டி.வி. தாய் வீடு .. சினிமா புகுந்த வீடு .. நடிகை சாக்ஷி தன்வர்.

201707011559212156_TV-Mother-houseCinema-enter-House-_SECVPF

சின்னத்திரையில் வட இந்திய மொழிமாற்றத் தொடர்களுக்கு மவுசு அதிகரித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி தன்வர். ‘உள்ளம்கொள்ளைபோகுதே’ போன்ற தொடர்களில் உணர்ச்சிகரமாக நடித்து, பெண்களை கவர்ந்த இவர் ‘தங்கல்’ இந்தி சினிமா மூலம் திரை உலகில் காலடி எடுத்துவைத்தார். அமீர்கானுடன் இணைந்து நடித்த அந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றி பெற்ற சாக்ஷி தன்வர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

‘தங்கல்’ என்றால் போராட்டம் என்று அர்த்தம். உங்கள் நிஜவாழ்க்கையில் போராட்டத்தை சந்தித்திருக்கிறீர்களா?

எதையாவது ஒன்றை சாதிக்கவேண்டும் என்பதற்காக எல்லா மனிதர்களும் போராடுகிறார்கள். அதனால் போராட்டம் என்பது மனித வாழ்க்கையில் பொதுவானது. போராடும் பலத்தோடு இருப்பவர்களால்தான் வாழ்க்கையில் நீடிக்கமுடியும். போராட்டம் என் வாழ்க்கையிலும் உண்டு. அதையெல்லாம் கடந்து வரவேண்டும் என்றுதான் யோசிப்பேன். அதை பலரிடமும் சொல்லி அனுதாபம் தேட நினைத்ததில்லை. அதற்கு அவசியமுமில்லை.

ஒரு நடிகைக்கு தேவையான அடிப்படை தகுதி என்ன?

சகிப்புத்தன்மைதான் முதல் தேவை. சின்னச்சின்ன வி‌ஷயங்களைகூட பெரிய பிரச்சினையாக நினைத்து புலம்பக்கூடாது. புலம்பினால், நம்முடைய தன்னம்பிக்கை குறைந்துவிடும். ஒரு நடிகைக்கு நடிப்பு முக்கியமில்லை. இயல்புத்தன்மைதான் முக்கியம். நடிப்பு என்று தெரியாத அளவிற்கு நம் நடிப்பு இயல்பாக இருக்கவேண்டும். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் பெண்மணியாக திரையிலும் உலாவரவேண்டும்.

அமீர்கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

நான் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத வாய்ப்பு அது. அவர் அற்புதமான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு காட்சியும் பெருமையானது.

அவர் உங்களை சிறந்த நடிகை என்று பாராட்டியது பற்றி..?

மற்றவர்களை மதிக்கும் பண்பும், பணிவும் அவரிடம் இருப்பது எனக்குப் பிடித்திருந்தது. எனக்கு ‘ரீடேக்’ வராமல் இருந்ததற்கு அவரும் ஒரு காரணம். நம்மோடு இணைந்து நடிப்பவர்கள் நமது நடிப்பையும், உணர்வு களையும் புரிந்து நடிக்கவேண்டும். அப்போதுதான் காட்சி முழுமைபெறும். அந்த வகையில் அமீர்கான் ஒத்துழைத்து நடித்தார்.

‘தங்கல்’ படத்தின் வசனங்கள் வழக்கமான இந்தியிலிருந்து மாறுபட்டிருந்தது. அதை எப்படி பேசி சமாளித்தீர்கள்?

பொதுவாக சினிமாவில் வசனம் பேச பயிற்சி எதுவும் தரப்படுவதில்லை. இதற்கு பயிற்சி தந்தார்கள். அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எனது பயிற்சியாளர் பெயர் சுனிதா. தினமும் என் வீட்டிற்கு வந்து மூன்று மணி நேரம் பயிற்சியளித்தார். நான் முன்பு சிறிது காலம் டெல்லியில் இருந்தேன். அப்போது இந்த மொழி உச்சரிப்பு எனக்கு ஓரளவு பரிச்சயப்பட்டிருந்தது. கொஞ்சம் அறிவு இருந்தது.

ஒரு மொழியை கேட்டு புரிந்துகொள்வது வேறு. நாமே பேசுவது வேறு. இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் தயாரானது பெரிய கதை. சுனிதா எனக்கு வசனங்களை பேசி சி.டி.யில் பதிவு செய்து அனுப்பிவிடுவார். நான் நேரம் கிடைக்கும்போது அதை கேட்டு, பேசிப் பார்ப்பேன். படப்பிடிப்பிற்கு போகும்போது அன்றைய வசனங்களை டேப்பில் ஓடவிட்டு காரில் பேசிக்கொண்டே போவேன். டிரைவர் ‘என்ன நடக்கிறது இங்கே? தனியாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வருகிறீர்களே’ என்று வேடிக்கையாக கேட்பார். வித்தியாசம் என்பது நடிப்பில் மட்டுமல்ல வசன உச்சரிப்பிலும் தேவைதான்.

சினிமா நடிப்பிற்கும், டெலிவி‌ஷன் நடிப்பிற்கும் என்ன வித்தியாசம்?

டி.வி. நடிப்பிற்காக அதிகம் உழைக்க வேண்டி யிருக்கிறது. தினமும் பல மணி நேரம் உழைத்து, வாரத்தில் 4, 5 எபிசோட் முடிப்போம். கதையின் அடுத்த நிலை என்னவென்பதே தெரியாது. எல்லா வேலைகளையும் அவசர கதியில் செய்யவேண்டி இருக்கும். சினிமாவில் ஆறு மாதங்கள் படப்பிடிப்பு நடக்கும். நம் நடிப்பை திரையில் பார்க்க கொஞ்சம் காத்திருக்கவேண்டும். ஆனால் தொலைக்காட்சியில் காலையில் எடுக்கும் காட்சி, மாலையில் ஒளிபரப்பாகிவிடும். நம் நடிப்பை பார்த்து திருத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் விமர்சனமும் அடுத்த நாளே கிடைத்துவிடும். இரண்டும் வெவ்வேறு அனுபவம்.

தொலைக்காட்சி ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர் களுக்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு தொலைக்காட்சி ரசிகர்கள் அதிகம். பட்டிதொட்டிகளிலும் டி.வி. வந்துவிட்டது. சினிமாவை தியேட்டரில் வந்து பார்ப்பவர்கள் மட்டும்தான் ரசிப்பார்கள். ஆனால் சினிமா உலகெங்கிலும் வலம் வரக்கூடியது. தொலைக்காட்சிக்கு ஒரு எல்லையுண்டு.

தொலைக்காட்சி, சினிமா இரண்டில் பிடித்தது எது?

தொலைக்காட்சி தாய்வீடு. சினிமா புகுந்த வீடு. இரண்டுமே மரியாதைக்குரியது.

நடிகையாகியிருக்காவிட்டால்..?

எனக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் அப்பா ஓய்வுபெற்ற சி.பி.ஐ. அதிகாரி. அவர், நான் டி.வி.யில் கலெக்டராக நடித்ததை பார்த்து சந்தோ‌ஷப்பட்டார். நிஜமாகவே அப்படியாகியிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>