதில்லை. ஆனால், பெயர்கள் சிரத்தையுடன் குறித்துக்கொள்ளப்படுகின்றன.
சரத்குமார் போன்ற அதிமுக-வின் தோழமைக் கட்சித் தலைவர்களும் அதிமுகவிற்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தே.மு.தி.க. வேட்பாளர் அப்துல்லா சேட், வெளிப்படையாகவே புலம்பினார். “திமுகவும், அதிமுகவும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடனேயே பண விநியோகத்தைச் செய்கின்றன. இது தொடர்ந்தால் நீதிமன்றத்திற்குச் சென்று மீண்டும் தேர்தலை நிறுத்தும்படி கோருவேன்” என்கிறார் அவர்.
தன் செல்வாக்கை நிரூபிக்க களத்தில் இறங்கியுள்ள தேமுதிக
திமுக, அதிமுக-வின் பண பலம், ஆள் பலத்திற்கு மத்தியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த தே.மு.தி.கவும் கடுமையாக முயற்சித்து வருகிறது. அக்கட்சியின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அப்துல்லா சேட்டிற்காக தீவிரமாக வாக்குகளைக் கோரிவருகிறார். அதிமுக வேட்பாளருக்கு நடப்பதைப் போலவே, பிரேமலதா வரும்போதும் குடங்களில் ஆரத்தி எடுப்பது, பூ தூவவது போன்றவை நடக்கின்றன.
காவிரியில் தண்ணீர் வராதது, திராவிடக்கட்சிகளின் ஊழல் ஆகியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரத்தை செய்துவருகிறார் பிரேமலதா.
இவர்கள் தவிர, பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் எம்.எஸ். ராமலிங்கம், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் குஞ்சிதபாதம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நல்லதுரை ஆகியோரும் போட்டியில் இருக்கிறார்கள்.
தஞ்சாவூரில் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகள் இந்த முறை அப்படியே திமுகவுக்குக் கிடைக்கலாம் என்பது அக்கட்சிக்கு ஒரு சாதகமான அம்சம்.
ஆனால், ரெங்கசாமிக்கு பெரியதாக கெட்ட பெயர் இல்லாதது, மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்ட கடிதம், தங்களுடைய பணபலம், எல்லாவற்றுக்கும் மேலாக ஆளும்கட்சியாக இருப்பது ஆகியவற்றால் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது அதிமுக
இதற்கிடையில், திமுக மற்றும் அதிமுக பெருமளவில் பணம் கொடுத்துவருவதால் தஞ்சாவூர் உட்பட மூன்று தொகுதிகளிலும் தேர்தலை மீண்டும் ஒத்திவைத்து வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரியிருக்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>