டெல்லியில் போராடுபவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், மாணவர்கள் போராட்டம்

PicsArt_03-31-09.27.47 |

பெரம்பலூர்: வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில், உடலில் இலை தழைகளை கட்டி கொண்டும், காய்ந்த வாழைத்தார்களுடனும் வந்து கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி, கலெக்டர் அலுவலக வாயிலில் கருகிய வாழைத்தார்களுடன் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். திருவாரூர்: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கிய உடன் அனைத்து விவசாயிகளும் எழுந்து நின்று, டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்துப் பேசவேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்: திருச்சி மாவட்டம் துறையூரில் தேசிய தென்னிந்திய நதிகள் அமைப்பு சங்க மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துறையூர் பேருந்து நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் விவசாயிகள், கடந்த 28ம் தேதி முதல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் சேவை இயக்க அகில இந்தியத் தலைவர் தங்க சண்முக சுந்தரம்(40), தங்கை மகன் ராகுலுடன்(11) நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு உடலில் சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினார். பிறகு விவசாயிகளின் கோரிக்கைதொடர்பாக மனு அளித்து சென்றார். இதேபோல், நேற்று அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் 2 ஆயிரம் மாணவர்கள் பேரணி நடத்தினர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் 30 மாணவர்கள், கோவை டவுன்ஹால் கோனியம்மன் கோயில் முன்பு நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 3 பெண்கள் உள்பட 28 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

செல்போன் டவரில் ஏறி போராடியவர்கள் கைது
சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள 105 அடி உயர செல்போன் டவர் முன்பு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கவியரசன் தலைமையில் இளைஞர்கள் நேற்று காலை குவிந்தனர். பின்னர் திடீரென செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உதவி கமிஷனர் ராமசாமி மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் வந்து, அனுமதி பெற்று கலெக்டர் அலுவலக பகுதியில் போராட்டம் நடத்துமாறு அவர்களிடம் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் கீழே இறங்கினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதேபோல், அஸ்தம்பட்டி திருவள்ளுவர் சிலை அருகே மாணவர் எழுச்சி இயக்கம் அமைப்பை சேர்ந்த 12 பேர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டவுன் போலீசார் வந்து, 12 பேரையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>