டெல்டாவில் சம்பா சாகுபடி கேள்விக்குறி: சென்னையில் 13ம் தேதி விவசாயிகள் ஆலோசனை

திருச்சி: காவிரி நீர் இதுவரை கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் 12லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. காவிரி  நீர் கோரி சென்னையில் வரும் 13ம் தேதி விவசாயிகள், அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

திருச்சி: காவிரி நீர் இதுவரை கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் 12லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. காவிரி நீர் கோரி சென்னையில் வரும் 13ம் தேதி விவசாயிகள், அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

திருச்சி: காவிரி நீர் இதுவரை கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் 12லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. காவிரி நீர் கோரி சென்னையில் வரும் 13ம் தேதி விவசாயிகள், அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. ஜூன் கடைசியில் சில நாட்கள் பலத்த மழை பெய்தது. ஹேரங்கி அணை முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் கிருஷ்ணராஜசாகருக்கு வந்தது. அதன்பிறகு மழையின் வேகம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் குறைந்தது. கடந்த மாதம் கடைசி வாரம் கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை(மொத்த உயரம் 124.80 அடி) தொட்டது. கேரளாவில் வயநாடு பகுதியில் பெய்யும் மழை மூலம் நிரம்பும் கபினி அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வந்தது. தற்போது மேற்கண்ட பகுதிகளில் மழை குறைந்ததால் கபினியிலும், கிருஷ்ணராஜசாகரிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

கிருஷ்ணராஜசாகர் நீர்மட்டம் 100 அடியில் இருந்து 98 அடியாகவும், கபினி அணை நீர்மட்டமும் 2,284 அடியில் இருந்து 2,274 அடியாகவும் குறைந்து விட்டது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வந்த நிலையில், கர்நாடக அரசு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தரவேண்டிய 44 டிஎம்சி தண்ணீரில் 32 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு தரவில்லை. வெறும் 12 டிஎம்சி மட்டுமே தந்து உள்ளது. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா, தமிழகத்துக்கு 50 டிஎம்சி தண்ணீர்தர வேண்டும். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகஉள்ளது. மழை இதே நிலையில் நீடித்தால், இந்த மாதம் தரவேண்டிய 50 டிஎம்சி தண்ணீரில் 10 டிஎம்சி கூட கர்நாடகா தருமா என்பது சந்தேகம் தான். ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதியும், சம்பா சாகுபடிக்காக ஜூலை 14ம் தேதியும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

ஆனால் காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்து விடாத கர்நாடகாவின் பிடிவாதத்தால் பல ஆண்டுகளாக இந்த தேதிகளில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இந்த ஆண்டும் இதே போல் திறக்கப்படவில்லை. ஆடிபெருக்குக்காக குறைந்த அளவில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தஞ்சை, திருவையாறுக்கு மட்டும் வந்தது. கடைமடை பகுதிகளுக்கு வரவில்லை. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூரில் சம்பா சாகுபடிக்காக விவசாயிகள் மேட்டூர் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். செப்டம்பர் முதல் வாரத்தில் நாற்று நட்டால் வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

செப்டம்பரில் நடவு செய்வதற்கு இப்போதே நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஆனால் மேட்டூர் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 61.110 அடியே(25.521 டிஎம்சி) உள்ளது. இந்த தண்ணீரைக்கொண்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்வது கேள்விக்குறியாக உள்ளது. குறைந்த பட்சம் 70 டிஎம்சி தண்ணீர் சம்பாவுக்கு தேவைப்படும். பின்னர் வடகிழக்கு பருவ மழையும் கைகொடுக்கும். ஆனால் தற்போதைய நிலையில் சம்பா நாற்று விடலாமா வேண்டாமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் பரிதவிக்கும் விவசாயிகள் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் உதவியுடன் காவிரி நீரை பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைகண்டித்தும், உடனடியாக தண்ணீர் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று தஞ்சையில் 94 விவசாய சங்கங்கள் இணைந்த கூட்டு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக காவிரி நீர் கோரி சென்னையில் வரும் 13ம் தேதி விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஏற்பாடு செய்து வருகிறார். அவர் கூறியதாவது: 15 நாட்களுக்குள் சம்பா சாகுபடி மேற்கொள்ள வேண்டும், இல்லை என்றால் சாகுபடி கேள்விக்குறியாகிவிடும். எனவே மத்திய அரசு உடனடியாக கர்நாடக அணையிலிருந்து 94டிஎம்சி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடந்துவரும் சட்டசபை கூட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கர்நாடக தண்ணீர் தராவிட்டால் காவிரி வறண்டு, உணவு உற்பத்தி பாதிக்கும், விவசாயிகள் வாழ்வாதாரம் அழியும், குடிநீர் ஆதாரம் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. சென்னையில் வரும் 13ம்தேதி நாங்கள் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். எனது தலைமையில் 7 பேர் கொண்ட குழு சென்னையில் முகாமிட்டு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைக்க உள்ளோம். 13ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம். எனவே இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு பாண்டியன் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>