ஜி.எஸ்.டி வருகை… முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்:மு.திலிப்

சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜி.எஸ்.டி வரி நடைமுறைகள், இந்தியாவில் தொழில் புரிவதற்கான சூழலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், தொழில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்’ எனப் பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறிவருகின்றனர். நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறைபடுத்தப்படும் என்பதால், பல்வேறு தொழில் துறைகளுக்குச் சாதகமான சூழல் உருவாக வாய்ப்பிருக்கிறது. இதனால் குறிப்பிட்ட சில துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடையவிருக்கின்றன. நிறுவனங்களின் இந்த வளர்ச்சி, பங்குச் சந்தையிலும் நிச்சயம் பிரதிபலிக்கும். எனவே, ஜிஎஸ்டி-யினால் பலன் அடையப்போகும் துறைகள் என்னென்ன, அந்தத் துறைகளில் முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய நிறுவனப் பங்குகள் எவை என்பதைப் பற்றி, ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

p10aa

“ஜி.எஸ்.டி நாட்டின் பொருளாதாரத்துக்குப் பலவிதங்களில் சாதகமாக இருக்கும். வரி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுவதால் தொழில் துறைகளின் செயல்பாடுகள் வேகமடையும். மேலும், ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் தொழில் செய்யும் அனைவரும் ஜி.எஸ்.டி-க்குள் வந்துவிடுவார்கள். எனவே, தொழில் துறையின் வளர்ச்சி மற்றும் தொழிலதிபர் களின் வருவாயில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். இதனால் வரி வருவாயின் வளர்ச்சி அதிகரிக்கும். வரி வருவாய் பல்வேறு நலத் திட்டங்களுக்காகவும் மேம்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படலாம். ஜி.எஸ்.டி வரிச் சட்டம் அமல்படுத்துவதால், பல நல்ல பலன்கள் காத்திருக்கின்றன.

குறிப்பாக, முறைப்படுத்தப்படாத தொழில் பிரிவுகளின் சந்தை மதிப்பு அதிகம் உள்ள துறைகளுக்கு, ஜி.எஸ்.டி-யால் பலன்கள் சற்று அதிகமாகவே கிடைக்கும். எப்படியெனில், ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்படுவதால், முறைப் படுத்தப்படாத (Unorganished) நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் முறைப்படுத்தப்பட்ட (Organished) நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இடையிலான விலையில் இருக்கும் வித்தியாசம் குறைவாகவே இருக்கும். விலையில் அதிக வித்தியாசம் இல்லாதபோது வாடிக்கையாளர் களும் நுகர்வோர்களும் பிரபலமான பிராண்டட் தயாரிப்புகளையே வாங்க விரும்புவார்கள். அவற்றில்தான் தரம், வாரன்டி, கேரன்டி மற்றும் சிறப்பான சேவை போன்றவை கிடைக்கும்.

p10

இந்த மாற்றம், அந்தத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் ஏற்கெனவே பிரபலமாக உள்ள முறைப்படுத்தப்பட்ட துறை நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கும்; அவற்றின் நிதிநிலை மேம்படும். இந்த வளர்ச்சி, அந்த நிறுவனப் பங்குகளிலும் எதிரொலிக்கும்.

அப்படி முறைப்படுத்தப்படாத பிரிவுகளின் சந்தை மதிப்பு அதிகமுள்ள துறைகள் எனப் பார்க்கும்போது, பெயின்ட், பிளாஸ்டிக், பிளைவுட், ஃபேஷன் ஆடை விற்பனை நிறுவனங்கள் மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறைகள் முன்னிலையில் உள்ளன. பெயின்ட் துறையில் 40% முறைப்படுத்தப்படாத துறையின் சந்தை மதிப்பு உள்ளது. பிளைவுட் லேமினேட் துறையில் முறைப்படுத்தப்படாத பிரிவுகளின் சந்தை மதிப்பு 50 – 70% வரை இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல், பிளாஸ்டிக் துறையில் முறைப்படுத்தப்படாத பிரிவின் சந்தை மதிப்பு 50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி மசோதா அமல்படுத்தப்படுவதால், இந்தத் துறைகளில் உள்ள முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் நல்ல முறையில் பயனடையும்.

அப்படிப் பார்க்கும்போது, பிளைவுட் துறையில் செஞ்சுரி பிளை மற்றும் கிரீன் பிளை முன்னிலை வகிக்கின்றன. பிளாஸ்டிக் துறையில் நீல்கமல் கவனிக்கத்தக்க பங்காக உள்ளது. பெயின்ட் துறையில் ஏஷியன் பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ் நல்ல வளர்ச்சியடையும். பிசின், கோந்து உள்ளிட்ட துறைகளில் பிடிலைட் நிறுவனம் ஒற்றை ஆளாக முன்னிலையில் இருக்கிறது. ஆடை விற்பனை நிறுவனங்களில் கவனிக்கத்தக்கதாக அர்விந்த் உள்ளது.

செஞ்சுரி பிளை

பிளைவுட் துறையில் செஞ்சுரி பிளை முன்னிலை வகிக்கிறது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த விலையில் மூலப் பொருள்களைக் கொள்முதல் செய்கிறது. தேவை அதிகரிக்கும்போது அதை நிறைவேற்றும் திறன் இந்த நிறுவனத்திடம் உள்ளது. எனவே, இந்தப் பங்கினைக் கவனிக்கலாம். இரண்டு ஆண்டுகளில் இதன் இலக்கு விலை 450 ரூபாய்.

பிடிலைட்

பிசின், கோந்து உள்ளிட்ட துறைகளில் முன்னிலையில் இந்த நிறுவனமே உள்ளது. இந்தத் துறையில் முறைப்படுத்தப்படாத நிறுவனங்களே அதிகம். ஜி.எஸ்.டி. வரி நடைமுறையினால் ஏற்படும் பெரிய மாற்றம், இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக அமையும். ஓர் ஆண்டில் இந்தப் பங்கின் இலக்கு விலை ரூ.1,000.

நீல்கமல்:

பிளாஸ்டிக் ஃபர்னிச்சர் பிரிவில் 32 சதவிகிதச் சந்தை மதிப்பை, நீல்கமல் தன்வசம் வைத்துள்ளது. தற்போது ஜி.எஸ்.டி-யினால் பிளாஸ்டிக் துறையில் நீல்கமல் நிறுவனத்துக்கு, மேலும் சாதகமான சூழல் உள்ளது. எனவே, இந்த நிறுவனத்துக்கு வருங்காலத்தில் நல்ல தேவை உருவாக வாய்ப்புள்ளது. இதன் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், அடுத்த ஓர் ஆண்டில் நீல்கமல் பங்கு ரூ.2,500 வரை உயர வாய்ப்புள்ளது.

அஸ்ட்ரால் பாலி, பெர்ஜர் பெயின்ட், அர்விந்த்

இவை தவிர, அஸ்ட்ரால் பாலி நிறுவனப் பங்கு, ஒரு வருடத்தில் 950 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. பெயின்ட் நிறுவனப் பங்குகளில் பெர்ஜர் பெயின்ட் ஒரு வருடத்தில் ரூ.350 வரை செல்லலாம். ஆடை விற்பனை நிறுவனமான அர்விந்த், ஒரு வருடத்தில் 500 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

அண்மைக் காலத்தில் இந்த நிறுவனப் பங்குகளை வாங்குவதும், விற்பதும் அதிகமாக இருக்கும் என்பதால், ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளுக்கு இந்தப் பங்குகளின் நகர்வுகள் சற்று மோசமாக இருக்கலாம். ஆனால், இரண்டு ஆண்டுகள் அடிப்படையில் இவை நல்ல ஏற்றம் அடையும் என நம்பலாம்’’ என்று முடித்தார் ஏ.கே.பிரபாகர்.

ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை ஃபாலோ செய்யலாமே!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>