ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்; பி.எச்.பாண்டியன்

0109

ஓ.பன்னீர்செல்வம் அணியின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் சென்னை அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதி வீட்டிலேயே கீழே தள்ளிவிடப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்’, என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியின் ‘டிஸ்சார்ஜ்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை நான் சொல்லவில்லை. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியை ‘1066’ என்ற எண்ணில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஒருவர் தொடர்புகொண்டு ‘ஆம்புலன்சு அனுப்புங்கள்’ என்று கேட்டு இருக்கிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும். போயஸ் கார்டனிலேயே கண்காணிப்பு கேமரா இருக்கிறது. அங்கே இருந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வரையிலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வெளியிடவேண்டும். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டால்தான் ஜெயலலிதா எப்படி கொண்டு செல்லப்பட்டார்?, எந்த வேனில் அவர் சென்றார்? என்ற முழுமையான உண்மைகளை தெரிந்துகொள்ளமுடியும்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்த 27 கண்காணிப்பு கேமராக்கள் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு அகற்றப்படுகிறது. இந்த கேமராக்களை அகற்றுவதற்கு உத்தரவு போட சொன்ன அதிகாரி யார்? யார் இந்த உத்தரவு போட்டது? என்பதையும் தெரிவிக்கவேண்டும்.

2016–ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் பிரபல டாக்டர் சாந்தாராம். அவர், துணை வேந்தராக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒரு கருத்தை சொன்னார். அப்போது, ‘‘நீங்கள் போயஸ் கார்டனில் பெறுகின்ற சிகிச்சைகள் ஒரு ‘ஸ்ட்ரோக்’ (பக்கவாதத்தை) உங்களுக்கு வரவழைக்கும்’’, என்று கூறினார்.

ஆனால் மறுநாளில் இருந்து அந்த டாக்டரை போயஸ் கார்டனில் நுழைய விடவில்லை. அவரை வெளியேற்றிவிட்டனர். இதற்கும் பதில் வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டில் போடப்பட்ட வழக்கில் அப்பல்லோ ஆஸ்பத்திரி ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கிறது. அதில், ‘கடந்த 5–ந்தேதி ஜெயலலிதாவுக்கு இயற்கையாக உயிரை நிறுத்துவதற்கு மருத்துவ முடிவு எடுக்கப்பட்டது’, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு அனுமதி வழங்கியது யார்? இதுவரை வழங்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்த சொன்னது யார்? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

2015–ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மத்திய அரசு ரகசியமாக ஒரு கடிதத்தை அனுப்புகிறது. அதில், ‘ஜெயலலிதாவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் செயின்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் பாரா ஆம்புலன்சு ஹெலிகாப்டர் வந்து இறங்கியிருக்கிறது’, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா சிங்கப்பூர் செயின்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படவில்லை. இதை தடுத்தது யார்? இந்த முடிவை எடுத்தது யார்? எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவ அறிக்கை மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் எய்ம்ஸ் அறிக்கை இதுவரை வரவில்லை.

ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, இசட் பிரிவு பாதுகாப்பு படையினரை ஆஸ்பத்திரிக்கு உள்ளே வரவிடாமல் யார் தடுத்தது என்பது தெரியவேண்டும்.

நாங்கள் கூறுவது வதந்திகளோ, சந்தேகங்களோ இல்லை. உண்மை. ஜெயலலிதா மரண விவகாரத்தில் நாங்கள் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். இதைத்தவிர வேறு எதையும் இப்போது சொல்லமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது, பல விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த எல்லா சிகிச்சைகளையும் மேற்கொள்ள அனுமதியை கொடுத்தது யார்?

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார்’ என்றெல்லாம் கூறினார்கள். ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதா அதுவும் முதல்–அமைச்சராக இருக்கக்கூடிய சூழ்நிலையில், அவருக்கு கொடுக்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் ‘பாரன்சிக் லேப்’புக்கு எடுத்துச்சென்று ஆய்வு செய்து, அதற்கு பின்பு தான் அவருக்கு கொடுக்கப்பட வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்.

ஜெயலலிதாவின் கன்னத்தில் 4 ஓட்டைகள் இருந்தன. அந்த ஓட்டைகளுக்கு ஆஸ்பத்திரி கொடுத்த விளக்கம், ‘பிளாஸ்டர்’ ஒட்டப்பட்டதால் அதன் காரணமாக ‘ஸ்கின் பீலிங்’ ஏற்பட்டிருக்கிறது, என்பது ஆகும்.

ஆனால் ‘எம்பாமிங்’ செய்த டாக்டரோ அதை நான் பார்க்கவே இல்லையே என்று கூறியிருக்கிறார். அந்தவகையில் ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த 4 ஓட்டைகளுக்கு காரணம் என்ன? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது? என்பதை யாரும் வெளிக்கொண்டு வரவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் 4–ந்தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா மரணம் அடைந்திருக்கிறார். அதன் பிறகு இரவு 9.30 மணியில் இருந்து மறுநாள் இரவு 9.30 மணி வரை அவருக்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த பதிலும் இல்லை. அதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அதற்குரிய படிவம்–ஏ மற்றும் படிவம்–பி ஆகிய அங்கீகார சான்றிதழ்களில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த டாக்டர் பாலாஜி என்பவர் விசாரிக்கப்பட வேண்டும். அப்படி அவர் விசாரிக்கப்பட்டால் தான் மேற்கொண்டு என்னென்ன கையெழுத்துகள் அங்கு வாங்கப்பட்டது? என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

‘பிசியோதெரபிஸ்ட்’ என்பதை பொறுத்தவரை, அப்பல்லோ ஆஸ்பத்திரி உலக தரமான ஆஸ்பத்திரி ஆகும். அப்படி இருக்கும் போது எதற்காக சிங்கப்பூரில் இருந்து ‘பிசியோதெரபிஸ்ட்’ வரவழைக்கப்பட வேண்டும்? அதற்கு அனுமதி அளித்தது யார்? எதற்காக இவையெல்லாம் நடந்தது? போன்ற சந்தேகங்கள் உள்ளன. இந்த மர்ம முடிச்சுகளுக்கு தகுந்த பதில்கள் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>