சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

Daily_News_jakkamma

திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11-06-2017) புதுக்கோட்டையில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

கேள்வி: அரசு சார்பில் குடிமராமத்து பணிகளுக்கு மேலும் 300 கோடி ஒதுக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. அதுபற்றி உங்களுடைய கருத்து?

தளபதி: ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் சரியான முறையில் செலவிடப்பட்டால் உண்மையிலேயெ சந்தோஷம் தான். ஆனால், இதுவரை அப்படி செலவு செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கமிஷன் தரக்கூடிய நிலையிலே ஒதுக்கப்படுகின்றதா என்ற அந்த கேள்வி மக்களிடத்திலே எழும்பியிருக்கிறது.

கேள்வி: தற்பொழுது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை நீங்கள் கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு வருகிறதே?

தளபதி: நான் அப்படியொரு முயற்சியில் துளியளவு கூட ஈடுபடவில்லை. அவர்களுடைய ஆட்சியை அவர்களே கவிழ்த்துக் கொள்ளும் சூழ்நிலை தான் இன்றைக்கு நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கேள்வி:எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க வேண்டும் என ஒரு தரப்பும், மதுரையில் அமைக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள் கூறுகிறார்கள். அதுபற்றி?

தளபதி: எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்க வேண்டுமென்ற போட்டி மட்டுமல்ல. அவர்களுக்குள்ளே பல போட்டிகள் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் தினகரன் அணி, எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி என பலவாறு பிரிந்திருக்கிறது.

கேள்வி: பாரதீய ஜனதாவினர் மகாத்மா காந்தி அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்களே?

தளபதி: பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருக்கும், பன்முகத்தன்மை கொண்ட ஒரு பூங்கொத்தாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது என்று மகாத்மா காந்தி அவர்கள் தெளிவாக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை மிருக பலத்தை பெற்றிருக்கும் பி.ஜே.பி மற்றும் அதன் தலைவர் அமித் ஷா இழிவுபடுத்தும் விதமாக கருத்தை தெரிவித்திருக்கிறார் எனச் சொன்னால், அது உள்ளபடியே வேதனைக்குரியது. இதைத்தான் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்லாமல் திராவிடர் கழகம் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. திமுகழகத்தின் சார்பில் இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

கேள்வி: பிளாஸ்டிக் அரிசி கலப்படம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறதே?

தளபதி: தமிழகத்தை பொறுத்த வரையில் பாலில் கலப்படம் என்றார்கள், அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா என்றால் இல்லை. இதற்கிடையில் அரிசியிலே, சர்க்கரையிலே, முட்டையிலே கலப்படம் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது எனச் சொன்னால், ஆட்சியில் இருப்பவர்கள் இதனை உடனடியாக தடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>