ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- பி.எச்.பாண்டியன்

Pichumani_Pandian_3129300f

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் பி.எச்.பாண்டியன். இந்த சந்திப்பின்போது அவருடன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பி.எச்.பாண்டியன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருக்கிறது. அவர் கீழே தள்ளிவிடப்பட்டாரா என்பதை மருத்துவமனை தரப்பு விளக்க வேண்டும்.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் அவர் எந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்பது மக்களுக்குத் தெரியவரும்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையிலிருந்து 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்களை அகற்ற உத்தரவிட்டது யார் என்பது தெரிய வேண்டும்.

கடந்த 1991-ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவுக்கு என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை. என்.எஸ்.ஜி. வீரர்களை பாதுகாப்புப் பணியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு உத்தரவிட்டது யார் என்பது தெரிய வேண்டும்.

மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சென்னை விமான நிலையத்துக்கு மத்திய அரசு ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பியதாகத் தெரிகிறது. ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டும், ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க தேவையில்லை என முடிவு செய்தது யார் என்பது தெரிய வேண்டும்.

அப்போலோ மருத்துவமனையிலேயே உயர்தர பிசியோதெரபி சிக்கிச்சை அளிக்கும் நிபுணர்கள் இருக்கும்போது சிங்கப்பூரிலிருந்து பிசியோதெரபிஸ்டுகள் வரவழைக்கப்பட்டது ஏன்?

வேட்பாளர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் ‘பி’ படிவத்தில் ஜெயலலிதா கைநாட்டு இடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். இதேபோல், வேறு என்னென்ன ஆவணங்களில் கைநாட்டு பெறப்பட்டன என்பது அப்போதுதான் தெரியவரும்.

ஜெயலலிதாவுக்கு எக்மோ சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்தது யார் என்பது தெரிய வேண்டும்.

அதேபோல், அப்போலோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட எக்மோ மருத்துவ சிகிச்சையை நிறுத்தி அவரது உயிர் இயற்கையான முறையில் பிரிய உரிய அனுமதி பெறப்பட்டது” எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தால், யார் அந்த அனுமதியை அளித்தது என்பது விளக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதாவின் முகத்தில் உள்ள 4 துளைகள் எதற்காக இடப்பட்டன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய, பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், “பொதுவாக, நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்த வேண்டும் என்றால், அவரது ரத்த சொந்தங்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற வேண்டும். ஜெயலலிதா, அரசு நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கக் கூடியவர் என்பதால் தலைமைச் செயலாளர் மற்றும் அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் சம்மதம் பெற வேண்டும்.

ரத்த சொந்தங்கள் நிச்சயமாக ஜெயலலிதாவை பார்க்கவில்லை. எனவே, சிகிச்சையை நிறுத்த யார் முடிவெடுத்தது, அவருக்கு யார் அதிகாரம் அளித்தது என்பது குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்” என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>